‘கூட்ட அறிவியல்’ கொஞ்சமாவது கற்கனும்!

கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் அரசு உருவாக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி...
Karur stampede
கரூரில் விஜய் பிரசாரத்தின்போது..ANI
Published on
Updated on
8 min read

பறவைகள், விலங்கினங்கள் எதுவும் மிகப் பெரும்பாலும் தங்கள் இனங்களின் கூட்ட நெரிசல்களில் சிக்கிக் கொத்தாகக் கூட்டமாக உயிரிழப்பதில்லை. அவ்வுயிரினங்களைவிடக் கூடுதல் அறிவு பெற்றிருப்பதாகக் கருதப்படும் மனிதர்கள்தான், வரலாறு நெடுகிலும், கூட்ட நெரிசல்களில் சிக்கி அற்பமாகச் செத்து மடிகிறார்கள்.

"மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் திறனைக் கொண்டிருப்பதில் தனித்துவமான மனிதர்கள், அவ்வாறு கற்றுக்கொள்ள விருப்பமின்மைக்கும் குறிப்பிடத்தக்கவர்கள்” என்ற (டக்ளஸ் ஆடம்ஸ்) கூற்று உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, உலகெங்கிலும் கூட்ட  நெரிசல் உயிரிழப்பு நிகழ்வுகளின் பட்டியல் நீண்டு வரும் தொடர் அவல அனுபவங்களிலிருந்து ‘மனிதக் கூட்டம்’ அதிகம் கற்றுக் கொள்ளவில்லையோ என்ற ஐயம் அதிகமாகிறது.

உலகளவில், மிகப் பழங்காலத்திலேயே (கி.பி. 48–52) பண்டைய மதிப்பீடுகளின்படி ஜெரூசலேம், பாஸ்ஓவர் கோயில் நெரிசலில் 10,000 மக்களுக்கு மேல் (20,000 வரை) மிகப்பெரும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக அறியக் கிடைக்கிறது. மேலும், எடுத்துக்காட்டுகளாக: பிரான்ஸ், லியோன் என்னுமிடத்தில் 1711-இல் கில்லோடியர் பாலத்தில் 245 பேர் நசுக்கப்பட்டது; 1770-இல் பாரிஸில் மன்னர் லூயி–மேரி (பின்னாள்களில் பிரெஞ்ச் புரட்சிக்கான முதன்மைக் காரணிகளானவர்கள்) திருமண நிகழ்வு நெரிசலில் 3,000 பேர் வரை மரணம்; ரஷியாவில் மாஸ்கோ கோடிங்கா துயர் நிகழ்வில் உயிர்ப் பலி 1,389; மெக்கா, சௌதி அரேபியா, அல்-முயிசெம் சுரங்கப்பாதை நெரிசல் (1990) உயிர் இழப்பு 1,426; சௌதி அரேபியா, மினா நெரிசல் (2015) கண்ட இழப்பு 2,400 என்பன ஒரு சிறு சாம்பிள் பட்டியல்தான்.

இதுபோலவே இந்தியாவில் ஹரித்வார் கும்பமேளா (1820) உயிரிழப்புகள் 430; அலாகாபாத் (உ.பி) கும்பமேளா (1954) கூட்ட நெரிசல் 500 முதல் 800 பேர் வரை மரணம்; 2005-இல் மகாராஷ்டிரம், மந்தேர் தேவி கோயில் நெரிசல் சாவு 291; 2008 (செப்டம்பர்) ராஜஸ்தான், சாமுண்டாதேவி கோயில் கூட்ட நெரிசலில் 224 பேர் பலி; கடந்த ஆண்டில் (2024) உத்தரப் பிரதேசம், ஹத்ராஸ் மதப் பிரசங்க நிகழ்வு நெரிசல் இழப்புகள் 121, அண்மையில் அரசியல் பொதுக் கூட்ட நெரிசலில் கரூரில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழப்பு என அப்பாவி மனித உயிர்கள் பலியான சோகங்கள் எனக் கூட்ட  நெரிசல் உயிரிழப்பு நிகழ்வுகளின் பட்டியல் நீள்கிறது. நில்லாமல்...

திரும்பிப் பார்த்தோமானால், இந்த சோகங்கள் நிகழ்ந்த இடங்களின் கூட்ட அடர்த்திக்கேற்ப இடம் உள்படப் பிற ஏற்பாடுகள், ஆபத்துக் கால அல்லது அவசர காலத் திட்டமிடல் முதலியன பெரும்பாலும் இல்லாததையும் சரியாக நிர்வகிக்கப்படாத கூட்டத்தின் அவலமான விளைவுகளையுமே நாம் காண்கிறோம்.

பெருந்திரள் நிகழ்வுகளுக்கு பொதுக்கூட்டங்களுக்கு வரையறுக்கப்பட்ட, தெளிவான, நடைமுறைப்படுத்தக்கூடிய பாதுகாப்பு நெறிமுறைகளின் அவசர அவசியத்தையும் இந்நிகழ்வுகள் நமக்கு உணர்த்துவதை நாம் மனங்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல அயல்நாடுகளில் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளைக் குறைக்கவும் அறவே தடுக்கவும் சிந்தனைகள் விளைந்து செயல்பாடுகள் வளர்ந்து மக்கள் கூட்டங்களை (Mass Gathering) நிர்வகிக்கும் பொறுப்புக்கொண்ட காவல்துறை, தீயணைப்புத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, மற்றும் அவசரகால சேவைகளுக்காகத் தொடர்புடைய மருத்துவப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் சேவைப் பணியிலுள்ளவர்கள், துணை மருத்துவ அணியினர் (Para Medics), தன்னார்வலர்கள் எனப் பலவகையினர்க்கும் நன்கு வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளும் தொடர் புத்தாக்கப் பயிற்சிகளும் அளித்து வருகிறார்கள்.

இதுவரை நிகழ்ந்துள்ள கூட்ட நெரிசல்களிலிருந்து பெற்ற, கற்ற அனுபவங்களிலிருந்து தக்க பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு இத்துறையின் முன்னோடியான மான்செஸ்டர் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கீத் ஸ்டில் (Dr.G. Keith Still) வழிகாட்டுதலோடு இங்கிலாந்து அமைச்சரவை அலுவலக அவசர காலத் திட்டமிடல் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகள், மான்செஸ்டர் மெட்ரோபாலிட்டன் யுனிவர்சிட்டி உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் (2018 முதல்) கூட்ட அறிவியல் (Crowd Science) என்ற படிப்புத் துறைகள் தொடங்கப்பட்டு சான்றிதழ், பட்டயம், இளநிலைப் பட்டம், பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை வழக்கமான (Academic) படிப்புகள் அல்ல. இவை பயிற்சிகள் (Training) மிகுந்த படிப்புகள்.

பேராசிரியர் கீத் 2018 ஆம் ஆண்டில், உருவாக்கிய இங்கிலாந்து காவல்துறை கல்லூரிக்கான ‘காவல் கமாண்டென்ட்களுக்கான பாடம்/ பயிற்சித்திட்டம் (PEC's)’ இங்கிலாந்தில் அனைத்து காவல் கமாண்டென்ட்களுக்கான கட்டாயப் பயிற்சியாக ஏற்கப்பட்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம், இந்தியாவில் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி ஆகியவற்றிலும் பேராசிரியர் கீத்தின் கூட்ட அறிவியல், கூட்ட மேலாண்மைப் பயிற்சித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மனிதர்களுக்கு அனுபவங்கள் – இழப்புகளில்லாமல் - ‘சும்மா’ கிடைப்பதில்லை. கரூர் நிகழ்வுக்கு முந்தைய (2025 ஜூன்) பெங்களூர் ஆர்சிபி(RCB) கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்டங்களில் 11 பேர் உயிரிழந்த சோக நிகழ்வு அனுபவத்திற்குப் பின் அம்மாநில அரசு துரிதமாகச் செயல்பட்டு கர்நாடக அரசு, கூட்ட ஒழுங்காற்று சட்ட முன்வரைவு(The Karnataka Crowd Control (Managing Crowd At Events And Place of Gathering) Bill, 2025 (LA Bill No. 63 of 2025)] ஒன்றை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தியது.

ஒரு கட்டுப்பாட்டுக்குள், வழிகாட்டு நெறிமுறைகளுக்குள் செயல்பட வேண்டும் என்றால் மனிதர்களுக்குப் பொதுவாகவே கசக்கத்தான் செய்கிறது. ’கர்நாடகா அரசின் சட்டம் மிகக்கடுமையாக உள்ளது; எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்படும்’ என அங்கு எதிர்ப்புகள் கிளம்பியதால் சட்ட முன்வரைவு 15 பேர் கொண்ட அவைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில், அம்மாநில காவல்துறைத் தலைவர் “நிகழ்வுகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கூட்டத்தை நிர்வகிப்பதற்கான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP)” ஜூலை 2025-இல் அறிவிப்பு செய்துள்ளார்.

கர்நாடக நிகழ்வுக்கு முன்னர் ஏற்பட்ட மற்றொரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு உ.பி.யில், 2024 ஹத்ராஸ் மதப் பிரசங்க நிகழ்வில் 121 பேர்கள் உயிரிழந்த சம்பவமாகும். இந்தச் சோகத்தைத் தொடர்ந்து கூட்ட மேலாண்மைக்கான நிலையான நெறிமுறைகளை அம்மாநிலக் காவல்துறை வெளியிட்டு அமல்படுத்தி வருகிறது.

சோக அனுபவங்களுக்குப் பிறகு கூட்ட நெரிசல் மரணங்களைத் தவிர்க்க, கூட்டங்களை நிர்வகிப்பது குறித்த நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்தறிவித்துள்ள உ.பி., கர்நாடகம் மாநிலங்களைப் போலவே கலங்கச் செய்துள்ள செப்டம்பர் 27 கரூர் துயர நிகழ்வையடுத்து இனி இவ்வாறான துயரங்கள் தொடரக் கூடாது என உறுதி காட்டும் தமிழக முதலமைச்சர், வரவேற்க உரிய அறிவிப்பாகத் தமிழ்நாட்டில், விரைவில், அனைத்துக் கட்சியினருடன் கலந்து விவாதித்து அரசியல் கட்சிகளுக்கான நிலையான பொதுக் கூட்ட நெறிமுறைகளை [Standard Operating Procedures (SOPs) for Public Meetings] வகுத்தளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஒருவேளை, கூட்டங்களைக் கட்டுப்படுத்துவது குறித்த கர்நாடக சட்ட முன்வடிவுக்குக் கிளம்பியிருக்கும் எதிர்ப்புகள் போல் இங்கும் எதிர்ப்புகள் கிளம்பி இவ்விசயத்திற்குத் தடையோ, தாமதமோ ஏற்படுத்துவதைத் தவிர்க்கக் கருதியே தமிழக முதல்வர், கரூர் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் பணி நிறைவு நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் இதுதொடர்பான சட்டம்/ வழிகாட்டு நெறிமுறைகள்  உருவாக்கும்போதே அனைத்துக் கட்சிகள், வல்லுநர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமிருந்தும் பெறும் கருத்துக்களையும் உள்வாங்கிக் கூட்டங்களை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைந்து வகுக்கப்படும் என்று சாதுரியமாக அறிவித்துள்ளார் எனக் கருதப்படுகிறது.

நம் நாட்டிலுள்ள கருத்து வளம்

கூட்ட நெரிசல் அவலங்கள் நம்நாட்டில் மேலும் நடைபெறா வண்ணம் (2014) தேசியப் பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்பு 9National Disaster Management Authority (NDMA),Government Of India0 நிகழ்வுகளில் மற்றும் பெருந்திரள் மக்கள் கூடும் இடங்களில் கூட்டங்களை நிர்வகிப்பது குறித்து 9Managing Crowd at Events and Venues of Mass Gathering. A Guide for State Government, Local Authorities, Administrators and Organizers, 2014) மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள் மற்றும் நிகழ்வுகளை அமைப்பவர்களுக்கு உதவும் 95 பக்க வழிகாட்டி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய காவல் இயக்கத்தின் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம்(BPRD) பி.பி.எஸ். சித்து, ஐபிஎஸ் (பணி நிறைவு) மற்றும் கே.கே.சாரங்கல், ஐபிஎஸ் (பணி நிறைவு) ஆகியோரால் திருத்தப்பட்டுப் புதுப்பிக்கப்பட்ட160 பக்க விரிவான கூட்டக் கட்டுப்பாடு மற்றும் கூட்ட மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்கள், 2025 [Comprehensive Guidelines On Crowd Control and Mass Gathering Management,Consisting Of Prècis On Crowd Control,Revised and updated by Sh. P.P.S. Sidhu, IPS (Retd.) and Sh. K.K. Sarangal, IPS (Retd.) and Mass Gathering Managementby Shri KK Sarangal, IPS (Retd.) National Police Mission, Bureau of Police Research and Development, Ministry of Home Affairs Govt. of India ,2025] வழங்கியுள்ளது.

மாநில அளவில் உ.பி. அரசின் பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்பு, 2023 இல் கூட்டங்களைக் கையாள்வது குறித்த 66 பக்க வழிகாட்டுதல்களை (Guidelines for Managing Crowd at Events of Mass Gathering 2023) வழங்கியிருக்கிறது.

இதுபோலவே, குஜராத் மாநிலப் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நிறுவனம் (Gujarat Institute of Disaster Management) பெருந்திரள் கூட்டங்கூடும் இடங்களில் கூட்டத்தை நிர்வகித்தல் மற்றும் தீத்தடுப்புக் கவனம் குறித்த கருத்துருவை(Managing Crowd at venues of Mass Gathering with special orientation to Fire Safety) உருவாக்கி வெளியிட்டிருப்பதுடன், காவல் துறை, வருவாய்த்துறை மற்றும் பல துறையினருக்கும் மேற்குறித்த கூட்டமேலாண்மை குறித்துத் தொடர் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இவற்றுடன் பஞ்சாப் அரசு வருவாய்த் துறை, மறு வாழ்வு மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் 17 பக்க ‘கூட்ட மேலாண்மைக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள்’ [Management of Crowd At Events/Venues of Mass Gathering Standard Operating Procedures for Crowd Management, Department of Revenue, Rehabilitation and Disaster Management Government of Punjab, 2025] வகுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் அரசு பேரிடர் மேலாண்மை, நிவாரணம், மறுவாழ்வு மற்றும் புனரமைப்புத் துறை ’கூட்ட நெரிசலுக்கு உள்ளாகும் நிகழ்வுகள் மற்றும் இடங்களில் கூட்டத்தை நிர்வகிப்பதற்கான ஆலோசனை 2025’ (7 பக்க அட்வைசரி) அறிவிப்புச் செய்துள்ளது.

தமிழ்நாட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகள்(SOPs) வகுக்கப்படும்போது, இதுபோன்று நம்நாட்டில் ஏற்கனவே உள்ள கூட்ட மேலாண்மைக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களுடன் வெளிநாட்டு வழிகாட்டுதல்களும் [குறிப்பாக, டென்வர் காவல்துறையின் கூட்டமேலாண்மைக் குறிப்புரை ஏடு, Denver Police Department Crowd Management Manual, Revised, May 2008] முதலியனவும் ஆய்வு செய்து செயல்படுத்தக்க நல்ல அம்சங்களை இணைத்துக்கொண்டு மிகச்சிறப்பான வழிகாட்டுதல்களை உருவாக்கலாம்.

வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) குறித்த சில ஆலோசனைகள்

கூட்ட அறிவியல்(Crowd Science by Dr G Keith) கோட்பாடுகளிலிருந்தும் பெரும்பாலான கூட்ட மேலாண்மைக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOPs) வகுத்துள்ளவைகளிலிருந்து நாம் அறிந்துணரக் கூடியவை:

கூட்ட மேலாண்மைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்(SOPs)நன்கு வகுக்கப்பட்டுச் சிறந்த ஆவணமாக இருந்தால் மட்டும் போதாது. ஆழ்ந்து ஆலோசித்துப் பல தரப்புக் கருத்துக்களையும் பரிசீலித்துத் தெளிவாக, எளிதாக நடைமுறைப்படுத்தக் கூடியவாறு வரையறுக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் –மக்கள் உயிர்ப் பாதுகாப்பே முதன்மையானது என்ற அசைக்கக் கூடாத அடிப்படையில்  -- எந்தச் சமரசமும் பாகுபாடுமின்றிக் கடமையுணர்வோடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மீறல்களுக்கும் விலக்குகளுக்கும் சற்று இடமளித்தாலும், “இறுதி ஆபத்து மனித உயிர்களுக்கு” என்ற நினைப்பும் பொறுப்புணர்வும் அகலாமல்- எச்சரிக்கை மணியாக –ஒலித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

உலகெங்கிலும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் பொதுப்புத்தியில் ‘பெருங்கூட்டம் கூட்டப்படவேண்டும்’ என்ற பேராசையே கிடக்கிறது. பெரிய கூட்டங்களைக் கூட்டுவதில், அக்கூட்டங்களை முறையாக நிர்வகிப்பதில் உள்ள சவால்களை அவர்கள் அறிவு துணைக் கொண்டு அணுகுவதில்லை. பேராவலோடு பெரிய கூட்டங்களைக் கூட்ட ஆசைப்படுகிறவர்கள், பெரிய நிகழ்வுகளுடன் பெரிய சம்பவங்களுக்கான சாத்தியம் இருக்கிறது என்பதைச் சிறிதும் எண்ணிப் பார்ப்பதேயில்லை. கூட்டத்தில் ‘மக்கள் பாதுகாப்பு’ (Safety of People) என்ற விசயமே யாவற்றிலும் நிகழ்ச்சியைக் காட்டிலுங்கூட முதன்மையானது என்பதைக் கூட்டம் தொடர்பான எந்தவொரு ஏற்பாட்டிலும் முன்வைத்துப் பார்க்க வேண்டும்.

கூட்டங்கள் சிக்கலானவை; அவை பல தனிப்பட்ட மனித மனங்களைக் கொண்டுள்ளன, சில நேரங்களில் ஒரே நோக்கில் (ஒரு இசைக் கச்சேரி, பேரணி அல்லது ஆர்ப்பாட்டத்தில்); சில நேரங்களில் ஒருவருக்கொருவர் எதிர் நிலையில் (ஒரு கால்பந்து அல்லது விளையாட்டு நிகழ்வில் எதிர் எதிர் அணிகளின் ஆதரவாளர்கள்/ரசிகர்கள் என); சில நேரங்களில் ஒரு சிக்கலான இடத்தில், சீரற்ற பல கூறுகளாக (ஷாப்பிங் மையங்கள் / மால்கள் மற்றும் தெருக்களில்) மனிதர்களின் கூட்டமும் போக்கும் செயலும் இருக்கும். ஒவ்வொரு சூழலிலும் மனித நடத்தை மற்றும் சாத்தியமான எதிர்வினைகளின் முழு வரம்பையும் மனதிற் கொண்டு திட்டமிடல், ஏற்பாடுகள், தொடர் கண்காணிப்புக்கு (Monitoringthroughout) வழிகாட்டு நெறிமுறைகள் வகை செய்ய வேண்டும்.

கூட்ட மேலாண்மையின் நான்கு தூண்களாக 'எதிர்பார்ப்பு' (Anticipation), 'தயார்செய்தல் / தடுத்தல்' (Preparation/&Prevention), 'பதில் வினையாற்றல்'(Responding to happenings) மற்றும் 'மீட்பு'(Rescue) என்பன வரையறுக்கப்படுகின்றன. இந்த நான்கு தூண்களும் வலுவாக நிறுத்தப்பட வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுறுத்துவதாக வேண்டும்.

(கூட்டத்தை நிர்வகிக்கும் காவல் துறை அல்லது தொடர்புடைய (தீயணைப்பு, மருத்துவம் போன்ற) பல துறையினருக்கும் அனைத்து நிலையினருக்கும் உரிய பயிற்சிகள், புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பயிற்சி பெற்றவர்கள் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி வழங்கினால் நன்மை பயக்கும்)

எந்த ஒரு முறையான நிகழ்வும் திட்டமிடல், ஒப்புதல் முதல் நிகழ்ச்சி நடைபெறுதல் (மேலாண்மை) வரை, மூன்று தனித்துவமான கட்டங்களைக் கொண்டுள்ளது.

திட்டமிடல் கட்டத்தின்போது நிகழ்வு அமைப்பாளர் ஒரு ஆவணத்தில் நிகழ்வை வரையறுத்துத் தெரிவிக்க வேண்டும், அதில் முதன்மையாக மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பு குறித்த கருத்துரு/ ஏற்பாடுகள் விவரங்கள் மற்றும் கூட்ட மேலாண்மைத் திட்டம் ஆகியவை முழுமையாக (Not sketchy) இடம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தஆவணம், நிகழ்வு, நிகழ்விடம், நிகழ்ச்சியின் கால அளவு, மற்றும்கூட்டஅளவு ஆகியவற்றை விவரிக்க வேண்டும். கூட்டத்தின் தன்மைக்கேற்ப (அதாவது,  குழந்தைகளுக்கான கூட்டம், உடல்திறன் சவால் கொண்டவர்களுக்கானது, முதியோர், பெண்களுக்கானது அல்லது அனைத்தும் கலந்த பொதுத் திரள் கூட்டம் என்ற) விவரம்; ஒவ்வொரு இனத்திற்கும் தேவையான, தக்க அடிப்படை வசதிகள் (நுழைவு, வெளியேற்ற வழிகள், குடிநீர், கழிப்பிடம், கூட்ட நிகழ்வுக் காலத்திற்கேற்ப உணவு ஏற்பாடு, வாகன நிறுத்தம், தகவல் / அறிவிப்பு ஏற்பாடுகள்); தீத்தடுப்பு, முதலுதவி, அவசரநிலை மற்றும் தற்செயல்நிகழ்வுகளை எதிர்கொள்ளத்தக்க பாதுகாப்புத் திட்டங்கள், ஏற்பாடுகளை முழுமையாக விவரிக்க வேண்டும்,

மேலும், நிகழ்வுடன் தொடர்புடைய பல்வேறு சாத்தியமான அபாயங்கள் அல்லது ஆபத்துகளை அடையாளம் காணும் ஒரு விரிவான ஆபத்து மதிப்பீட்டையும் (Risk assessment) அந்த ஆவணம் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

நிகழ்வு முடிந்ததும் நிகழ்விடத்தை உடனடியாக மற்றொரு நிகழ்ச்சிக்குத் தயாராக இருக்கவைக்கும் வண்ணம் சுத்தம், (குப்பைகள், காலி பாட்டில்கள், உணவுப்பொட்டல மீதங்கள் முதலியன அகற்றல், கழிப்பிடங்களாகப் பயன்படுத்திய இடங்களில் கிருமிநாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட சுகாதார முறைகளை மேற்கொண்டு) செய்யும் பொறுப்பு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களது கடமையாக்கப்பட வேண்டும். அல்லது இப்பணிகளை மேற்கொள்ள நியாயமான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

நிகழ்வுக்கு சில வகையான (காவல்துறை, தீயணைப்பு, வருவாய்த் துறை, மருத்துவத் துறை, போக்குவரத்துத் துறை போன்ற துறைகள் ஏதாவது ஒன்றிலோ, அனைத்திலுமோ) ஒப்புதல் ( உரிமம் அல்லது அனுமதி) தேவைப்படலாம். அவ்வாறான நேர்வுகளில் அந்தந்தத் துறையின் ஒப்புதல் வழங்கும் அலுவலர் வேண்டுகிற மேலதிகத் தகவல்கள் யாவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் உடனுக்குடன் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வலியுறுத்த வேண்டும். (இவ்வகையான விதிகள் கடுமையானது போல் தோன்றினாலும் ‘மனித உயிர்ப் பாதுகாப்பு’ என்ற அடிப்படையில் பொறுப்புணர்வோடு அனைவரும் உடன்பட்டு உறுதி செய்ய வேண்டும்.)

ஒப்புதல் வழங்கும் கட்டத்தின்போது கூட்டத் திட்டம் மற்றும் இடர்மதிப்பீடு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் துல்லியமாகச் சரிபார்க்கப்பட வேண்டும். நிகழ்விடம் குறித்து உரிய கள ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். (நிகழ்விட தளத்தின் அனைத்து இடங்களும் ஒரே அளவில் சமமாகப் பயன்படுத்தப்படும் எனக் கருத முடியாது)

நிகழ்விடம், நிகழ்ச்சித் திட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முதலிய அனைத்தும் சமரசங்களில்லாமல்–முற்றிலும் சாத்தியமானதாகக் கருதப்பட்டால் மட்டுமே - பாரபட்சமின்றி உரிமம் அல்லது அனுமதி வழங்கப்படலாம். வழிகாட்டுதல்கள் இதனை உறுதி செய்ய வேண்டும்.

நிகழ்வுக்கான அனுமதி வழங்கும் கட்டம் ஒரு தர உத்தரவாத (Quality Guarantee) செயல்முறை போன்றதாகும். ஆகவே, இது திறமையான, உறுதியான அலுவலரால்/நபரால் செய்யப்பட வேண்டும். அந்த நபர் அல்லது நபர்கள், திட்டம் 'நோக்கத்திற்கு ஏற்றது' என்பதை உறுதிப்படுத்தும் முன் நிகழ்வுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கூட்ட அபாயங்களை நன்கு புரிந்திருக்க வேண்டும்; அபாயங்கள் அடையாளம் காணப்பட்டு, அவை பாதுகாப்பாக நிர்வகிக்கப்பட உறுதிப்படுத்த வேண்டும். நிகழ்வு முடியும்வரை அனைத்தும் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

கூட்ட மேலாண்மையில் அதிமுக்கியமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய மூன்று கூறுகள்: நுழைவு (Entry)-கூட்டம் எப்படி வந்து ஒரு தளத்திற்குள் நுழைகிறது? சுழற்சி (Ingress)- கூட்டம் தளத்தைச் சுற்றி எவ்வாறு நகர்வது? மற்றும் வெளியேறுதல் (Exit) - கூட்டம் தளத்தை விட்டு வெளியேறும் விதம் விரிவாக கள ஆய்வுகள் செய்யப்பட்டு நிர்ணயிக்கப்பட வேண்டும்

சாதாரண மற்றும் அவசர கால சூழ்நிலைகளில் எனத் தனியாக மூன்று கூறுகளுக்குமான கூட்ட அபாயங்கள் மதிப்பிடப்பட வேண்டும். (நிகழ்வுக்காக ஒரு பரந்த பகுதி இருக்கலாம். ஆனால் மேடை பகுதி மோசமாக வடிவமைக்கப்பட்டிருந்தால் அல்லது நுழைவு மற்றும் வெளியேறும் அமைப்புகள் பொருத்தமாக ஏற்பாடு செய்யப்படவில்லை அல்லது போதுமான அளவு அகலமாக இல்லை என்றால் கூட்டத்தை நசுக்கும் சிக்கல்களை அனுபவிக்க நேரலாம்)

ஒரு இடத்தில் கூட்டத்தில் ஒவ்வொரு நபருக்கும் எவ்வளவு இடம் தேவை என்பதை அறிவியல்பூர்வமாகப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஒரு சதுரமீட்டருக்கு இரண்டு பேர் என்பது உலகளவில் நிலையானதொரு கணக்கு (Keith 2014). இது எக்காரணத்தாலும் கூட்ட நிகழ்வின் எந்த நேரத்திலும் மிக மிக அதிகபட்சமாக ஒரு சதுரமீட்டருக்கு 5 பேர்களுக்கு மேல் என்ற அளவை மீற அனுமதிக்கவே கூடாது; ஆபத்து நிச்சயம்.

தமிழ்நாட்டில் கூட்டங்களுக்கான அனுமதி வழங்குதல், பிரிட்டிஷ் ஆட்சிக்காலச் சட்டமான காவல் சட்டம் 1861 [ The Police Act, 1861 (5 of 1861) [22nd March, 1861] பிரிவு 30 [Regulation of public assemblies and processions and licensing of the same] மற்றும் அதன் உட்பிரிவுகள் (1,2,3 & 4) வழியாகச் செயல்படுத்தப்படுகிறது.

பிரிவு 3OA. உரிம நிபந்தனைகளை மீறும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பான அதிகாரங்களைக் குறிப்பிடும்போது:  (1) "எந்தவொரு மாஜிஸ்திரேட் அல்லது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது உதவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை ஆய்வாளர் அல்லது ஒரு நிலையத்திற்குப் பொறுப்பான எந்தவொரு காவல்துறை அதிகாரியும் மேற்கூறிய பிரிவின் கீழ் வழங்கப்பட்ட உரிமத்தின் நிபந்தனைகளை மீறும் எந்தவொரு ஊர்வலத்தையும் நிறுத்தலாம். மேலும் எந்தவொரு கூட்டத்தையும் கலைந்துபோகுமாறு உத்தரவிடலாம். (பின்விளைவுகள்?)

(2) முந்தைய துணைப் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட எந்தவொரு உத்தரவையும் புறக்கணிக்கும் நிபந்தனைகளை மீறுகிற அல்லது பின்பற்ற மறுக்கும் எந்தவொரு ஊர்வலம் அல்லது கூட்டமும் சட்டவிரோத கூட்டமாக கருதப்படும்’’ என்கிறது. (இப் பிரிவின் நடைமுறைச் சாத்தியம் ‘கரூர்த் துயரம் 2025’ போன்ற நிகழ்வில் கேள்விக் குறியாகவே இருக்கும்)

வீறாப்பான பிரிவு 3OAக்குப் பிறகு பிரிவு 32-ன்படி வழங்கப்படும் தண்டனை புஸ்வானந்தான்! ஆம், பிரிவு 30, 3OA ஐ மீறுபவர்களுக்கு (பிரிவு 32 வழங்கும்) தண்டனை இருநூறு ரூபாய்க்கு மேற்படாத அபராதம்! காலத்திற்கேற்றபடி, இந்தச் சட்டமும் குறிப்பிட்ட இந்தப் பிரிவும் மாற்றியமைக்க அவசியமுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்(SOP) குறித்து கருத்து தெரிவிக்க இணையதளம்

வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளுக்காக அரசு காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதன் பரிந்துரைகள் வரட்டும். அதற்குள் இவ்விஷயத்தில் ஆலோசனைகள் அளிக்க விரும்பும் எவரும் தற்போதிருந்தே தமது கருத்துக்களைத் தெரிவிக்க அரசு ஒரு இணையதளத்தை உருவாக்கி அறிவிக்கலாம்.

விரைவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரவுள்ள சூழலில், முன்கூட்டியே பலதரப்பினரும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வாய்ப்பளித்தால் அவற்றைப் பகுத்துத் தொகுத்து ஆணையத்தின் பரிந்துரைகளுடன் இணைத்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளபடி அனைத்துக் கட்சியினர் மற்றும் வல்லுநர்கள் கருத்தும் பெறக் காலதாமதமாகாது. அமல்படுத்தக்கூடிய பொதுக்கூட்ட நிகழ்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை(SOP) விரைவில் வடிவமைத்து வழங்க ஏதுவாகும்.

சிக்கலான இவ்விஷயத்தில் பெருமளவில் மக்கள் கருத்தைப் பெறுவது (SOP) நடைமுறைப்படுத்தப்படுவதை எளிதாக்கும். மேலும் இவற்றை வழிகாட்டு நெறிமுறைகளாக மட்டும் நின்றுவிடாமல் அவற்றுக்குச் சட்ட அடிப்படையை (Legal enforceability) கர்நாடக அரசு முன்னெடுப்பைப் போல அமைக்க வேண்டும்.

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

Summary

Crowd science must to learn to avoid incidents like Karur stampede death

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com