வெனிசுவேலா மீது டிரம்ப் தாக்குதல் ஏன்? போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவா? டாலரைக் காக்கவா?

வெனிசுவேலா மீதான படையெடுப்பும், டாலர் பின்னணியும்...
அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ
அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோPhoto: X
Updated on
4 min read

வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காகவா? அல்லது மாறாக அந்த நாட்டின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றி டாலரின் மதிப்பைப் பாதுகாக்கவா?

சர்வதேச விதிமுறைகளை மீறி, போர்ப் பிரகடனம் இன்றி (அனைத்து பன்னாட்டு விதிகளுக்கும் புறம்பாக) வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டை மறைமுகமாகக் கைப்பற்றியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஃபுளோரஸைக் கைது செய்து அமெரிக்காவுக்குக் கொண்டு வந்து புரூக்ளின் சிறையில் அடைத்துள்ளார். அமெரிக்க நீதிமன்றம் விசாரித்துத் தண்டனை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே டிரம்ப்தான், உலகில் எட்டே கால் போர்களை (கால் பங்கு போர் - தாய்லாந்து - கம்போடியா போர்) நிறுத்தி அமைதியை நிலைநாட்டியதற்காகத் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு வருகிறார். தைவான் மீதான சீனாவின் படையெடுப்பு முயற்சிக்கும் பகிரங்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

வெனிசுவேலா மீதான டிரம்ப்பின் முக்கிய குற்றச்சாட்டுகள்:

1. வெனிசுவேலாவின் பொருளாதார சரிவு, அரசியல் அடக்குமுறை காரணமாக அந்நாட்டில் இருந்து இதுவரை 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மற்றும் குற்றவாளிகள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர்.

2. வெனிசுவேலாவில் இருந்து கடத்தி வரப்படும் கொகைன் போதைப் பொருள்களால் அமெரிக்க இளைஞர்கள் சீரழிகின்றனர்.

3. அமெரிக்காவால் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ள ட்ரென் டி அரகுவா மற்றும் கார்டெல் டி லாஸ் சோல்ஸ் ஆகிய குற்ற அமைப்புகளுக்கு மதுரோ தலைமை தாங்கி வழிநடத்துகிறார்.

இந்த மூன்று குற்றச்சாட்டுகளில் வெனிசுவேலாவில் இருந்து லத்தீன் அமெரிக்கா பகுதிகளுக்கு அந்நாட்டு மக்கள் சட்டவிரோதமாக குடியேறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை மட்டுமே உண்மை எனக் கொள்ளலாம். ஆனால், இதற்கும் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையின் தோல்வியே காரணம்.

மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் கிடையாது. அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ள வெனிசுவேலா வகை கொக்கைன் ஒரு சதவீதத்துக்கும் குறைவு என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த குற்றச்சாட்டுகளெல்லாம் வெறும் கண்துடைப்புக் காரணங்கள் என்பது மதுரோவின் கைதுக்கு பிந்தைய டிரம்ப்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிச்சமாகியுள்ளது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசுகையில், “வெனிசுவேலாவின் எண்ணெய் வணிகம் நீண்ட காலமாக முற்றிலுமாக சரிந்துள்ளது அனைவரும் அறிந்ததே. எடுக்க முடிந்த எண்ணெய் அளவை ஒப்பிடுகையில், மிகக் குறைவான எண்ணெய் மட்டுமே எடுக்கப்பட்டு வருகின்றது. மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களை வெனிசுவேலாவுக்கு அனுப்ப உள்ளோம். அவர்கள் பல லட்சம் டாலர்களை அங்கு முதலீடு செய்து, சேதமடைந்த எண்ணெய் நிறுவனங்களை சீரமைப்பார்கள். அதன் மூலம் அந்நாட்டுக்கு வருமானம் ஈட்டத் தொடங்குவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “வெனிசுலாவில் புதிய ஆட்சி அமையும்வரை அமெரிக்கா நிர்வாகம் செய்யும். இனி யாா் ஆட்சி செய்யப் போகிறாா்கள் என்பதில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடும். மதுரோ விட்டுச்சென்ற அதே பாணியில் மற்றொருவா் ஆட்சியைப் பிடித்து நாட்டை வழிநடத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதில் எந்தவிதமான சமரசமும் செய்ய நாங்கள் தயாராக இல்லை” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முறையான போர்ப் பிரகடனம் அறிவிக்காமல் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் அதிகாலை 2 மணிக்கு ஒரு நாட்டின் மீது படையெடுத்தது பற்றிப் பெருமையுடன் விளக்கம் அளித்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள், “அமெரிக்காவின் முப்படைகளும், அனைத்துப் புலனாய்வு அமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட வெனிசுவேலா மீதான நடவடிக்கை 30 நிமிடங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 150 அதிநவீன போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டன. ராணுவ முகாமுக்குள் நுழைந்து அங்கிருந்த மதுரோவையும், அவரது மனைவியையும் அமெரிக்க வீரர்கள் கைது செய்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு வெளியே நடந்த போராட்டம்.
வெள்ளை மாளிகைக்கு வெளியே நடந்த போராட்டம்.AP

அமெரிக்க நாடாளுமன்றத்தில் முறையான போர்ப் பிரகடனம் இன்றி இத்தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு, ‘மதுரோ வெனிசுவேலா அதிபரே கிடையாது; அவரது அரசு முறையானது அல்ல’ என்று வெளியுறவுத் துறைச் செயலா் மாா்கோ ரூபியோ கருத்து தெரிவித்துள்ளாா்.

எண்ணெய் வளத்தைக் குறிவைத்தது ஏன்?

உலகின் அதிக கச்சா எண்ணெய் வளத்தைக் கொண்டவை செளதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் என்று நினைத்தால் அது தவறானது, வெனிசுவேலா என்பதுதான் உண்மை. 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின்படி, வெனிசுவேலாவில் சுமார் 30,300 கோடி பீப்பாய்கள் உள்ளன. இவற்றை அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் கையாண்டு வருகின்றன.

இவ்வளவு எண்ணெய் வளம் கொண்டும் ஏழை நாடாக வெனிசுவேலா விளங்குவதற்கான முக்கிய காரணம் அமெரிக்காதான். அமெரிக்க டாலரின் ஆதிக்கத்துக்கு வேட்டு வைக்கும் வகையில், வெனிசுவேலாவின் எண்ணெய்யை டாலர் அல்லாமல், யூரோ, யுவான் போன்ற பிற நாடுகளின் நாணயங்களில் வர்த்தகம் மேற்கொள்ள மதுரோ உத்தரவிட்டார். மேலும், டாலருக்கு எதிராக புதிய நாணயத்தை உருவாக்க முயற்சித்து வரும் பிரிக்ஸ் (பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய) கூட்டமைப்பில் இணையவும் மதுரோ முயற்சித்து வந்தார்.

டாலரை வைத்து உலகை ஆட்டிப் படைத்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது மூலதனத்துக்கே ஆப்பு என்றால் சும்மாவா இருக்கும்? வெனிசுவேலாவை வைத்து அனைத்து நாடுகளையும் கட்டுப்படுத்தும் முயற்சியைக் கடந்த ஆட்சியிலேயே டிரம்ப் தொடங்கிவிட்டார். வெனிசுவேலா மீது அடுத்தடுத்து கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது.

இதன் விளைவாக வெனிசுவேலாவுக்கான முதலீடுகள் நின்றுபோனது, கிடைக்க வேண்டிய கடன்கள் தடைப்பட்டன. இதனால், கடும் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு எண்ணெய் நிறுவனங்களை முறையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

உலகளவில் அதிக எண்ணெய் வளங்கள் இருந்தாலும், நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்களை மட்டுமே உற்பத்தி வெனிசுவேலா தற்போது உற்பத்தி செய்கின்றன. இது உலகளாவிய கச்சா எண்ணெய் உற்பத்தியில் சுமார் 0.8 சதவீதம் மட்டுமே. கடந்த 2013 ஆம் ஆண்டு மதுரோ ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு முன்னதாக நாளொன்று 35 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டன. இது தற்போது உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்யின் அளவை ஒப்பிடுகையில் மூன்று பங்கிற்கு மேல் அதிகமாகும்.

இந்த எண்ணெய் நிறுவனங்களை அமெரிக்கா கைப்பற்றியுள்ள நிலையில், பெரும் பாதிப்புக்கு உள்ளாகப் போவது சீனாதான். ஏனெனில், வெனிசுவேலா உற்பத்தி செய்யும் 70 சதவீத எண்ணெய்யை சீனா தனது யுவான் நாணயம் மூலம் வர்த்தகம் செய்து வந்தது. இனி எண்ணெய் வேண்டுமென்றால் டாலர் மூலம்தான் வர்த்தகம் செய்ய முடியும்.

மேலும், மதுரோவின் கைது உலக சந்தைகளில் எதிரொலிக்க அதிக வாய்ப்ப்புள்ளது. வெனிசுவேலா, பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடாக இருப்பதால் எரிசக்தித் துறை கடும் சரிவை காண நேரிடும். எண்ணெய் விலை சற்று அதிகரிக்கக் கூடும். இருப்பினும், அமெரிக்க முதலீட்டாளர்களின் உற்பத்தி தொடங்கியவுடன் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே வெனிசுவேலாவுக்கு ஆதரவாக போராட்டம்
பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே வெனிசுவேலாவுக்கு ஆதரவாக போராட்டம்AP

அமெரிக்காவுக்கு புதிதல்ல

டாலரின் மதிப்புக்கு சவால் விடுக்கும் வகையில் நடவடிக்கைகளையும், அறிவிப்புகளையும் வெளியிடும் நாடுகளின் தலைவர்களுக்கு எதிராக ஏகாதிபத்திய அமெரிக்காவின் நடவடிக்கை வழக்கமானதுதான்.

கடந்த 2000 ஆம் ஆண்டில் இராக்கின் எண்ணெய் வர்த்தமானது டாலருக்கு பதிலாக யூரோ நாணயத்தில்தான் மேற்கொள்ளப்படும் என்று அப்போதைய அதிபர் சதாம் ஹுசைன் அறிவித்தார். இது டாலரின் ஆதிக்கத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக அமைந்தது.

இதன் விளைவாக 2003 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவைத் தொடர்ந்து, ஈராக் மீது படையெடுத்தது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை. இதையடுத்து, இராக்கின் எண்ணெய் வர்த்தகம் மீண்டும் டாலருக்கே மாறியது. பின்னர் சதாம் ஹுசைனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

லெபனான் நாட்டின் தலைவராக இருந்த கடாஃபி, ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் எண்ணெய் வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை டாலருக்கு மாற்றாக ‘தங்க தினார்’ மூலம் வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்தார். 2009 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக இருந்தபோது, ‘ஐக்கிய ஆப்பிரிக்க நாடுகள்’ என்ற தொலைநோக்கு பார்வையை முன்வைத்தார்.

தொடர்ந்து டாலருக்கு எதிராக குரலெழுப்பிய கடாஃபி, 2011 ஆம் ஆண்டு நேட்டோ அமைப்பின் வான்வழித் தாக்குதலில் சிக்கினார். பின்னர், குண்டு காயங்களுடன் அவர் சடலமாக மீட்கப்பட்டார். அப்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

தற்போது வெனிசுவேலா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா, ஈரான், மெக்சிகோ, கொலம்பியா, வியட்நாம், கியூபா, பொலிவியா, நிகாரகுவா, யேமன், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

டாலருக்கு எதிராக குரலெழும் போதெல்லாம் உலகிற்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் அந்நாட்டைக் கைப்பற்றி, தலைவர்களை அழித்து, ‘எதிர்த்தால் இதுதான் நடக்கும்’ என்ற ‘ஸ்டேட்மெண்ட்’டை (Statement) அமெரிக்கா அளித்து வருகின்றது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலுக்கு லத்தீன் அமெரிக்க மற்றும் இடதுசாரி நாடுகள் அடிபணியுமா? இவற்றுக்கெல்லாம் அஞ்சாமல் டாலருக்கு நிகரான நாணயத்தை உருவாக்க பிரிக்ஸ், அணிசாரா நாடுகள் தொடர்ந்து முயற்சிக்குமா? மதுரோ என்ன ஆவார்?

உலகமே காத்திருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com