

பண்டைத் தமிழகத்தில் பெருநில மன்னர்களாக சேரர், சோழர், பாண்டியர் ஆண்டுவந்தனர் என்பது நாம் அறிந்த வரலாறு. இவர்களில் சோழர்களின் பெயரை வரலாற்றில் நிலைநிறுத்தியுள்ள பெருமை தஞ்சைப் பெரிய கோயிலையும், அதனைக் கட்டிய இராஜ இராஜ சோழ மன்னனையும் சேரும்.
உலக அளவில் தஞ்சைப் பெரிய கோயில் ஒரு கட்டடப் பொறியியல் அதிசயமே. 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டு பெரிய கோயில் இன்றளவும் நிலைகுலையாமல் நிற்கிறது. தஞ்சைப் பெரிய கோயில் ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். பெரிய கோயிலில் கோபுரம், விமானம், கருவறை, லிங்கம், நந்தி, சுற்றுச்சுவர் அனைத்துமே நம்மை வியக்க வைப்பவைதான்.
செந்நிழல்
தஞ்சைப் பெரிய கோயில் கோபுர விமானத்தின் நிழல் தரையில் விழாது என்று முன்பு சொல்லி வந்தனர். பிறகு, இல்லை இல்லை நிழல் தரையில் விழுகிறது என்றும் சொன்னார்கள். இந்தச் சூழலில்தான் பெருந்தச்சன் முனைவர் தென்னன் மெய்ம்மன் எழுதியிருக்கும் ‘தஞ்சைப் பெரிய கோயில் – 50 (வேலைத்திட்டம்) என்னும் நூல் வாசிக்கக் கிடைத்தது.
இந்நூலில், செந்நிழல் என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரையில் தஞ்சைப் பெரிய கோயில் கோபுர விமானத்தின் நிழல் தரையில் விழுவது பற்றிய புதிய விளக்கம் தரப்பட்டுள்ளது. காலையில் விமானத்தின் நிழல் மேற்கில் விழும், விழுகிறது; மாலையில் கிழக்கில் விழும், விழுகிறது.
ஆண்டு முழுவதும் எடுத்துக்கொண்டால் உயரமான எந்த ஒரு பொருளின் நிழலும், மேற்கிலும் கிழக்கிலும் விழும் அதேவேளையில் ஆறு மாதம் வடக்கிலும், அடுத்த ஆறு மாதம் தெற்கிலும் சாய்ந்து விழும். காரணம் கதிரவன் வடக்கிலும், தெற்கிலும் நகர்ந்துகொண்டிருக்கிறது. உண்மையில் கதிரவன் நகர்வதில்லை. பூமிதான் கதிரவனைச் சுற்றி வருகிறது. பூமியின் சுழற்சி அச்சு 23 டிகிரி 17 மினுட் சரிந்திருப்பதாலும், பூமி நீள்வட்ட பாதையில் சுற்றிவருவதாலும், கதிரவன் வடக்கும் தெற்குமாக மாறிமாறி அலைவதுபோல தோன்றுகிறது. அதன் காரணமாக நிழலும் வடக்கிலும், தெற்கிலும் மாறிமாறி விழுகிறது.
தஞ்சைப் பெரிய கோயில் கோபுர விமானம் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்றால், கதிரவன் தெற்கில் இருக்கும்போது விமானத்தின் நிழல் வடக்கில் தரையில் விழுகிறது. ஆனால் கதிரவன் வடக்கில் இருக்கும்போது விமானத்தின் நிழல் தெற்கில் தரையில் விழுவதில்லை.
"ஆண்டு முழுவதும் தொடர்ந்து கண்காணித்தாலும் விமானத்தின் நிழல் தெற்கில் தரையில் விழாது. அதாவது விமானத்தின் உயரத்திற்கும் தரையில் அதன் அகலத்திற்குமான அளவும், அதன் உறவும் அப்படி ஒரு நிழலின் இயங்கு முறையைக் கணக்கிட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. தஞ்சைப் பெரிய கோயிலின் விமான உயரத்தை15 கூறு செய்து, அதன் தரைமட்ட மைய வெட்டுப்புள்ளியில் இருந்து நண்பகல் அரைநாள் வேளையில் வடக்கில் 8 கூறு வரை நிழல் செல்லும். அதாவது எட்டாவது கூறு தை மாதம் ஆகும். பிறகு உள்வாங்கி நடுவில் நிழல் அற்று வடக்கில் 4 கூறு ஆடி மாதம் தொடங்கும் முன்பு வரை செல்லும். பிறகு திரும்பும். அவ்வாறு தெற்கில் விலகும் நிழல் கருவறையின் அகலக் கணக்குக்குக் கட்டுப்பட்டு வெளியில் செல்லாமல் திரும்பிவிடுகிறது. இதுதான் பெரிய கோயில் நிழல் நுட்பம். எவரும் நேரில் பார்த்து இதனைத் தெரிந்துகொள்ளலாம்.
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்கள் கதிரவனின் வடசெலவு. அதாவது வடக்கு நோக்கிய பயணம். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தென் செலவு. அதாவது கதிரவனின் தெற்கு நோக்கிய பயணம். மார்கழி கடைசி நாள் எல்லையாக நிழல் 8 கூறு தொட்டுத் தை முதல் நாளில் கதிரவன் தெற்கில் திரும்பும், நிழல் வடக்கில் விழும்.”
இப்படியாகப் பெரிய கோயில் விமானத்தின் நிழல் தை முதல் நாளில் வடக்கில் திரும்புகிறது. அந்தத் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தலைநாள். அதாவது தை மாதமே தமிழ்ப் புத்தாண்டு ஆகும். ஆண்டின் முதல் நாளை அறிவித்து, அதைப் பெரிய திருவிழாக் கொண்டாடி இருக்கிறது தஞ்சைப் பெரிய கோயில். நிழலின் இந்த விதியைப் பின்பற்றி இருக்கிறது. (பக்கம் 49, ‘தஞ்சைப் பெரிய கோயில் – 50).
இப்படியாகக் கதிரவன் வடக்கில் இருக்கும்போதும் தஞ்சைப் பெரிய கோயில் விமானத்தின் நிழல் தெற்கில் தரையில் விழுவதில்லை என்பதுதான் வெகுமக்களிடம், கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்பதாகப் பரவியிருக்கிறது. அது பிழையானது என்று சொல்லிக் கொண்டிருக்கும் பல அறிஞர் பெருமக்களுக்கும், தெற்கில் நிழல் தரையில் விழுவதில்லை என்னும் உண்மை தெரிந்திருக்கவில்லை. தமிழ்ப் புத்தாண்டின் தலைநாள் தை முதல் நாளே என்றும் இந்நூல் பேசுகிறது.
“ஒரு திறஞ்சாரா அரை நாள் அவையத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிரிட்டுத்
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கொப்ப மனைவகுத்து”
(நெடுநல்வாடை)
மன்னர் மாளிகைக்கு ஈடாகப் பாண்டியன் நெடுஞ்செழியனின் பட்டத்தரசி பாண்டிமாதேவிக்கும் மாளிகை கட்டியதை இப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன. ஓர் ஆண்டில் குறிப்பிட்ட நாளில் நண்பகலில் உயரமாக நாட்டப்பட்ட கோலின் நிழல் தெற்கிலும், வடக்கிலும் சாயாமல் கோலின் அடியிலேயே அடங்கி நிற்கும். அந்த நாள் நிழலில்லா நாள் என்று அறிவியலாளர்கள் அழைக்கிறார்கள். அந்த நிழலைத்தான் செந்நிழல் என்றும், செங்கோலின் நிழல் என்றும், அறத்தின் அளவுகோல் என்றும் மூவேந்தர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த நிழல் சரியாக இருந்தால் வானவீதியின் வெண்குடை சரியாக இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். இந்த உலகை ஒரு குடையின் கீழ் ஒரு மொழி கொண்டு நெடுங்காலம் ஆட்சி செய்த தென்பாண்டியர்களே, இவ்வகை அறிவில் முன்னோடிகள் என்று தெரிகிறது (பக்கம் 54).
“தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
உண்பவை நாழி உடுப்பவை இரண்டே”
(புறநானூறு- 189)
இதில் தெண்கடல் என்றால் தென் திசையின் கடல் இல்லை. உலகைச் சுற்றிவளைத்த கடல் நீர்ப்பரப்பில் ஓடிய நீளத்திற்கு நட்ட நடுவில் சுற்றோடு சுற்றாக ஒரு ஓடுநீர் வளையம் அதன் வளைந்து செல்லும் அகலம். இதனைப் புரிந்துகொள்ள தெண்கண் உதவிசெய்யும். பறைக்கருவியில் வலக்கண் இருக்கிறது, இடக்கண் இருக்கிறது. இரண்டும் வேறு அளவுகளில் அதிர்வை ஏற்படுத்தும். இரண்டுக்கும் இடையில் தானாகவே ஒரு தொடர் அதிர்வு ஏற்படும். அதற்குத் தெண்கண் என்று பெயர். அது புரியாத பெண் தெங்கணை, புரியாத ஆண் தெங்கணா வெட்டி. (பக்கம்-54)
இதுபோன்ற தரவுகள் இந்நூலில் பரவலாகக் காணக் கிடைக்கின்றன. கண்ணதாசன், வாலி வரிகளையும்கூட ஆசிரியர் சரியான இடங்களில் எடுத்தாள்கிறார்.
“நெஞ்சே தெரியுமா? அன்றொரு நாளிலே!
நிழலாடும் விதியோடும் ஆடினானே! அன்று
நிழலாடும் விதியோடும் ஆடினானே!
என்றும் கண்ணில் நின்றாடச் சொல்லடி”
இந்த இசை ஓவியத்தைத் தீட்டியவர் கண்ணதாசன். இவருக்கு நிழலாடும் விதி தெரிந்திருந்ததா? அது கண்ணில் நின்றாடும் என்று அறிந்துவைத்திருந்தாரா? என்னும் கேள்விகளை எழுப்பும்போது, திரைப்பாடல்களையும்கூட வேறு கோணத்தில் பார்க்க நம்மைத் தூண்டுகிறார், நூலாசிரியர் தென்னன் மெய்ம்மன் (பக்கம் – 59).
பாண்டுகம்பளம்
இந்திரன் அமர்ந்திருக்கும் இருக்கையில் விரிக்கப்பட்டிருக்கும் வெண்ணிற கம்பளம்தான் பாண்டுகம்பளம் என்பதாக மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
“பழுமரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்
இழுமென் சும்மை இடையின்று ஒலிப்ப
ஈண்டுநீர் ஞாலத்து இவண் செயல்
இந்திரன் பாண்டுகம்பளம் துலக்கியது”
(மணிமேகலை)
பூவுலகில் பெரிய அளவில் அறம் செய்பவர்கள் தோன்றும்போதும், அறம் தவறும்போதும் இந்திரனின் பாண்டுகம்பளம் அசையும். பாண்டுகம்பளம் என்பதை விண்ணில் தோன்றும் வெண்படலம் என்றும் கொள்ளலாம். பாண்டுகம்பளம் பார்ப்பதும் ஒருவித கலையாகப் பண்டைத் தமிழகத்தில் இருந்திருக்கிறது.
பாண்டுகம்பளம் அசைந்தால், அதற்குக் கீழ் உள்ள நிலம் அல்லது கடல் பிளவுபடும். பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டபோது அதற்கு நேர்மேலே பாண்டுகம்பளம் நடுக்கின்றிச் சென்றிருக்க வேண்டும் . அதனால்தான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் பெரிய கோயில் நடுக்கின்றி நிற்கிறது. கதைபோல தெரிந்தாலும், பாண்டுகம்பளம் பார்ப்பது கட்டடக்கலையின் ஓர் அங்கமாக இருந்திருக்கும்போல் தெரிகிறது.
கடைகால்
கட்டடங்கள் கட்டுவதற்கு முன்பாக தரையில் குறிப்பிட்ட ஆழம், அகலத்திற்குக் குழிவெட்டி அதில் கருங்கற்களை அடுக்குவதைக் கடைகால் என்று சொல்கிறோம். ஒரு சிறிய வீடு கட்டுவதாக இருந்தாலும் கடைகால் மிகவும் முதன்மையானது. பெரிய கோயில் போன்ற மாபெரும் கட்டடத்தைக் கட்டும்போது கடைகால் எத்தனைக் கவனத்துடனும், கணக்கீட்டின் அடிப்படையிலும் செய்திருக்க வேண்டும்.
கடைகால் பற்றிய ஒரு குறிப்பை நூலாசிரியர் தருகிறார். பெரிய கோயில் போன்ற பெரும் கட்டடங்களின் கடைகால் ஆழத்தை அறிய வேண்டுமானால், அதன் அருகில் துளையிட வேண்டும். அப்படித் துளையிடும்போது நீர்கண்ட எல்லை, பாறைகண்ட எல்லை, மணல்கண்ட எல்லை வரையிலும் கடைகால் ஆழம் இருக்கலாம்.
2010-ஆம் ஆண்டில் கோயில் வளாகத்திற்குள் 350 அடி ஆழத்திற்கு ஆழ்துளைக்கிணறு தோண்டப்பட்டது. அந்தத் தருணத்தில் அருகில் நின்று பார்த்த மூத்த பொறியாளர் சற்குணன், ஆழ்துளைக் கிணற்றுக்காகத் துளையிட்டபோது ஆற்றுமணல் வெளிப்பட்டதையும், ஒவ்வொரு 50 அடி ஆழத்திலும் வெளியில் வந்த ஆற்றுமணல் மாதிரியையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். அப்படி வெளியில் வந்த ஈரமணல் குவியல் சில மணி நேரங்களில் காணாமல் போய்விட்டது. அந்த மணல் குவியலைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி உரியவர்களுக்குத் தெரியப்படுத்தியவர் மறைந்த பேராசிரியர் இராசு பவுன்துரை.”
பெரிய கோயில் அமைந்திருக்கும் பகுதி முழுவதுமே சுக்கான் பாறைகளால் ஆனது. அதைப் பாறை என்றுகூடச் சொல்ல முடியாத அளவிற்கு மென்மையான கற்காரை போன்றது. அதன் மீது பெரிய கோயிலைக் கட்டியிருக்க முடியாது என்று சொல்கிறார் பொறியாளர் சற்குணம். இந்த இரண்டு செய்திகளையும் இணைத்துப் பார்க்கும்போதுதான், பெரியகோயில் கட்டுவதற்கான இடம் ஒரே தொட்டியாகவோ அல்லது பல தொட்டிகளாகவோ தோண்டப்பட்டு, அத்தொட்டியில் அல்லது தொட்டிகளில் மணல் நிரப்பப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அந்த மணலும் ஒரே அளவில் இல்லாமல் ஒவ்வொரு உயரத்திற்கும் வெவ்வேறு அளவினைக்கொண்ட மணலால் நிரப்பியிருக்கவேண்டும். 350 அடி வரையிலுமே மணல்தான் வந்திருக்கிறது. அதற்கும் கீழ் இன்னும் எத்தனை அடி ஆழத்திற்கு மணல் இருக்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை.
வெளியில் தெரியும் பெரிய கோயிலை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அப்படிக் கொண்டாடும் வகையில்தான் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும், தரைக்கு அடியில் பெரிய கோயிலைத் தாங்கும் கடைகால் தொழில்நுட்பம் , தொழில்நுட்ப வல்லுநர்களை வியக்க வைக்கிறது. பெரியகோயில் கட்டப்பட்டது 1,000 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது பயன்படுத்தப்பட்டத் தொழில்நுட்பம் திடீரெனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்க முடியாது. அதற்கும் முன்பாக தமிழர்களிடம் இருந்து வந்த தொழில்நுட்பமாகவே அது இருந்திருக்க வேண்டும்.
“அடடே மொத்த கோயில் விமானமுமே ஒரு தலையாட்டிப் பொம்மைதானோ?” (பக்கம்-45) என்னும் கேள்வி, தஞ்சையில் மட்டும் ஏன் தலையாட்டிப் பொம்மைகள் உருவாக்கி விற்கப்படுகின்றன என்னும் கேள்விக்கும் விடை சொல்வதுபோல் உள்ளது. தஞ்சைத் தலையாட்டிப்பொம்மை விளையாட்டுப்பொம்மை மட்டுமல்ல, அது தஞ்சைப் பெரிய கோயில் கட்டடக் கலையுடன் தொடர்புடையது என்னும் உண்மையும் நமக்குப் புரிகிறது.
நூல் அமைப்பு
இந்நூலில் பாண்டு கம்பளம், கடைகால், செந்நிழல், திருப்பறையறைவு, திருச்சுற்று மாளிகை, முதல் முற்றுகை, மாதவி மரபின் மாதவி, திருமுன் தமிழ் ஆகிய தலைப்புக்களில் இதுவரையிலும் நாம் அறிந்திராத பல செய்திகள் பேசப்பட்டுள்ளன.
வினா - விடை நூற்குறிப்பு என்னும் பகுதியில் மாதவி பற்றிய தரவுகள் கேள்வி-பதில்களாகத் தரப்பட்டுள்ளன. 144 கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் இடம்பெற்றுள்ளன. பொது வினாக்கள் என்னும் பகுதியில் சிலப்பதிகாரம் தொடர்பிலான 72 கேள்வி-பதில்களும் இடம்பெற்றுள்ளன.
எழுத்தாளர் சிராப்பள்ளி மாதேவன், கட்டடப் பொறியாளர் மன்னை புண்ணியமூர்த்தி பாலாஜி பிரசாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். இந்நூல் முழுவதுமே கட்டடக்கலைத் தொழில்நுட்பம் சார்ந்தது. சங்க இலக்கியங்களிலிருந்து பல மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. உரையாசிரியர்களுக்குப் புரியாத பல செய்திகளை இந்நூலில் பார்க்கும்போது, சங்க இலக்கிய வாசிப்பு என்பது கற்றறிந்த தமிழ் அறிஞர்களுக்கும்கூட புதிரானதாகவே இருக்கும் என்றும் சொல்லத் தோன்றுகிறது.
இலக்கியம் என்னும் அளவில் மட்டும் வாசிப்பதைவிடவும், இலக்கியத்தோடு மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், இசை, நாட்டியம் அறிந்தவர்களின் சங்க இலக்கிய வாசிப்பு நாம் அறியாத பல செய்திகளை நம்மிடம் கொண்டு சேர்க்கிறது. அதற்கு இந்நூலும் சான்றாகும்.
பல்வேறு தலைப்புகளில் 50 காணொலிகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. படங்கள் அனைத்தும் தரம் மிகுந்த ‘கலைத்தாளில்’ (art paper) அச்சிடப்பட்டுள்ளன. நூலை வாசிப்பது ஒரு புதினத்தை வாசிப்பதுபோல் சுவையாக உள்ளது. வாசித்து நாம் அறிந்துகொள்ளவேண்டிய செய்திகள் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன. வாங்கி வாசிப்பது மட்டுமல்ல, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாங்கிப் பரிசாகவும் தரலாம். இந்நூலை எனக்கு அனுப்பித்தந்த நூலாசிரியர் முனைவர் தென்னன் மெய்ம்மனுக்கு நன்றி.
தஞ்சைப்பெரியகோயில் – 50 வேலைத்திட்டம் –பெருந்தச்சன் முனைவர் தென்னன் மெய்ம்மன், வெளியீடு யாம் தமிழர் செயற்களம், பக்கங்கள் 128, விலை ரூ. 360, நூல் கிடைக்கும் இடம்: F3, ஜெயந்த்வளாகம், முனிசிபல் காலனி மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் – 613 004, அலைபேசி – 82704 50565.
இதையும் படிக்க: மூதூர்க்காதை - சிறுகதைகள் - நூல் அறிமுகம் | விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.