

'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இன்று (நவ. 7) தொடங்கியுள்ளன.
'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழாவை நாடு தழுவிய அளவில் நவம்பர் 2025 தொடங்கி ஓராண்டு முழுவதும் கொண்டாட சென்ற மாதம் (அக்டோபர் 1-இல்) ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுபற்றி, ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் ஓராண்டுத் தொடர் நிகழ்வுகளைக் கொண்டாட விரிவான செயல் திட்டங்களுக்கான (Plan of Action, 18 Pages) பரிந்துரைகளை வழங்கியது. இதில் குறிப்பிட உரிய குதர்க்கமான இரண்டு அம்சங்களைச் சுருக்கமாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
2025 நவம்பர் 7 முதல் தொடங்கும் வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளை நினைவுகூறும் ஓராண்டு கால நிகழ்ச்சித் திட்டத்தின் 4 கட்டங்கள் இதோ:
முதற் கட்டம்: 7-14 நவம்பர் 2025; இரண்டாவது கட்டம்: 26 ஜனவரி, 2026 (குடியரசு தினத்தைச் சுற்றி); மூன்றாவது கட்டம்: 7-15 ஆகஸ்ட், 2026 (இல்லந்தோறும், மூவண்ணக் கொடியுடன்); நான்காவது, நிறைவுக்கட்டம்: நவம்பர் 1 முதல் 7 வரை, 2026. முதற்கட்டமான (நவம்பர் 7 முதல் 14 வரையான நிகழ்ச்சித் திட்டத்தின்படி) இன்று (நவம்பர் 7-இல்), தில்லி இந்திரா காந்தி திடலில் நடைபெற்ற தேசிய நிகழ்ச்சியில் பிரதமர் தலைமை தாங்க, நாடு முழுவதும் வந்தே மாதரம் பாடப்பட்டுள்ளது.
‘’பிரதமர் நிகழ்ச்சியின் நேரடி இணைப்பு உள்ளூர் நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது (தொலைக்காட்சி இணைப்பு எம்.ஓ.சி. சமூக கையாளுதலில் பகிரப்படும்); குடிமக்கள், குடியிருப்புச் சங்கங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், காவல்துறையினர், மருத்துவர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்கள், கடைக்காரர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பங்கேற்புடன் 'வந்தே மாதரம்' பாடல் பொது இடங்களில் பரப்பப்படும் என்றும் வந்தே மாதரம் பாடலின் முழுப் பதிப்பு பாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாடும்போது பாடலின் ஆடியோ இசைக்கப்படும்; பாடல் வரிகள் திரையில் தோன்றும்; பங்கேற்பாளர்களுக்குப் பாடல்களின் அச்சுப் பிரதிகள் வழங்கப்படும்; மக்கள் நின்று பாடவேண்டும்’’ என்ற விவரங்களும் வழங்கி, வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தை அணுகத் தொடர்பும் (Link) வழங்கப்பட்டுள்ளது.
அதன்படியே, சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சோ்ந்த மக்களும் பங்கேற்கும் வகையில் பொது இடங்களில் நிகழ்ச்சியுடன் வந்தே மாதரம் பாடலின் முழுப் பதிப்பும் பாடப்பட்டு வருகிறது.
பங்கிம் சந்திர சாட்டர்ஜி (ஜூன் 27, 1838 – ஏப்ரல் 8,1894) எழுதிய வந்தே மாதரம் பாடல், நம் நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்தில் நாட்டுப்பற்று மிகுந்திருந்த விடுதலைப் போராளிகள் அனைவரின் தீரமுழக்க கீதமாக விளங்கியதை யாரும் மறுப்பதற்கில்லை. “உண்மையில், வங்காளத்தைப் பற்றி எழுதப்பட்ட வந்தே மாதரம், பழைய, புதிய தேசியவாதிகள் ஆகிய இருதரப்பினரிடையே அகில இந்திய செல்வாக்குப் பெற்றது. மாகாண மொழியில் எழுதப்பட்ட ஒரு பாடல், ஒரு தேசிய முழக்கமாக மாறியதற்கும் பெரும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டை உறுதிப்படுத்தும் சக்தியாக செயல்படுவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் - வந்தே மாதரம் - இங்கே உள்ளது” (எஸ்.கே. போஸ் 1974).
ஆனால், நவம்பர் 7 எவ்வகையில், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வந்தே மாதரம் உருவான நாள் எனக் கணக்கிட்டு, வந்தே மாதரம்-150 கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டன என்று தரவுகளின் மூலம் அறிய இயலவில்லை. ‘வந்தே மாதரம் 150’ என ஒன்றிய பண்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செயல்திட்டக் குறிப்பில் ‘வந்தே மாதரம் பின்புலம்’ (Vande Mataram: Background) என இடம்பெற்றுள்ள குறிப்புரையில், இப்பாடல், தொடர் வடிவில் வெளியிடப்பட்ட பங்கிம் சந்திரரின் நாவல் ‘ஆனந்த மடம்’ என்ற நாவலில் இடம்பெற்றதாகவும் ‘வந்தே மாதரம்’ 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி அக்ஷய் நவமி அன்று எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது” என்றும் (சந்தேகமாகவே) குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், வந்தே மாதரம் பாடலை முதன்முதலாக 1896 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசின் கொல்கத்தா அமர்வில் பாடினார். அந்த நிகழ்வின் பின்வந்த காலங்களில் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளை (மட்டும்) பாடுவது காங்கிரஸ் கூட்டங்களில் வழக்கமாகிவிட்டது” என்றும் தெரியப்படுத்தியுள்ளது.
மேற்கண்ட பின்புலக்குறிப்பில் கவனிக்க உரிய இரண்டு செய்திகள்:
1. வந்தே மாதரம் பாடல் 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது என்ற செய்தி. ஆக, வந்தே மாதரம் பாடல் எப்போது எழுதப்பட்டது என ஆதாரப்பூர்வமான, உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படத் தக்க தரவுகள் இல்லை.
பிறகெப்படி நவம்பர் 7, 2025, வந்தே மாதரம் 150 ஆவது ஆண்டுத் தொடக்கமாகும்? இந்த கேள்வி எழுவது நியாயமாகிறதல்லவா?
நாட்டு விடுதலைக்குப் பின் தேசிய கீதம் / தேசியப் பாடல் என்ற பொருள் குறித்து முதன்முதலாக, ஒன்றிய அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் நவம்பர் 1951-இல் (முதற் பதிப்பு) வெளியிட்ட, நமது தேசியப் பாடல்கள் (Our National Songs) எனும் வெளியீட்டில் (அத் 1), “இரண்டு பாடல்களுள் வந்தே மாதரம் பழையது. 1882 ஆம் ஆண்டு வெளிவந்த பங்கிம் சந்திரரின் 'ஆனந்த மடம்' என்ற நாவலில் இது காணப்படுகிறது. எவ்வாறாயினும், அதன் தோற்றம் பதினெட்டாம் நூற்றாண்டின் எழுபதுகளுக்கு முற்பட்டது. 1896 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் நமது தேசியப் பாடல்கள் பாடப்பட்டன’’ என்ற மேலோட்டமான விவரம் மட்டுமே வந்தே மாதரத்தின் தோற்றம் குறித்து அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தகவல் - ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு, 1974-இல் எஸ்.கே. போஸ் எழுதி வெளியிட்ட ‘பங்கிம் சந்திர சாட்டர்ஜி’ வாழ்க்கை வரலாற்று நூலில், “அவர் இறந்து சரியாக பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, வங்காளப் பிரிவினையை எதிர்த்த வலிமையான இயக்கம் வந்தே மாதரம் பாடலுக்குப் புதுச் செலாவணி அளித்தது. ஆனந்த மடம் நாவலாசிரியர் படிப்படியாக மக்களின் இதயத்தில், ‘இந்தியாவின் தேசியவாத தீர்க்கதரிசி’யின் நிலையைப் பெற ஆரம்பித்தார். ஒரு தீவிர தேசபக்தி உணர்வு வெடிப்பின் பின்னணியில்தான் சாட்டர்ஜி வந்தே மாதரத்தை எழுதினார். பாடல் எப்போது இயற்றப்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அனைத்து ஆதாரங்களிலிருந்தும் இது 1875 இன் பிற்பகுதியில் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது’’ என ஜி.சி. ராய் எழுதிய வந்தே மாதரம் (வெளியீடு: ஜுகாந்தர், ஆகஸ்ட் 15, 1959) என்ற நூலொன்றைத் தனது கூற்றுக்குச் சான்று காட்டி, போஸ் தன் நூலில் குறிப்பு வைத்துள்ளார். தகவல் - ஒலிபரப்பு அமைச்சகத்தின் முன் குறிப்பிட்டுள்ள இரு வெளியீடுகளும் நவம்பர் 7, 1875 குறித்து எதுவும் தெளிவாகக் கூறவில்லை.
அடுத்ததாக, வந்தே மாதரம் (தகவல்) [Vande Mataram (Sanskrit Document Information, sanskritdocuments.org] என்ற செப்டம்பர் 11, 2017 பதிப்பில், சிவராமு(1937- ) எழுதிய "ஒரு பாடலின் கதை: பரவசம் மற்றும் வேதனை" என்ற ஆங்கில நூலிலிருந்து [1972, வெளியீட்டாளர்: சாகித்ய சிந்து; விநியோகஸ்தர்கள்: ராஷ்ட்ரோத்தான சாகித்ய, மொழி: ஆங்கிலம், பக்கங்கள்: 166] சில பகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், பாடல் எப்படி இயற்றப்பட்டது? என்ற பகுதியில் 'வந்தே மாதரம்‘ ஆனந்த மடத்தில் மலர்ந்தது உண்மைதான்; ஆனால் அது ஆனந்த மடம் எழுதப்படுவதற்கு முன்பே இயற்றப்பட்டது. நாட்டின் விடுதலைக்கான இயக்கத்தில் மிகவும் சக்திவாய்ந்த உத்வேக நெம்புகோலாகச் செயல்பட்ட அற்புதமான பார்வையை பங்கிம் எவ்வாறு கண்டார்? அந்த பார்வையை அவர் எவ்வாறு அழியாததாக ஆக்கினார் என்பது பாடலில் முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் 1875 ஆம் ஆண்டில், கொல்கத்தாவின் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து தப்பிக்க பங்கிம் விடுமுறை எடுத்தபோது ஒரு நல்ல தருணம் வந்தது. அவர் தனது சொந்த ஊரான கந்தலாபாடாவுக்குச் செல்லும் ரயிலில் ஏறினார். அப்போது பிறந்தது அப்பாடல்’’ என்ற விவரம் அறியக் கிடைக்கிறது. நவம்பர் 7 குறித்த செய்தியில்லையே!
பாடலின் பிறப்பு குறித்த முன் குறிப்பிட்ட நூலின் அதே கருத்து, ஆச்சார்ய ஜே.பி. கிருபளானி முன்னுரையுடன், 1977 இல் வெளியிடப்பட்ட சாது பேராசிரியர் வி. ரங்கராஜன் எழுதிய ‘வந்தே மாதரம்’ எனும் ஆங்கில நூலில், (வெளியீடு: சகோதரி நிவேதிதா அகாதெமி, சென்னை) கீழ்க்கண்டவாறு எதிரொலிக்கிறது. ‘’ஆனந்த மடம் பிறப்பதற்கு முன்பே வந்தே மாதரம் இயற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டில் ஒரு விடுமுறையில், கொல்கத்தா நகரில் உத்தியோகபூர்வ வாழ்க்கையின் சலிப்பிலிருந்து தப்பிப்பதற்காக பங்கிம் தனது சொந்த ஊரான கந்தலாபாடாவுக்கு ரயிலில் ஏறி வந்தபோது இது நடந்தது’’ என்ற தகவல்தான் ‘பாடலின் பிறப்பு’ (Birth of the Song) என்ற குறுந்தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
பின்னர், வந்தே மாதரம் குறித்து விரிவாக (210 பக்கங்கள்) படைத்துள்ள அமரேந்திர லக்ஷ்மண் காட்கில், வந்தே மாதரம் (பாடல் வற்றாத பாடல்) என்ற பெயரில் எழுதி, வந்தே மாதரம் நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக ஏப்ரல், 1978-இல் வந்த நூலில் ‘’வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்ட சரியான தேதி சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. 1880 மற்றும் 1882-க்கு இடையில் பங்கிம் சந்திரரின் பிரபலமான நாவலான ‘ஆனந்த மடம்’, வங்க தர்ஷன் இதழில் தொடராக வெளியிடப்பட்டது. கடைசிப் பகுதி ஜூன் 1882 இல் முடிவுற்றதும் இந்த நாவல் 1883 ஆம் ஆண்டில் முதல் முறையாக புத்தக வடிவில் வாசகர்களைச் சென்றடைந்தது. இந்த பாடல் 1874 ஆம் ஆண்டிலேயே இயற்றப்பட்டது என்று ஆராய்ச்சி நிறுவியுள்ளது. இவ்வாறு, பாடலின் பிறப்புக்கும் நாவலில் சேர்ப்பதற்கும் இடையே ஆறு வருட இடைவெளி உள்ளது’’ என்ற செய்திகளும் நமக்குக் கிடைக்கிறது.
பிறகெப்படி நவம்பர் 7, 1875 கதை தோன்றியது? தக்க ஆதாரங்கள் ஏதும் தேடல்களுக்கு எட்டிய தொலைவில் காணோம். இறுதியாக, புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் சவ்யசாச்சி பட்டாச்சார்யா, வந்தே மாதரம் பாடலின் வரலாறு குறித்து எழுதிய சிறப்பு நூலிலும் ‘’1870-களின் முற்பகுதியில் எழுதப்பட்ட அசல் பதிப்பு, சில ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்தது. 1881 ஆம் ஆண்டில், இது ஆனந்த மடம் நாவலில் சேர்க்கப்பட்டது” என்ற தரவே கிடைக்கிறது (பார்க்க: வந்தே மாதரம் ஒரு பாடலின் வாழ்க்கை வரலாறு , சவ்யசாச்சி பட்டாச்சார்யா, பெங்குயின் புக்ஸ், 2003).
வந்தே மாதரம் நவம்பர் 7, 1875 தொடர்பை யாரும் ‘கண்டா வரச் சொல்லுங்க’.
2. ஒன்றிய அரசு பண்பாட்டுத் துறை, நவம்பர் 2025-இல் வெளியிட்டுள்ள ‘வந்தே மாதரம் 150’ செயல் திட்ட அறிவிப்பில், இந்திய அரசமைப்புச் சபை (Constituent Assembly of India) ஜனவரி 1950-இல் எடுத்து அறிவித்து, இன்று வரை நடைமுறையிலுள்ளதொரு தீர்மானத்தை ஓசையில்லாமல், மீறும் வகையில், ஒரு குதர்க்கத்தை நிகழ்த்த முற்பட்டுள்ளதை யாருமே கண்டுகொண்டதாகத் தெரியவில்லை என்பது மிகுந்த ஆச்சரியமே.
பங்கிம் சந்திர சாட்டர்ஜின் வந்தே மாதரம் மூலப் பாடல் ஆறு பத்திகள் / சரணங்கள் (Stanzas) கொண்டது. இந்திய விடுதலைப் போரின் உக்கிரம் உயர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஆங்கில ஆதிக்க எதிர்ப்பில் நாட்டு மக்கள் அனைவரது ஒற்றுமையும் ஒத்துழைப்பும் எவ்வகையிலும் இடையூறுக்குள்ளாகிவிடக் கூடாது என்ற கவனமும் கவலையும் அண்ணல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு இருந்தது. அந்தச் சமயத்தில் வந்தே மாதரம் பாடல் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத இஸ்லாமியக் கோட்பாட்டிற்கு உடன்படா நிலையில் இருப்பதால் 1930-களில் அந்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பு வலுத்து பாடலின் ஆசிரியர் கடுமையான கண்டனத்திற்குள்ளானார். அவரது ‘ஆனந்த மடம்’ மற்றும் ‘ராஜ்சான்ஹா’ நாவல்களைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. ஆட்சேபனைகளுக்கு அரசியலமைப்புச் சபைத் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், பதிலளித்தார் "பாடல் உருவ வழிபாட்டை வலியுறுத்தவில்லை" என்றும், "துர்கா எந்த சிலையையும் குறிக்கவில்லை, ஆனால், தாய் நாட்டிற்கு மற்றொரு பெயர்" என்றும் கூறினார். இது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதானது.
இவற்றால் வந்தே மாதரம் குறித்த சூடான சர்ச்சை நீடித்து வந்தது. வெளிப்படையாகச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன், அக்டோபர் 1937-இல், காங்கிரஸ் செயற்குழு இந்த விஷயத்தை அதிகாரப்பூர்வமாகக் கையிலெடுத்து, வந்தே மாதரம் பாடலின் இரண்டு சரணங்களை (Stanza) மட்டுமே பாட பரிந்துரைத்தது. இந்த முடிவை எடுக்கக் காங்கிரஸ் செயற்குழு அமைத்த கமிட்டிக்கு கவிஞர் தாகூர் அக்டோபர் 26, 1937 தேதியிட்டு நேருவுக்கு எழுதிய கடிதத்தில், பாடலின் முதல் இரண்டு சரணங்களைப் பாடுமாறு பரிந்துரைத்தார் என்பதும் குறிப்பாக அறியப்பட வேண்டும். இதுதான்- வந்தே மாதரம் பாடலி்ன் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே (முழுப்பாடலும் அல்ல) - அரசியலமைப்பு சபையால் வந்தே மாதரம் பாடல் எனக் குறிப்பிடப்படுவது.
அந்த முதல் இரண்டு பத்திகளுக்கே தேசியப் பாடல் (National Song) என்ற அங்கீகாரம். இது தெளிவாக அறிந்துகொள்ளப்பட உரியது.
(சுருக்கப்பட்ட வந்தே மாதரத்தையும் முகம்மது அலி ஜின்னா தலைமையிலிருந்த முஸ்லிம் லீக் இறுதி வரை ஏற்றுக்கொள்ளவேயில்லை. அதுகுறித்து விரிவாகத் தற்போது இங்கு விளக்க அவசியமில்லை).
ஆனால், 1930களிலிருந்து ஜனவரி 1950-இல் தேசிய கீதம், தேசியப் பாடல் குறித்து அரசியல் அமைப்புச் சபையில், தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அறிவிப்புச் செய்து இன்று வரை வந்தே மாதரம் பாடலைப் பொருத்து நடைமுறையில் இருப்பது அதன் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே.
அப்பட்டமாக, ஓசையில்லாமல், இதனை முற்றிலும் மீறும் வண்ணம், ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தைப் பாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதோடு பாடலில் தவிர்க்கப்பட்ட நான்கு பத்திகளையும் இணைத்துப் பாடத் தொடர்பும் (link) வழங்கியுள்ளதே!
‘’சுதந்திரமாக இருப்பதற்கான விலை எப்போதும் விழிப்போடிருப்பதே’’.
கொசுறு: உலக நாடுகளில் இரண்டு தேசிய கீதங்கள் கொண்ட இரண்டு நாடுகள்: நியூசிலாந்து, டென்மார்க். நம் பெருமை: உலக நாடுகளிலேயே ஒரு தேசிய கீதமும் (National Anthem ஜன கண மன..), ஒரு தேசியப் பாடலும் ( National Song, வந்தே மாதரம் ) கொண்டிருக்கும் ஒரே நாடு, இந்தியா.
வாழ்க பாரதத் திருநாடு.
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]
இதையும் படிக்க | உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.