முதல்வர் நாற்காலி! ‘நவம்பர் புரட்சி’ எதிர்பார்ப்பில் கட்சிகள்!

கர்நாடக முதல்வர் பதவி தொடர்பாக நீறு பூத்த நெருப்பாக இருக்கும் போட்டி மீண்டும் நவம்பரில் வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளதைப் பற்றி...
கர்நாடக முதல்வர் பதவி தொடர்பாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் இடையே நீறு பூத்த நெருப்பாக இருக்கும் போட்டி.
கர்நாடக முதல்வர் பதவி தொடர்பாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் இடையே நீறு பூத்த நெருப்பாக இருக்கும் போட்டி.
Published on
Updated on
2 min read

கர்நாடக முதல்வர் பதவி தொடர்பாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் இடையே நீறு பூத்த நெருப்பாக இருக்கும் போட்டி மீண்டும் நவம்பரில் வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இதை 'நவம்பர் புரட்சி' என அழைக்கிறது எதிர்க்கட்சியான பாஜக. இதன் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அங்கு நடக்கும் அரசியலை அசைபோடுவது அவசியமாகிறது.

2023-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 135 இடங்களில் வென்று அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தபோது, அப்போதைய முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தல் வெற்றிக்கு உதவிய காங்கிரஸ் மாநிலத் தலைவரை முதல்வராக்குவதுதான் காங்கிரஸ் கட்சியின் மரபு. ஆனால், மரபுக்கு மாறாக சித்தராமையாவை முதல்வராகவும், டி.கே.சிவகுமாரை துணை முதல்வராகவும் அறிவிக்க கட்சி மேலிடம் அனுமதி வழங்கியது.

இருவருக்கும் இடையே தலா இரண்டரை ஆண்டுகள் 'முதல்வர்' என்று புரிதல் ஏற்படுத்திக்கொண்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கருத்தை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கர்நாடக மேலிடப் பொறுப்பாளருமான ரண்தீப்சிங் சூர்ஜேவாலா மறுத்து வந்தாலும், காங்கிரஸ் கட்சியினரிடையே 'சுழல் முதல்வர்' கருத்து நிலைத்திருந்தது.

2023 மே 20-ஆம் தேதி முதல்வராக பதவியேற்றுக் கொண்ட சித்தராமையா, இரண்டரை ஆண்டுகால பதவியை நவ. 20-ஆம் தேதி நிறைவு செய்கிறார். அதன் பிறகு முதல்வர் பதவியை சித்தராமையா விட்டுத்தருவார் என்று டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தவாறு உள்ளனர். தனக்கான 'ஆதரவுக் களம்' உருவாக வேண்டிய பிரசித்தி பெற்ற பல கோயில்களுக்கு டி.கே.சிவகுமார் சென்று வந்தவண்ணம் இருக்கிறார்.

அவரது ஆதரவாளர்களோ 'நவம்பரில்' டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவார் என உறுதியாக நம்புகின்றனர். அவர்களில் பலர் முதல்வர் பதவியை டி.கே.சிவகுமாருக்கு விட்டுக்கொடுக்க சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

இதற்கு எதிராக இருக்கும் சித்தராமையாவின் ஆதரவாளர்கள், 'சுழல் முதல்வர் ஒப்பந்தம் எதுவும் செய்துகொள்ளவில்லை; 5 ஆண்டுகளுக்கும் சித்தராமையாவே முதல்வர்' என்று பகிரங்கமாக பேசி வருகின்றனர். இதன் உச்சமாக கடந்த சில வாரங்களாக 'முதல்வர்' பதவி தொடர்பாக சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆதரவாளர்களிடையே பனிப்போர் நீடித்து வருகிறது.

'முதல்வர்' மாற்றம் குறித்து யாரும் பேசக்கூடாது என்று காங்கிரஸ்காரர்களுக்கு கட்சி மேலிடம் ஏற்கெனவே வாய்ப்பூட்டு போட்டுள்ளது. இதனால் பொதுவெளியில் அவர்கள் வாய் திறக்காவிட்டாலும் கட்சிக்குள்ளாக நீடிக்கும் இரு தரப்பினரின் கொதிநிலை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளதை களத்தில் காண முடிகிறது.

இந்த அரசியல் உஷ்ணத்தை அதிகரிக்கும் வகையில் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், 'கர்நாடக அரசியலில் நவம்பர் புரட்சி' நடக்க இருக்கிறது. அப்போது முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா தூக்கிஎறியப்படுவார் என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சியை பலவீனப்படுத்த பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சியான மஜதவும் தீவிர முயற்சி எடுத்துவருகின்றன. இந்த நிலையில், ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு 'முதல்வர்' பதவி விவகாரத்தைச் சமாளிக்க காங்கிரஸ் மேலிடம் வியூகம் வகுத்து வருகிறது.

'முதல்வர்' பதவி தொடர்பாக கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்று சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் அவ்வப்போது கூறி வருகின்றனர். இதற்கு மத்தியில், கட்சி மேலிடத்தின் ஆசி இருந்தால் முதல்வர் ஆகிவிடலாம் என்று டி.கே.சிவகுமார் முன்பொருமுறை கூற அதற்கு எதிர்வினையாக 'முதல்வர் பதவியை அடைவதற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவும், கட்சி மேலிடத்தின் ஆசியும் அவசியம் ' என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பெரும்பான்மை பலம் தனக்கு இருப்பதை மறைமுகமாக சித்தராமையா சுட்டிக்காட்டி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

பணப்பதுக்கல், வரிமோசடி போன்ற பல வழக்குகளை டி.கே.சிவகுமார் எதிர்கொண்டு வருகிறார். ஒருவேளை அவர் முதல்வரானாலும் அவரை பதவியில் இருந்து நீக்குவது எளிது என்பது பாஜக போடும் கணக்கு.

இதையடுத்து மாற்று நில முறைகேடு வழக்கை கையிலெடுத்து முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக காய்களை பாஜக நகர்த்தியது. ஆனால், அது சரிவர கைகொடுக்காததால் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே கருத்து முரண்பாடுகளை உருவாக்க பாஜக முயல்வதாக ஆளும் கட்சி தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது.

டி.கே. சிவகுமாரை முதல்வராக்க விரும்பினாலும், அப்பதவியில் இருந்து சித்தராமையாவை நீக்குவது அவ்வளவு எளிதல்ல என்பதை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அறிந்திருக்கிறார்கள். சித்தராமையாவின் பதவியைப் பறிப்பது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினரின் ஆதரவை இழப்பதற்குச் சமம் என்பதை காங்கிரஸ் மேலிடம் உணராமல் இல்லை என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

பாஜக, மஜத ஆகியவற்றின் அரசியல் ஆளுமையைச் சமாளிக்கும் வல்லமை டி.கே.சிவகுமாரைவிட சித்தராமையாவிடம் அதிகம் இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் நம்புகிறது. அந்த வகையில் மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்கும் முதல்வராக சித்தராமையாவே தொடர காங்கிரஸ் மேலிடம் தடையாக இருக்காது என்பது பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.

இத்தகைய அழுத்தம் நிறைந்த சூழலில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸýம் மும்முரம் காட்டி வருவதால் கர்நாடக முதல்வர் விவகாரம் இப்போதைக்கு கிடப்பில் போடவே அதிக வாய்ப்புள்ளது. எனவே, இப்போதைக்கு தள்ளிப்போடப்பட்டாலும் மீண்டும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த விவகாரம் விஸ்வரூமெடுக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com