Ancient India: Mathematical and scientific discoveries
கணித மேதை ஆர்யபட்டர்

பழம்பெருமைமிகு இந்தியா...3 கணித, அறிவியல், வானியல் கண்டுபிடிப்புகள்!

பண்டைய இந்தியாவில் கணிதம் மற்றும் அறிவியல் துறையின் சிறப்புகள் பற்றி...
Published on

பழங்கால இந்தியாவில் அறிவியல், வானியல், கணிதம் ஆகிய துறைகளில் அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உதவி வருகின்றன.

அறிவியல்

ஐசக் நியூட்டன் 1966ல் மரத்தில் இருந்து ஆப்பிள் விழுவதைக் கவனித்து புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தார். இருப்பினும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்திய கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் 2-ம் பாஸ்கரா, புவியீர்ப்பு விசைக்கான அடித்தளத்தை அமைத்திருந்தார். பொருள்கள் தானாக விழுவதில்லை, பூமியின் சக்தியால் இழுக்கப்படுகின்றன என்று தெரிவித்தார். மைய நோக்கு விசை, மைய விலக்கு விசை, கோள்களின் சுற்றுப்பாதைகள் பற்றியும் ஆராய்ந்தார். புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி இயந்திரங்களைக் கண்டறிந்தார்.

5 ஆம் நூற்றாண்டில் ஆர்யபட்டர், பூமி கோள வடிவம் கொண்டது எனவும் சுற்றளவு 40,075 கிமீ எனவும் கண்டறிந்தார். கோள்களின் வடிவம் மற்றும் இயக்கம் பற்றியும் அறிந்தார்.

வைசேஷிகா பள்ளிகளின் நிறுவனர் முனிவர் ஆச்சார்யா கனத், பிரபஞ்சம் அணுக்களால் ஆனது என்ற கருத்தை முன்வைத்து அணுக் கோட்பாட்டுக்கான அடித்தளத்தை அமைத்து அதன் கருத்துகளை 'வைசேஷிக சூத்திரங்கள்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். பெர்மானு அணுக்கள் பிரிக்க முடியாதவை, அவை பொருளின் அடிப்படை கட்டுமானத் தொகுதிகள் என்று கூறினார். நவீன அறிவியலில் குறிப்பாக அணு இயற்பியலில் இவரது கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அணுக்கள் இணைந்து பொருள்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றிய நவீன அணுக் கோட்பாடு, வெப்பம், ஆற்றல், வேதியியல் வினைகள், வெப்ப இயக்கவியல், வேதியியல் மட்டுமன்றி தத்துவம் பற்றியும் ஆய்வு செய்துள்ளார். வைசேஷிக தத்துவத்தையும் உருவாக்கினார். இவரது ஆய்வுகள் இந்தியாவின் காலத்தைப் பற்றிய புரிதலையும் ஏற்படுத்தியது.

பிரம்மகுப்தர்
பிரம்மகுப்தர்

ஆர்யபட்டர், பிரம்மகுப்தர், வராகமிரர் ஆகியோர் சூரிய கடிகாரங்கள், நீர்க் கடிகாரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சூரிய, சந்திரனின் சுழற்சியைக் கொண்டு நேரத்தைக் கணக்கிட்டனர்.

வானியல்

இயற்பியலும் வானியலும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தியே அறிவியலாளர்கள் பல்வேறு கண்டுபுடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர்.

குறிப்பாக பண்டைய காலத்தில் கோயில்கள் வழிபடும் இடங்களாக மட்டுமன்றி வானியல், ஆன்மிகத்தை வெளிப்படுத்துபவையாக இருந்தன. மகாபாரதம், விஷ்ணு புராணம் ஆகிய நூல்களில் வானியல் பற்றிய பல குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

வானியல் நிகழ்வுகளைக் கண்காணிக்கும் வகையில் பல கோயில்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

சூரியனின் கதிர்களைப் படம்பிடிக்கும் வகையில் அப்போது வடிவமைக்கப்பட்ட சூரிய கோயில், புவிக்கும் பிரபஞ்சத்திற்கு இடையிலான தொடர்பை எடுத்துரைப்பதாகக் கூறப்படுகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் சூரிய கதிர்கள் ஊடுருவும் வகையில் கட்டப்பட்டுள்ளது ஒரு சான்று. திருவிதாங்கூர் மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயிலின் காலம் கிபி 10 ஆம் நூற்றாண்டு. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. கோயிலின் கோபுரம் 100 அடி கொண்டது. கோயிலின் கர்பக்கிரகம் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும்.

பத்மநாப சுவாமி கோயில்
பத்மநாப சுவாமி கோயில்

ஜெய்ப்பூரில் மகாராஜா சிங் கட்டிய ஜந்தர் மந்தர், 19 வானியல் கருவிகள் மற்றும் கல் சூரிய கடிகாரத்தைக் கொண்டு ஒரு சிறந்த வானியல் ஆய்வகமாக இன்றும் இருக்கிறது. சூரிய பாதைகள், கோள்களின் பாதைகள், நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவுகிறது.

கெப்ளர், கோபர்நிகஸ் ஆகிய விஞ்ஞானிகள் புவி தொடர்பான வானியல் கோட்பாடுகளை கண்டுபிடித்தனர். ஆர்யபட்டர், 2-ம் பாஸ்கரா ஆகியோரும் கிரக நிலைகள் பற்றி ஆய்வு செய்துள்ளனர்.

ஆர்யபட்டர், பூமி சூரியனை சுற்றிவர 365.358 நாள்கள் எனக் கண்டறிந்து சூரிய, சந்திர கிரகணம் பற்றியும் கண்டறிந்தார். பூஜ்யத்தை கண்டுபிடித்த ஆர்யபட்டர், இடமதிப்பு குறியீடுகள் அல்லது தசம குறியீடுகள், 'பை(pi) மதிப்பு, சைன்(sin) செயல்பாடுகள் பற்றியும் கண்டறிந்தார்.

கணித மேதை மற்றும் வானியல் அறிஞர் வராகமிகிரர் வானியலுடன் சோதிடத்தையும் இணைத்து, தனது 'பிருஹத் சம்ஹிதை' என்ற நூலில் கிரகணங்கள், கோள்களின் இயக்கம், வாஸ்து சாஸ்திரம், ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள் எனப் பலவற்றைப் பற்றி எடுத்துரைத்துள்ளார்.

பிரம்மகுப்தரின் பிரம்மபுத்த சித்தாந்தம் நூலும் கோள்களின் இயக்கம், சூரியன் நீள்வட்ட பாதை மற்றும் பூமி சூரியனைச் சுற்றும் நாள் 365.2588 நாள்கள் ஆகிய குறிப்புகளை கொண்டிருக்கிறது. கோள்களின் நிலையை அறிய பல சூத்திரங்களும் இதில் அடங்கும்.

பண்டைய இந்திய அறிஞர்கள், விவசாயம், கட்டடக் கலை, வானியல் எனப் பல துறைகளில் அறிவியலைப் பயன்படுத்தினர். அதுமட்டுமன்றி சடங்குகளுக்கான நேரத்தைக் கணக்கிட பஞ்சாங்கத்தை உருவாக்கினர். இவ்வாறு வானியல் கண்டுபிடிப்புகள் அறிவியலையும் ஆன்மிகத்தையும் ஒருங்கிணைத்துள்ளன.

கணிதம்

இந்தியாவில் பல நவீன கணிதக் கோட்பாடுகள், குறியீடுகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை என்பது தெரியுமா? பூஜ்யத்தில் இருந்து கணினி அறிவியல் வரை பண்டைய இந்திய கணிதவியலாளர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர்.

கி.பி. 595 ஆம் ஆண்டில் செப்புத்தகடுகளில் பூஜ்யம் மற்றும் தசம முறையில் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளதற்கான சான்றுகள் இருக்கின்றன. இதுவே கணிதப் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

கூட்டல், கழித்தல், வர்க்கம், கணம், முக்கோணவியல், சமன்பாடுகள் போன்ற கணித செயல்பாடுகளைக் கண்டறிந்த ஆர்யபட்டர், தனது நூலில் இதனை விரிவாக விளக்கியுள்ளார். இவை கணினி மற்றும் தரவு அறிவியலில் மிகப்பெரிய தாக்கத்தை இப்போதும் ஏற்படுத்தி வருகின்றன.

கி.பி. 628ல் பூஜ்யம் மற்றும் எதிர்மறை எண்கள் குறித்து பிரம்மகுப்தர் ஆய்வு செய்தார். பூஜ்யத்துடன் கூடிய எண்கணித செயல்பாடுகளை வகுத்தார். பூஜ்யத்தால் ஒரு எண்ணை வகுத்தால் கிடைக்கும் முடிவுகள், எண்கணித விதிகள், சமன்பாடுகள், வர்க்க மூலங்கள் ஆகியவை பற்றி அறிந்தார். இது கணிதத்தில் பல நூற்றாண்டுகளாக தாக்கத்தை ஏற்படுத்தின.

கி.பி. 1150ல் பாஸ்கராச்சார்யா, பிரம்மகுப்தரின் பல கருத்துகளை செம்மைப்படுத்தி முடிவுகளை வெளியிட்டதுடன் நுண்கணிதம், முக்கோணவியல் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டார்.

முன்னதாக கி.மு. 500ல் ஆச்சார்ய பிங்கலா நவீன கணினிகளை இயக்கும் பைனரி எண்கள் பற்றி கண்டறிந்து தனது நூலான சந்தா சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரது கண்டுபிடிப்புகள் இன்றைய நவீன கணினி அறிவியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கணிதத்தில் எண்களின் முடிவிலா தொடர் மற்றும் முக்கோணவியல் பற்றி அறிந்த கணிதவியலாளர் சங்கமக்ரம மாதவா, கேரள கணிதப் பள்ளியை நிறுவி அது 1350-1425 வரை பெரிதும் பேசப்பட்டது. தற்போதும் இது கணித ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது. சைன்(sine) மற்றும் கொசைன்(cos) செயல்பாடுகள் பற்றியும் பை(pi) மதிப்பு 2.34146804729 என மதிப்பிட்டு கணிதத்தில் அதிர்வை ஏற்படுத்தினார் எனலாம். எண் கணித வரிசைகள் உள்ளிட்ட சமன்பாடுகளையும் வரையறுத்துள்ளார். இவருடைய கணித கோட்பாடுகள் பல வானியல் பற்றியும் கணிக்க பெரிதும் உதவின.

மேலும் பண்டைய இந்தியாவில் தசம எண்கள் முதல் எண்கணித செயல்பாடுகள் வரையிலான கணித கண்டுபிடிப்புகள் பல இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் பல துறைகளில் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Summary

Ancient India: Mathematical and scientific discoveries: Ancient India made significant contributions to mathematics and science, notably with the invention of the decimal system and the concept of zero

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com