கமல் ஹாசன் சொன்ன கழுதைகளின் கதை!

தெரு நாய்கள் பிரச்சினைகளுக்கு இடையே அருகிவரும் கழுதைகளைப் பற்றிய கமல் ஹாசனின் கவலையைப் பகிர்ந்து...
donkey and kamal haasan
கழுதைகளைக் காக்க...கோப்பிலிருந்து
Published on
Updated on
3 min read

‘கமல் ஹாசன் சொன்னார்னா, சொல்லிட்டுப் போகட்டும், கழுதை கிடக்கட்டும் விடு’ என்றெல்லாம் அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியாது; உள்ளபடியே கமல் ஹாசன் சொன்ன ‘காணாமல்போகும் கழுதைகளின் கதை’யும்கூட மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

கழுதையின் வரலாறும் பாரம்பரியமும் அவ்வளவு சாதாரணமான ஒன்றல்ல. மனித குலத்தின் வளர்ச்சிப் போக்கில் மாடுகள், குதிரைகளைப் போல, கூடுதலான பங்களிப்பு கழுதைகளுக்கும் இருக்கிறது. இந்த மனிதர்களுக்காகக் கழுதைகள் உழைத்துக் கொண்டேயிருந்திருக்கின்றன.

‘தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். விலங்கு ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ – இந்தக் கேள்வியைச் சில நாள்களுக்கு முன் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசனிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

என்னது இது? நாயைப் பற்றிக் கேட்டால் கழுதையைப் பற்றிச் சொல்கிறார் என சமூக ஊடகங்களில் சிலர் அவரைக் கிண்டலடிப்பதாக நினைத்துக் குறிப்பிட்டாலும் அவருடைய பதிலும் சொன்ன தீர்வும் தீவிரமான சிந்தனைக்குரியதுதான்.

“கழுதைகளைக் காணவில்லை என்று யாராவது கவலைப்படுகிறார்களா?

“கழுதைகள் எல்லாம் காணாமல் போய்விட்டனவே? நமக்காக எவ்வளவு பொதி சுமந்திருக்கின்றன?

“இப்போது பார்ப்பதேயில்லையே?

“கழுதையை யாராவது காப்பாற்ற வேண்டும் என்று பேசுகிறார்களா?

“எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும், எவ்வளவு முடியுமோ காப்பாற்ற வேண்டும்.

“அவ்வளவுதான் என்னுடைய கருத்து”.

உண்மைதானே. இப்போது கழுதைகளைப் பெரும்பாலும் காணவே முடியவில்லையே. சென்னை மாநகரிலேயே கூவத்தின், அடையாற்றின்  கரைகளையொட்டிய சலவைத் துறைகளுக்கு அழுக்குத் துணிகளைச் சுமந்து கழுதைகள் சென்ற காலமும் இருந்ததுவே.

எத்தகைய பெருமைகளைக் கொண்டவை இந்தக் கழுதைகள். ஆனால், இன்றைய நிலை?

ஆப்பிரிக்கா, ஈரான், எகிப்து போன்ற நாடுகளில் சுமார் 5,000-லிருந்து 7,000 ஆண்டுகளுக்கு முன்னரே காடுகளிலிருந்து பிடித்துவரப்பட்டு, வீட்டு விலங்குகளாகப் பழக்கப்பட்டிருக்கின்றன கழுதைகள்; சளைக்காத கடும் உழைப்பாளி என்பதால் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தி முடிந்தவரை சுரண்டி வந்திருக்கிறான் மனிதன்.

காலப்போக்கில் வணிகத்துக்கும் போக்குவரத்துக்கும் பெருமளவில்  பயன்படுத்தப்பட்டன. வாகனங்கள் எதுவுமில்லாத காலத்தில் ஊர் விட்டு ஊர் பொருள்களைக் கொண்டுசெல்வதில் கழுதைகளே பெரும்பங்காற்றியுள்ளன. இன்றைக்கும் வாகனங்கள் செல்ல முடியாத மலைப் பகுதி வழித்தடங்களில் கழுதைகள்தான் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

தேர்தல் நேரத்தில் இன்னமும் சாலைவழி செல்ல முடியாத நாட்டின் பல்வேறு இடங்களுக்கு நம் தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப் பதிவு சாதனங்கள் மற்றும் வாக்குப் பதிவுக்கான பொருள்களைக் கழுதைகளின் மீதேற்றிக் கொண்டு  செல்வதைக் காணலாம்.

உள்ளபடியே கழுதை புத்திசாலித்தனமான விலங்குதான். மற்ற விலங்குகளுடன் ஒப்பிட குறைந்த தீவனமும் தண்ணீருமே இவற்றுக்குப் போதுமானவை. தரம் குறைந்தவற்றையும் தின்னும். கழுதையைப் பார்த்திருப்பவர்கள், அவை அட்டை, காகிதம் போன்றவற்றையெல்லாம் தின்பதையும் சேர்ந்தே பார்த்திருக்கலாம். கழுதைகள், எத்தகைய தட்பவெப்பத்திலும் தாக்குப் பிடித்து இருக்கும், வேலூராக இருந்தாலும், உதகமண்டலமாக இருந்தாலும் - ராஜஸ்தானாக இருந்தாலும், இமயமலையாக இருந்தாலும்.

இந்தியா முழுவதும் கழுதைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட பிரதேசத்தைப் பொருத்து இவற்றின் வகைப்பாடுகளும் நிறங்களும் மாறுபடுகின்றன.

காலங்காலமாக (வட மாநிலங்களில்) வேளாண் பணிகளிலும் கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. உழவு உள்பட மிகவும் கடினமான வேலைகளைக் கழுதைகளை வைத்துதான் செய்ய முடியும். இப்போது எல்லாவற்றுக்கும் எந்திரங்களும் மேலும் சரக்குப் போக்குவரத்துக்கு சாலைகளுடன் சேர்த்து விதவிதமான சிறிய, பெரிய வாகனங்களும் வந்துவிட்டதால் கழுதைகளுக்கான தேவைகள் குறைந்துவிட்டன.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை பெருமளவில் சலவையாளர்கள்தான் கழுதைகளை வளர்த்துத் துணிச் சுமைகளை எடுத்துச் செல்வதற்காகப் பயன்படுத்திவந்தனர் / வருகின்றனர். ஆனால், இப்போது சலவைத் தொழிலே மாறிப் போய்விட்டது. வீடுதோறும் சலவை எந்திரங்கள் வந்துவிட்டன. மக்கள் துணிகளைச் சலவைக்குப் போடுவதும் அற்றுவிட்டது. மாநகர்களில் விடுதிகள் போன்றவற்றின் தேவையை நிறைவேற்றப் பெரிய எந்திரங்கள் எல்லாம் வந்துவிட்டன.

தவிர, விரும்பினாலும் நகர்ப் பகுதிகளில் சலவைத் தொழிலாளர்களால் கழுதைகளை வைத்துக் கொள்ள முடியாது. மனிதர்கள் வசிக்கவே வீடுகள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும்போது கழுதைகளை எங்கே, எப்படி வைத்துப் பராமரிக்க முடியும்? இவற்றை வளர்ப்பதற்காகும் செலவுகளும்கூட அதிகமானதுதான். ஆனால், ஒரே ஒரு மொபெட் இருந்தால் போதுமானது, சமாளிக்கலாம். கழுதைகள் தேவைப்படுவதில்லை.

வளர்ப்புச் செலவு போன்றவற்றைக் கருதி இப்போதெல்லாம் கிராமப்புறங்களில்கூட சலவையாளர்கள் கழுதைகளைப் பயன்படுத்துவது குறைந்துகொண்டே போகிறது. ‘நாகரிகம்’ வளர வளர, நகரங்கள் பெருகப் பெருக, கமல் ஹாசன் சொன்னதைப் போல கழுதைகளும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் கேள்விப்பட்டதில்லை. என்றாலும், சில மாநிலங்களில் இறைச்சிக்காகவும் கழுதைகள் கொல்லப்படுகின்றன. கழுதை இறைச்சியை மருத்துவ குணம் கொண்டதாக நம்புகின்றனர். கழுதை இறைச்சி உணவுப் பொருளாக வகைப்படுத்தப்படவில்லை என்பதுடன் கழுதையைக் கொல்வதும் அவற்றின் இறைச்சியை உண்பதும் சட்ட விரோதம் என்றாலும் ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உட்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களிலிருந்தெல்லாமும் ஆந்திரத்துக்கு இறைச்சிக்காகக் கழுதைகள் கொண்டுவரப்படுவதாகச் சில ஆண்டுகளுக்கு முன், 400 கிலோ கழுதை இறைச்சி பிடிபட்ட ஒரு தருணத்தில், பீட்டா அமைப்பினர் குற்றம் சாட்டினர்.

தவிர, கழுதைத் தோலிலிருந்து எடுக்கப்படும் ஒருவித கொழுப்பைப் பல நோய்களுக்கான சிகிச்சைக்குத் தேவைப்படும் மிக முக்கியமான மருந்துப் பொருளாகவும் சீனா போன்ற நாடுகளில் பயன்படுத்துகின்றனர். இதற்காகவும் இந்தியாவில் கழுதைகள் கொல்லப்படுகின்றன.

இந்தியாவில் 2012 ஆம் ஆண்டில் 3.20 லட்சமாக இருந்த கழுதைகளின் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் 1.12 லட்சமாகக் குறைந்துவிட்டது.

அதேவேளை, 1992-ல் இந்தியாவில் இருந்த கழுதைகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் மலைப்பாக இருக்கும், 9.67 லட்சம்! அப்படியே குறைந்து, 2007-ல் 4.4 லட்சம். 2019-ல் வெளியிடப்பட்ட 20-வது கால்நடைகள் கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை 1.2 லட்சம்; 90 சதவிகிதம் குறைந்தது! – ராஜஸ்தானில் மட்டும் அதிக அளவாக 23 ஆயிரம் கழுதைகள் இருந்தன.

[நாடு முழுவதுமே இப்போது, அதாவது 2025-ல், கழுதைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை லட்சத்திலிருந்து ஆயிரங்களுக்குக் குறைந்துவிட்டிருக்கலாம்!]

தவிர, உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி தெருமுனை வரை நாடு தழுவி விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நாய்களைப் போலக் கழுதையை யாரும் செல்லமாக, செல்லப் பிராணியாக எல்லாம் வளர்ப்பதில்லை. எல்லாமே  தேவைக்காக மட்டும்தான்.

கழுதைகளின் கர்ப்ப காலம் 11 முதல் 14 மாதங்கள். கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் அதிகமாக. பொதுவாக ஒரே ஒரு குட்டி மட்டுமே ஈனும். மிக அபூர்வமாக இரண்டு குட்டிகள் பிறப்பதுண்டு. சூழல் சரியில்லை என்றால் குட்டி ஈனுவதைக் கொஞ்சம் தள்ளிப்போடவும் கழுதையால் முடியும் என்கிறார்கள் (எப்படிப்பட்ட வரம்?). நன்றாகப் பராமரித்தால் சுமார் 40 ஆண்டுகள் வரை கழுதைகள் வாழக் கூடியவை.

ஆனால், நாய்களின் கர்ப்ப காலம் 57 முதல் 65 நாள்கள் வரைதான். குட்டிகள்? ஒன்றிலிருந்து பன்னிரண்டு குட்டிகள் வரைகூட ஈனும். பொதுவாக, 5 அல்லது 6 குட்டிகள் என்பது இயல்பு. எனவே, இயல்பாகவே நாய்களின் இனப்பெருக்கம் தவிர்க்க முடியாததே. வாழும் காலம் 10 முதல் 13 ஆண்டுகள் வரை. 14 ஆண்டுகள்கூட இருக்கின்றன.

எனவே, இத்தகைய பின்னணியில் நாய்கள் பெருகுவதும் கழுதைகள் அருகுவதும் இயல்பாகவே நடந்தேறிக்கொண்டிருக்கின்றன (சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனத்தை எதற்காகக் குட்டி யானை என்று மாற்றிச் சொல்கிறார்கள்? குட்டிக் கழுதை என்றுதானே குறிப்பிட வேண்டும் – நன்றி மறந்த மனிதர்கள்!).

மக்களில் பலருக்குக் கழுதைகளே மறந்துபோய்விட்டிருக்கும். எப்போதாவது திடீரென கழுதைப் பாலுக்கு நல்ல டிமாண்ட், விலை இவ்வளவு என்பது போன்ற  பரபரப்புச் செய்திகள் வரும்போது நினைவுக்கு வரும். மற்றபடி புதிய தலைமுறையினரில், இன்றைய சிறார்களில், குறிப்பாக நகர்ப்புறத்தில், எவ்வளவு பேர் பார்த்திருக்கப் போகிறார்கள்? அல்லது எதிர்காலத்தில் பார்க்கப் போகிறார்கள்? திரைப்படங்களில் பார்த்தால்தான் உண்டு.

கழுதைகளும் காக்கப்பட வேண்டியவைதான். கழுதைகளைக் காப்பாற்றுவதற்காக வருங்காலத்தில் இயக்கம் நடத்த வேண்டிய தேவையேற்பட்டாலும் வியப்பதற்கில்லை.

கமல் ஹாசன்  சொன்னதைப் போல எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும்; எவ்வளவு முடியுமோ காப்பாற்ற வேண்டும்! கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிடக் கூடாது!

Summary

sharing thoughts about kamal haasan's concern about endangered donkeys amid street dog issues...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com