அவதூறு, கிரிமினல் குற்றமென்பது அகற்றப்பட உரியதே!

அவதூறு, கிரிமினல் குற்றமாகக் கருதப்படுவது பற்றி...
Defamation as a criminal offense should be abolished
உச்சநீதிமன்ற நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ்X / IANS
Published on
Updated on
5 min read

தமிழகத்தைச் சேர்ந்தவரான உச்ச நீதிமன்ற நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ் இரண்டு நாள்களுக்கு முன்பு (செப். 22, 2025) "இந்தியாவில் அவதூறு சட்டத்தின் குற்றவியல் அம்சத்தைக் (Decriminalising Defamation) கைவிட வேண்டிய தருணம் வந்து விட்டது என நான் கருதுகிறேன்" என வெளிப்படையாக அறிவித்து, நாட்டின் சட்டப்பரப்பில் ஒரு நலமிகு அதிர்வை ஏற்படுத்தியுள்ளார். கருத்துச் சுதந்திரத்தைக் குறைக்க அவதூறுச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி, நீதிமன்றங்களில் வழக்குகள் பெருகி வருவது குறித்த உலகலாவிய கவலைகளும் அவதூறு சட்டங்களின் குற்றவியல் கூறு மனித உரிமைகளுக்குக் குறிப்பாக பேச்சுரிமை / கருத்துரிமைகளுக்கு தடைக் கல்லாகவே நிற்கின்றன என்ற ஆதங்கங்களும் எங்கும் பரவி ஒலிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில் நீதியரசர் சுந்தரேஷ் வெளிப்படுத்தியுள்ள குரல் மிகுந்த கவனத்திற்குரியதாகிறது.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான இரு நீதியரசர்கள் அமர்வு 2016இல் (சுப்ரமணியன் சுவாமி எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில்) அவதூறு சட்டத்தின் குற்றவியல் அம்சத்தை மீள்உறுதி செய்து ‘மைல்கல்’ தீர்ப்பொன்றை வழங்கியிருக்கிற பின்னணியில் நீதியரசர் சுந்தரேஷ் கருத்து ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகி’ அந்தத் தீர்ப்பை நெம்பித்தள்ள இந்திய சட்ட அமைப்புகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வரவேற்கத்தக்க அறைகூவலாகவே கருத உரியது.

நீதித்துறை அமைப்பை "துஷ்பிரயோகம் செய்து கருத்து சுதந்திரத்தைத் தாக்குவது" குறித்து யுனெஸ்கோ 2022 ஆம் ஆண்டு குறிப்பொன்றை (Policy Brief) வெளியிட்டுள்ளது. அவதூறு சட்டங்களிலுள்ள குற்றவியல் கூறுகளை, அதீத தண்டனைகளை குறைப்பது குறித்த செயலாக்கங்கள் கடந்த சில ஆண்டுகளில் உலக நாடுகளில் நிகழத் தொடங்கியிருந்தாலும் இன்னும்கூட 160 நாடுகள் அவதூறைக் கிரிமினல் குற்றமாக வைத்துள்ளன என்ற கவலையை யுனெஸ்கோவின் குறிப்பு வெளிப்படுத்தியுள்ளது. அந்த 160 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.

இந்தியாவில் தனியே அவதூறு சட்டம் இல்லை. 2023 வரை 1860-களில் ஆங்கிலேயர் அமல்படுத்தத் தொடங்கிய இந்திய பீனல் கோடு (IPC) பிரிவுகள் 499 & 500 மூலம்தான் ‘அவதூறு’ கையாளப்பட்டு வந்தது. 2023 முதல் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 356 இவ்விஷயத்தைக் கையாளுமாறு செய்யப்பட்டுள்ளது. நம்நாட்டில் ஐ.பி.சி.யின் இரண்டு பிரிவுகள் மூலமே ‘அவதூறு’ விஷயத்தை நிர்வகித்து வந்த பிரிட்டன் தன் நாட்டில் தனியே அவதூறு சட்டம் வைத்திருக்கிறது. அவதூறு குறித்து ஐ.பி.சி.யின் இரண்டு பிரிவுகள் ( பிரிவு 499 & 500), பிரிட்டிஷ் காலத்தில் எதிர்ப்புகளை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட காலனித்துவ நினைவுச் சின்னங்கள் என்றே பலராலும் குற்றம் சாட்டப்பட்டு வந்தன.

இருப்பினும், நாடு விடுதலையடைந்த பின்பும் (1947), பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட விஸ்தாரமான அடிப்படை உரிமைகளின் தொகுப்பைத் தன்னகத்தே கொண்டிருக்கும் உலகின் மிக நீண்ட அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கி ஏற்றுக்கொண்டு குடியரசாக மலர்ந்த பின்னும் (1950) ஏன், இன்னும் நாம் அவற்றைக் கைவிடவில்லை? நம் நாட்டில் ஐபிசி,1860 அதற்குப் பதில் வந்துள்ள அவதாரமான பி.என்.எஸ். 2023 இருப்பில் வைத்திருக்கும் பிரிவுகள் முறையே 499, 500 மற்றும் 356 ‘தன்னிச்சையானது, தெளிவற்றது. இதன் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிமைகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன் அவ்வுரிமைகள் மீறப்படுவதாக’வும் உணரப்படுகிறது.

புதிய கால மக்களாட்சிகளில் பேச்சுரிமை, கருத்து கூறும் உரிமைகளுடன் ஒத்திசையாத கட்டுப்பாடுகளை  ‘அவதூறு’ சட்டம் ஏற்படுத்துவதாகவே மனித உரிமைக்களத்தின் கருத்து வலுத்துள்ளது. தனிநபர்களும் அரசியல் கட்சிகளும் பழிவாங்குவதற்காக குற்றவியல் அவதூறு சட்டத்தைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதைக் கண்டு அவதூறுகளை "குற்றமற்றதாக்க" (decriminalising) வேண்டியதன் அவசியத்தை யுனெஸ்கோ, ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சில் ஆகிய அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இருப்பினும் உலகில் 80% நாடுகள் இன்னும் அவதூறைக் கிரிமினல் குற்றமாகக் கருதுகின்றன. ஆப்பிரிக்காவின் 47 நாடுகளில் 39 நாடுகளில் அவதூறு இன்னும் ஒரு கிரிமினல் குற்றச் செயலாக நீடிக்கிறது. மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் 25 நாடுகளில் 15 நாடுகளிலும், மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில், 25 நாடுகளில் 20-லும் குற்றவியல் அவதூறு சட்டங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் உள்ள 33 நாடுகளில் 29 நாடுகளில் அவதூறு, கிரிமினல் குற்றம்.

இவை போக, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல, 2016 முதல் உலகில் 44 நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் அல்லது திருத்தப்பட்ட 57 அவதூறு சட்டங்கள், ஒழுங்குமுறைகள் தெளிவற்ற மொழி (ambiguous language) அல்லது விகிதாசாரமற்ற (disproportionate) தண்டனைகளைக் கொண்டிருப்பதையும் யுனெஸ்கோ அறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது.

ஆசிய - பசிபிக் நாடுகளில், 44 நாடுகளில் 38 நாடுகள், அவதூறு ‘கிரிமினல்’ என்கிற நிலைப்பாடே கொண்டிருந்தாலும் ஒரு ஆறுதலாக, மீதியுள்ள ஆறு ஆசிய-பசிபிக் நாடுகள், 2003 -2018 க்கு இடையில் அவதூறு கிரிமினல் குற்றம் என்பதை ரத்து செய்துள்ளன. ஒரு நாடு பகுதியளவு ரத்து செய்ய முன்வந்துள்ளது. இந்தப் புதிய காலத்திற்கேற்ற – பேச்சுரிமை, கருத்துக் கூறும் சுதந்திரத்தை முதன்மைப்படுத்தும் - மாறுதலை இந்தியாவும் கைக்கொள்ள வேண்டும் என்பதே நீதியரசர் சுந்தரேஷ் எதிர்நோக்கும் முன்னேற்றமாகும்.

'அவதூறு' என்ற சொல்லுக்கு ஏராளமான வரையறைகள் உள்ளன.

மெரியம் வெப்ஸ்டர் அகராதி: “ஒரு நபரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை அறிவிக்கும், தெரிவிக்கும் செயல்” என்கிறது.

ஆக்ஸ்போர்டு அகராதி: “ஒருவரைப் பற்றி மோசமான அல்லது பொய்யான விஷயங்களைச் சொல்லி அல்லது எழுதி அவர்களின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் செயல்” என விளக்குகிறது.

பிளாக் சட்ட அகராதி: “தவறான மற்றும் தீங்கிழைக்கும் அறிக்கைகளால் ஒரு நபரின் குணம், புகழ் அல்லது நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாகும். சாதாரண மனிதர்: ஒரு நபரைப் பற்றி மூன்றாம் தரப்பினருக்கு தவறான அறிக்கையைத் தெரிவிப்பதன் மூலம் அந்த நபரின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் செயல்” என்ற விளக்கம் தந்துள்ளது.

இ.பி.கோ. பிரிவு 499 வரையறை: ' எவரேனும், பேசப்படும் அல்லது படிக்கப்படும் வார்த்தைகள், அடையாளங்கள் அல்லது காணக்கூ டிய பிரதிநிதித்துவம் மூலம், தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்டு எந்தவொரு நபரைப் பற்றியும், அல்லது அத்தகைய குற்றச்சாட்டு அந்த நபரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் என்று அறிந்தோ அல்லது நம்புவதற்குரிய காரணத்தைக் கொண்டோ, எந்தவொரு குற்றச்சாட்டையும் வெளியிடுவது“அந்த நபரை அவதூறு செய்ததாகக் கருதப்படுகிறது என விதித்திருந்தது.

பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023 பிரிவு 356: காலத்திற்கேற்பப் புரட்சிகர மாறுதல்களைக் கொண்ட, காலனித்துவ கருத்துநிலைப்பாடுகளை நீக்கிய, என்றெல்லாம் கட்டியம் கூறப்பட்டு அமல்படுத்தப்பட வந்திருக்கும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023இல் பிரிவு 356, காலனித்துவ ஐ.பி.சி பிரிவு 499 ஐ அட்சரம் பிசகாமல் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது.

ஐ.பி.சி., பி.என்.எஸ். இரண்டிலுமே அவதூறு, சிவில் மற்றும் கிரிமினல் குற்றம் என்பதே உறுதி. ஐ.பி.சி. தண்டனையைப் பிரிவு 500இல் தனியே வைத்திருந்தது. பி.என்.எஸ். சீர்திருத்தமாகத் தனது பிரிவு 356ன் உட்பிரிவுகள் 2, 3, 4-இல், ஐ.பி.சி. வழங்கிய அதே தண்டனையை வைத்துள்ளது. ஐ.பி.சி., பி.என்.எஸ். இரண்டிலுமே அவதூறு என்றால் என்ன? என அளிக்கப்பட்ட விளக்கத்திற்குப் பத்து விதிவிலக்குகளை அளித்துள்ளன. இந்த10 விதிவிலக்குகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்பவர் மீது அவதூறு குற்றச்சாட்டு சுமத்தப்பட முடியாது.

தற்போது வரை, இந்தியாவில் அவதூறு சிவில் குற்றமாகவும் கிரிமினல் குற்றமாகவும் நீதிமன்றங்களால் அணுகப்படுகிறது. முன்னர் குறிப்பிட்ட சுப்ரமணியன் சுவாமி எதிர் இந்திய ஒன்றிய வழக்கில் நீதிமன்றம் மூன்று முக்கியமான கேள்விகளை எழுப்பியதைக் குறிப்பிட வேண்டும்.

  1. குற்றவியல் அவதூறு, அ.ச.பிரிவு 19 (1)(a) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள ‘பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை’ மீறுகிறதா? மற்றும் பிரிவு 19(2) இன் கீழ் அது ஒரு நியாயமான கட்டுப்பாட்டை உருவாக்குகிறதா?

  2. ஐ.பி.சி. பிரிவுகள் 499 மற்றும் 500 மற்றும் சிஆர்பிசிபிரிவுகள் 199(1)-(4) ஆகியவை தன்னிச்சையானவை, தெளிவற்றவை அல்லது விகிதாசாரமற்றவையா? இதன் மூலம், அ.ச. பிரிவு 14 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள  சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை மீறுகின்றனவா?

  3. அ.ச.பிரிவு 21-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள ‘நற்பெயருக்கான உரிமை’, பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையைவிட அதிகமாக உள்ளதா? நீதிமன்றம் இந்த முரண்பட்ட அடிப்படை உரிமைகளை எவ்வாறு ஒத்திசைக்க வேண்டும்?

இத்தகைய கேள்விகளை எழுப்பி அவ்வழக்கில் நீதியரசர் தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்புக்கு அமர்வின் மற்றொரு  நீதியரசர் பிரபுல்லா சி. பந்த் உடன்பட்டார். ஜனநாயகத்தில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் புனிதத்தை நீதிமன்றம் ஒப்புக் கொண்டது; ஆனால் அளிக்கப்பட்டிருக்கும் அவ்வரிமை கட்டற்றதல்ல என்பதை வலியுறுத்தியது. பொது ஒழுங்கு, அவதூறு மற்றும் பிற பட்டியலிடப்பட்ட காரணங்களுக்காக அரசியலமைப்புச் சட்டம் சுதந்திரமான பேச்சுரிமைக்கு நியாயமான கட்டுப்பாடுகளை அனுமதிக்கிறது என்பதைத் தீர்ப்பு சுட்டிக் காட்டியது .

இத்தீர்ப்பின் முக்கியத்துவம் என்னவென்றால்,

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பிரிவு 19(2) இன் கீழ்,பேச்சு சுதந்திரத்திற்கான வரம்புகள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டன.

பேச்சு சுதந்திரம் மற்றும் தனிநபர் நற்பெயர் இரண்டும் முக்கிய மதிப்புகளாக இருக்கும் ஒரு ஜனநாயகத்தில், தனிநபர் உரிமைகளைச் சமூக நலன்களுடன் சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

மேலும், இந்திய சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ள ஒரு மதிப்பான (value) நற்பெயரைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியாக குற்றவியல் அவதூறு சட்டங்களின் பயன்பாட்டை இந்தத் தீர்ப்பு நிலைநிறுத்தியுள்ளது.

இந்தத் தீர்ப்பால், பரந்த தாக்கங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் (அவதூறு போன்ற விஷயங்களுக்கு) குற்றத் தண்டனை விதிகள் நீதிமன்ற ஆதரவைப் பெறுகின்றன. அரசியலமைப்பின் பிரிவு 19-இன் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளை அவதூறு சட்டங்கள் மீறுகின்றன என்பது குறித்து பல சர்ச்சைகள் இருப்பினும், இந்தத் தீர்ப்பின் மூலம் அவதூறுக்கான குற்றவியல் விதிகள் பிரிவு 19-இன் கீழ் உள்ள உரிமைகளுடன் முரண்படவில்லை என்றும் அவை அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்றும் உச்ச நீதிமன்றம் நிலைநிறுத்தியது.

இந்திய நீதிமன்றங்கள் எப்போதும் சிவில் இயல்புடைய அவதூறான கருத்து / அறிக்கை தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பதற்கு பொதுவான சட்டக் கொள்கைகள் மற்றும் முன்னுதாரணங்களைப் பின்பற்றுகின்றன. இரண்டு நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் தொடரலாம் என்பதையும் அது அங்கீகரிக்கிறது.

இரண்டு வகை அவதூறு குறித்தும் மிகச் சுருக்கமாக அறிந்துகொள்ளலாமே.

சிவில் அவதூறு, என்பது, 'சமூகத்தின் பார்வையில் ஒருவரைக் குறைத்து மதிப்பிடும் வகையில் ஒரு தகவலை / அறிக்கையை வெளியிடுவது’. அது அவதூறாகக் கருதப்பட சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

நிபந்தனைகள்:

கூறப்படும் தகவல் / அறிக்கை அவதூறாக இருக்க வேண்டும்; புகார்தாரரின் நற்பெயருக்குத் தீங்கு விளைவிக்கும் போக்கைக் கொண்டுள்ள அவமானம், கேலி அல்லது அவமதிப்புக்கு ஆளாக்கும் எந்தவொரு கூற்றும் செயலும் அவதூறாகக் கருதப்படுகிறது.

தகவல்/அறிக்கை புகார்தாரரிடம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அது தங்களைக் குறிக்கிறது என்பதை உரிமை கோருபவர் நிரூபிக்க முடிந்தால் பிரதிவாதி பொறுப்பேற்க உரியவர் (Liable) தகவல் / அறிக்கை வெளியிடப்பட்டதாக (அவதூறு செய்யப்பட்ட நபரைத் தவிர) வேறு யாராவது ஒருவருக்குத் தெரிந்திருப்பதாக வேண்டும்.

இவ்வாறில்லாவிடில் சிவில் அவதூறு வழக்குத் தொடர முடியாது.

குற்றவியல் அவதூறு

“எந்தவொரு நபருக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் அல்லது அத்தகைய கூற்று சம்பந்தப்பட்ட நபரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் என்று அறிந்தோ அல்லது நம்புவதற்கான காரணத்தைக் கொண்டோ பேசும் வார்த்தைகள் மூலமாகவோ அல்லது அடையாளங்கள் மூலமாகவோ அல்லது காணக் கூடிய பிரதிநிதித்துவங்கள் மூலமாகவோ எந்தவொரு நபருக்கும் எதிராக எந்தவொரு உரிமை கோரலையும் வெளியிடுவது அல்லது வெளியிடுவது அந்த நபரை அவதூறு செய்ததாகக் கருதப்படுகிறது.’’

இது ஜாமீனில் வெளிவரக் கூடிய, கைது செய்ய முடியாத மற்றும் கூட்டுச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். இதன் பொருள், நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்க முடியாது.

ஐ.பி.சி. பிரிவு 499 மற்றும் 500-இன் கீழ் மற்றும் பி.என்.எஸ். பிரிவு உட்பிரிவு 356 2,3,4-இல் வழங்கப்பட்டுள்ளபடி அவதூறு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒரு நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் .

குற்றவியல் அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தங்களை அவதூறு செய்ய நினைத்தார் என்பதை புகார்தாரர்தான் நிரூபிக்க வேண்டும். நோக்கம் இல்லாத நிலையில், அந்த வெளியீடு புகார்தாரரை அவதூறு செய்யும் என்று குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரியும் என்பதையும் புகார்தாரர்தான் நிரூபிக்க வேண்டும். குற்றவியல் வழக்குகளில், குற்றத்தை எந்த நியாயமான சந்தேகத்திற்கும் அப்பால் நிரூபிக்கும் ஆதாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(குறிப்பு: இது ஒரு கூட்டுக் குற்றம் என்பதால், புகார்தாரரும் குற்றம் சாட்டப்பட்டவரும் சமரசம் செய்துகொள்ள முடிந்தால், குற்றவியல் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைக் கைவிடலாம். சமரசத்திற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை).

அவதூறு, கிரிமினல் குற்றமற்றதாக்கப்பட வேண்டும் என்று யுனெஸ்கோ தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. சக்திவாய்ந்த நபர்கள் அல்லது அரசாங்கம் உள்ளிட்ட அதிகாரங்கொண்ட அமைப்புளால் விமர்சனக் குரல்களை அடக்கவும் நீதிமன்றங்களைத் தவறாகப் பயன்படுத்தி, உண்மைகள் வெளிப்படுவதைக்கூட மறைக்கும் நோக்கிலேயே அவதூறு வழக்குகள் நீதிமன்றங்களில் குவிக்கப்படுகின்றன.

இதில் பெரும்பாலும் பத்திரிகை / ஊடக சுதந்திரங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன. மக்களாட்சி அமைப்பின் நான்காம் தூண் (Press) அச்சுறுத்தப்படுகிறது. அவற்றின் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பெரும் பாதிப்புகளுக்குள்ளாகிறார்கள். இத்தகைய போக்குகள் உலகெங்கிலும் காணப்படுகின்றன (தனிநபர் நற்பெயர் போன்ற) பிறிதொரு போர்வையில் கருத்துச் சுதந்திரத்தை முடக்கப் பயன்படும் கருவியாக உள்ளது, அவதூறு கிரிமினல் குற்றம் என்ற நிலைப்பாடு.

தனிநபர் உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் சமநிலைப்படுத்த ‘கிரிமினல்’ எனும் நச்சுப்பல் அவதூறு சட்ட நடைமுறைகளில் இருந்து அகற்றப்படுவதே மக்களாட்சிக்கு மகத்துவங்கூட்டும் முயற்சிகளில் ஒன்றாகும். இதற்குக் குரல் கொடுத்துள்ள இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ் கருத்து செயலாக மாறட்டும், கருத்துரிமைப் பயிர் வளர இவ்வகையில் எடுக்கப்படும் இந்திய முன்னுதாரணம் இன்னும் பல நாடுகளை உற்சாகப்படுத்தலாம்.

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

Summary

Defamation as a criminal offense should be abolished

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com