பழம்பெருமைமிகு இந்தியா...2 கட்டடக் கலையின் சிறப்புகள்!

இந்தியாவின் பெருமைமிகு கட்டடக் கலை பற்றி...
Thanjavur Brihadeeswara Temple
தஞ்சை பெரிய கோயில்DIN
Published on
Updated on
3 min read

இந்தியாவின் பொறியியல் அல்லது கட்டடக் கலை சாதனைகள் மேற்கத்திய நாடுகளுக்குப் போட்டியாக அல்லது அதனை மிஞ்சுவதாகவே இருந்தன. பொறியாளர்களின் துல்லிய தன்மை, வடிவமைப்பு, அறிவு என பல கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள் நம்முடைய கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன.

உலகில் கட்டடக் கலையின் தலைமையிடமாக இந்தியா இருந்தது. எல்லோரா குகைக் கோயில்கள், சிந்துச் சமவெளி நாகரிகத்தின் நகர்ப்புறக் கட்டடங்கள் உள்பட பண்டைய காலத்தின் இந்தியக் கட்டடக்கலை தற்போதுள்ள நவீன பொறியாளர்களையே திகைக்கச் செய்பவையாக இருக்கின்றன.

இந்தியா முழுவதும் பண்டைய இந்தியர்களின் கட்டடக் கலை பரந்து விரிந்துள்ளது.

மகாபாரதத்தில் ஹஸ்தினாபுரம் நகரம், இந்திரனின் அரண்மனை என பண்டைய நூல்களிலும் கட்டடக்கலை பற்றி பல குறிப்புகள் உள்ளன. இந்தியாவின் கட்டடக்கலை சான்றுகளைப் பார்த்து வெளிநாட்டுப் பயணிகள் இன்னமும் வியக்கின்றனர்.

எல்லோரா குகை
எல்லோரா குகை

இன்றைய பாட்னா என்று அழைக்கப்படும் பாடலிபுத்திரத்தின் சிறப்பை நவீன நீராதாரங்களைக் கொண்ட ஒரு பரந்த நகரம் என்று கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் வர்ணித்துள்ளார்.

சூரிய சித்தாந்தம் மற்றும் பிரம்ம குப்தரின் பிரம்மபூத சித்தங்கா போன்ற நூல்களில் இருந்த ஆவணங்கள், கட்டடக் கலையில் இந்தியா சிறந்துவிளங்க பெரிதும் உதவின. ஈரான் அறிவியலாளர் அல் புரூனி இந்தியாவின் கட்டடக்கலையைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.

பூமியின் காந்தப் புலன்கள் மற்றும் சூரிய சக்தியைக் கருத்தில்கொண்டு உருவான 5,000 ஆண்டுகள் பழைமையான வாஸ்து சாஸ்திரம் நம் கட்டடக்கலை மரபுகளில் ஒன்று.

காற்றோட்டம், ஒளி மட்டுமின்றி இயற்கை பேரிடர்களைத் தாங்கும் வகையில் பெரும்பாலான கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரத்தில் உள்ள எல்லோரா குகைகள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், குஜராத்தில் உள்ள ராணி படிக்கிணறு, ஆந்திரத்தில் உள்ள லேபாக்ஷி தொங்கும் தூண்கள், தில்லி இரும்புத்தூண் ஆகியவை சுவாரசியத்துடன் தொழில்நுட்பத்தையும் கலைப் படைப்பாற்றலையும் நிரூபிக்கின்றன.

ஹரப்பா நாகரிகம்
ஹரப்பா நாகரிகம்

இந்திய துணைக் கண்டத்தின் ஆரம்ப கால நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகத்தில் நகர்ப்புற கட்டடங்கள் சிறப்பாக இருந்ததாக தொல்லியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்கள் ஒரு கட்டட வடிவிலே இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஒடிசாவில் உள்ள கோனார்க் சூரிய கோயில், கர்நாடகத்தின் ஹம்பி நகரம்(கர்நாடகம்), மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோயில்கள் என இந்திய கட்டக்கலையை மட்டுமின்றி சிற்பக்கலை, ஓவியக்கலையையும் இன்றும் பெருமையாக பறைசாற்றுகின்றன. இந்தியாவில் முகலாயர்களின் கட்டடங்களும் குறிப்பிடத்தக்கவை.

நாகரா என்ற வடக்கு பாணி, திராவிடம் என்ற தெற்கு பாணி, வெசரா என்ற கலப்பு பாணி என பல விதங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

கார்பன், எஃகு என்ற இரண்டையும் கொண்டு உலோகங்களைத் தயாரிப்பதில் இந்தியர்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர். இந்தியக் கட்டடங்கள் அழகானது மட்டுமின்றி இயற்கையுடன் பின்னிப்பிணைந்தவை. நவீன கட்டடங்கள் மூலமாக இந்தியா கட்டடக்கலையில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

இந்தியாவின் கட்டடக் கலைக்கு உலகளவில் பல சான்றுகள் இருந்தாலும் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் என்ற பிரகதீஸ்வரர் கோயில், உலகப் புகழ்பெற்றது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே (கிபி 1010) காவிரி தென்கரையோரம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

இந்த கோயில் கோபுரத்தின் கலசம் 80 டன் எடை கொண்டது. கோபுரத்தின் உயரம் 216 அடி. கோயிலில் உள்ள நந்தி சிலை, ஒரே கல்லால் செய்யப்பட்டது. இது 20 டன் எடை கொண்டது. இந்தியாவில் இரண்டாவது பெரிய நந்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோயில் உள்ள சிற்பங்களும் ஓவியங்களும் கல்வெட்டுகளும் சோழர் கால வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் கதைகளை எடுத்துரைக்கின்றன.

கோயிலின் முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், அம்மன் சன்னதி, சுப்ரமணியர் சன்னதி உள்ளிட்ட கோயிலைச் சுற்றியுள்ள சில பகுதிகள் பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில்

கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது.

இந்த கோயிலின் நிழல் தரையைத் தொடுவதில்லை என்று மக்களிடையே நம்பப்பட்டாலும் அது உண்மையில்லை.

2010 ஆம் ஆண்டு இந்த கோயிலில் 1000 ஆம் ஆண்டு நிறைவு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Summary

Evolution of Indian Architecture in Ancient India, Indian temples are unique architectural styles, intricate carvings, and rich spiritual significance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com