பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஒரு திரைப்படத்தின் டிரைலர் மட்டுமே! ஏற்கெனவே 73 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை - வசனத்தில் வெளிவந்து, தமிழ்த் திரையுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய பராசக்தி என்ற பெயரிலேயே இன்னொரு திரைப்படம் என்று அறிவித்த நாளிலிருந்தே விவாதிக்கப்பட்டு வந்தது.
டிரைலர் வெளியானதுமே தமிழ்நாட்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைச் சுற்றிதான் இந்தத் திரைப்படத்தின் கதை என்பது தெரிய வந்ததும் ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி பற்றி எதுவுமே தெரியாத, அறியாத இன்றைய தலைமுறையினர் பின்னோக்கித் தேடத் தொடங்கியுள்ளனர்.
ஒரு கிளர்ச்சி, ஒரு மாநிலத்தின் தலையெழுத்தையே முழுவதுமாக மாற்றி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் அரசியல் கட்சியைத் தலைதூக்க விடாமலேயே செய்துவிட்டிருக்கிறதென்றால், அந்தக் கிளர்ச்சியின் வீச்சும் தாக்கமும் எந்தளவுக்கு இருந்திருக்கும்?
ஹிந்தி எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. 1938-ல் மதராஸ் மாகாணத்தின் அன்றைய முதலமைச்சராக இருந்த ராஜாஜி, பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயப் பாடம் என்று அறிவித்தபோது, காஞ்சியில் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தி தமிழ் மொழியைக் காக்கத் தலைவர்கள் போராட்டம் அறிவித்தனர்.
ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகிச் சிறை சென்ற நடராசனும் தாளமுத்துவும் சிறையிலேயே உடல்நலம் குன்றி உயிரிழந்தனர் (இவர்களின் நினைவிடம் சென்னையில் மூலக்கொத்தளத்தில் இருக்கிறது). ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் போராட்டம் நடந்தது. நாடு முழுவதும் காங்கிரஸ் அமைச்சரவைகள் விலகியபோது, ராஜாஜியும் பதவி விலகினார். பிறகு மாகாண ஆளுநரான எர்ஸ்கின், பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கும் உத்தரவைக் கைவிட்டார்.
1948-ல் ஒரு முறை, மாகாண முதலமைச்சராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்த காலத்திலும் மீண்டும் பள்ளிகளில் ஹிந்தி முயற்சி தொடங்கப்பட்டு, போராட்டங்களைத் தொடர்ந்து, ஓமந்தூரார் ராஜிநாமாவுக்குப் பின் கைவிடப்பட்டது.
ஹிந்தித் திணிப்புக்கு எதிராகப் பின்னர் நடந்ததுதான் மிகப் பெரிய போராட்டம், 1965 ஆம் ஆண்டில். புதிய பராசக்தி படத்தின் கதையும் அதுதான்.
நாடு குடியரசாக அறிவிக்கப்பட்ட, 1950, ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம், மத்திய அரசின் ஆட்சி மொழி ஹிந்தி என்றும் ஆங்கிலம், இணையான மொழியாக 15 ஆண்டுகளுக்கு, 1965 ஜனவரி 25 ஆம் தேதி வரை தொடரும் என்றும் குறிப்பிட்டிருந்தது. பின்னர், 1963 ஆம் ஆண்டில் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, வாக்குறுதியொன்றையும் பிரதமர் நேரு அளித்தார். காலக்கெடு நெருங்கிவந்த நிலையில் ஹிந்திக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக இருந்தது மத்தியில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தலைமையில் இருந்த காங்கிரஸ் அரசு அனுப்பிய அறிக்கையொன்று.
இதையடுத்தே, ஆங்கிலம் தொடர வேண்டும்; ஹிந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் தொடரும் என்ற மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு அளித்த வாக்குறுதி காக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் பெரும் போராட்டம் தொடங்கியது.
எதிர்க்கட்சியாக உருப்பெற்றிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்த இந்த போராட்டத்தில் ஒரே கருத்துடைய கட்சிகளுடன் பெருமளவில் மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்றனர்.
ஹிந்தியை எதிர்த்து, 1965, ஜனவரி, 25 ஆம் தேதி துக்க நாள் அனுஷ்டிக்கப்பட்டது. 26 ஆம் தேதி திருச்சியில் மொழிப் போர் வீரராக இன்றும் கொண்டாடப்படும் சின்னசாமி தீக்குளித்து உயிர் துறந்தார். இவர்தான் களத்தில் முதல் பலி. இதைத் தொடர்ந்து மறுநாள், ஜன. 26 ஆம் தேதி, நாடு முழுவதும் குடியரசு நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டிருந்தது.
மத்திய அரசு தன் நிலையிலிருந்து இறங்கி வருவதாக இல்லை. மாநிலம் முழுவதும் வெகுவேகமாகப் போராட்டம் பரவியது. தொடர்பு மொழியாக ஆங்கிலமே நீடிக்க வேண்டும், தமிழ்நாட்டில் தமிழ் மொழியே முதல் மொழியாகத் தொடர வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக நின்றனர்.
நிறைய தீக்குளிப்புகள், உயிர் துறப்புகள், ஆங்காங்கே போராட்டக்காரர்கள், இளைஞர்கள், மாணவர்களும்கூட, வன்முறைகளிலும் தீவைப்பிலும் இறங்கினர். போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஆயிரத்துச் சொச்சம் பேர் சிறுவர்கள் என்றால் அன்றைய நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
போராட்டத்தில் மிக மோசமான திருப்பத்துக்கு காரணமாக இருந்தவை இரண்டு நாள்கள், பிப்ரவரி 10 மற்றும் 12.
பிப்ரவரி 10 ஆம் தேதி கோயம்புத்தூர், திருப்பூர், வெள்ளக்கோவில், திருச்செங்கோடு, குமாரபாளையம், கரூர், மணப்பாறை போன்ற இடங்களில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
திருப்பூரில் பல்வேறு இடங்களில் தீவைக்கப்பட்டது. நகரின் மையப் பகுதியில் இரு உதவி காவல் ஆய்வாளர்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். தொடர்ந்து, நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
திருச்செங்கோடு துப்பாக்கிச் சூட்டில் இரு போராட்டக்காரர்கள் இறந்தனர். கரூரில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மணப்பாறையில் ரயில் நிலையத்தை மீட்பதற்காகக் காவல்துறையினர் சுட்டதில் ஒருவர் இறந்தார்.
இந்த நாளின் மிக மோசமான சம்பவமாக, குமாரபாளையத்தில் ஒரு மில்லை ஆயிரக்கணக்கானோர் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்த முயன்றபோது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
ரயில்கள் எல்லாமும் ரத்து செய்யப்பட்டன. கலவரத்தை அடக்குவதற்காகப் பல்வேறு நகரங்களுக்கும் ராணுவம் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மொழிப் பிரச்சினையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மத்தியில் அமைச்சர்களாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களான உணவு – விவசாயத் துறை அமைச்சர் சி. சுப்பிரமணியமும் பெட்ரோலியம் – ரசாயனத் துணை அமைச்சர் ஓ.வி. அளகேசனும் ராஜிநாமா செய்தனர்.
வானொலியில் உரையாற்றிய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, நேருவின் உறுதிமொழி மனப்பூர்வமாக நிறைவேற்றப்படும்; காலவரம்பின்றி இணை மொழியாக ஆங்கிலம் தொடரும் என்று உறுதி கூறியதுடன், ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதனிடையே, போராட்டத்தை ஒடுக்க அவசியம் ஏற்பட்டால் ராணுவத்தைப் பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
ஆனால், மறுநாள், பிப்ரவரி 12 ஆம் தேதி நிலைமை மேலும் மோசமானது. அன்று மாநிலம் முழுவதும் கடையடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பொள்ளாச்சி, சென்னிமலை, கூடலூர், பேரணாம்பட்டு, ஆற்காடு, ஆரணி, ஜோலார்பேட்டை, அகரமாங்குடி, மன்னார்குடி உள்பட 11 இடங்களில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பொள்ளாச்சியில் போராட்டக்காரர்களால் காவல்நிலையமும் அஞ்சல் அலுவலகங்களும் தாக்கப்பட்டன. ஹிந்தி எழுத்துகளை அழித்த ஒரு பள்ளி மாணவன் சுட்டுக்கொல்லப்படவும் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. ராணுவமும் காவல்துறையும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், ஊரை முழுவதுமாக ராணுவம் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, இறந்தவர்களின் உடல்களை எல்லாம் அவர்களே எரித்த நிலையில் உண்மையிலேயே இறந்தவர்களின் எண்ணிக்கையோ, யார் யார் என்றோ கடைசி வரையில் தெரியாமலேயே போய்விட்டது. பின்னர், 20 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத்தான் பராசக்தி டிரைலரில், காவல் அதிகாரியாக வரும் ரவி மோகன் குறிப்பிடுகிறார் – பொள்ளாச்சியிலேயே அடிச்சு அங்கேயே புதைச்சிரலாம்!
மேலும், சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டமும் வன்முறையும் தாண்டவமாடியது. திருவொற்றியூர் ரயில் நிலையம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. காவல்துறை சுட்டதில் ஒருவர் இறந்தார். ஆவடி அருகே எட்டு பெட்டிகள் கொண்ட ஒரு பயணிகள் ரயில் முழுவதுமாக எரிக்கப்பட்டது.
மாநிலத்தில் போராட்டங்கள் தொடர்ந்தன. வன்முறை நிற்கவில்லை.
பிப்ரவரி 22 ஆம் தேதி, தென்னாட்டு மக்கள் மொழிப் பிரச்சினையில் நிதானமும் பொறுமையும் காட்டி, அமைதியான முறையில் பிரச்சினைக்குத் தீர்வு காண சர்க்காருக்கு உதவ வேண்டும் என்று பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அழைப்பு விடுத்தார். மொழிப் பிரச்சினையில் மக்கள் தமது உணர்ச்சியைக் காட்டுவதற்கும் எல்லையுண்டு. அதனால் தேச நலனுக்குப் பாதகம் ஏற்படக் கூடாது என்றும் குறிப்பிட்டார் சாஸ்திரி.
அதே நாளில் ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு மாணவர் ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சி கவுன்சில் அறிவித்தது. பிரச்சினையை மூத்தவர்களிடம் விட்டுவிட்டு மாணவர்கள் வகுப்புக்குத் திரும்புமாறும் கேட்டுக்கொண்டது.
ஏறத்தாழ இரண்டு மாதங்கள் நடைபெற்ற இந்த ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் தீக்குளித்து உயிர் துறந்தவர்கள் தவிர்த்து, காவல்துறை மற்றும் ராணுவத்தின் துப்பாக்கிச் சூடுகளில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரையிலும்கூட யாருக்குமே தெரியாது. 70 பேர் இருக்கலாம் என்பார்கள், நூற்றுக்கும் மேலே என்பார்கள். 150 என்பார்கள். காயமுற்றவர்களுக்குக் கணக்கே இல்லை. கொல்லப்பட்டது உண்மையும்கூட.
இதைத் தொடர்ந்து, 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்ட காங்கிரஸ் கட்சி மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டது. அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. இதுவரை, 59 ஆண்டுகளாக, மீண்டும் காங்கிரஸால் ஆட்சிக்கு மட்டுமல்ல, அருகேகூட வர முடியவில்லை.
டிரைலரில் நடிகர் ரவி மோகன் பேசும் ஒரு வசனமும், இடம் பெற்றிருக்கும் புதிய பராசக்தி படத்தின் காட்சிகளும் தமிழ்நாட்டில் ஹிந்திக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க பெரும் போராட்டத்தையும் உயிர்த் தியாகத்தையும் மீண்டும் நினைவுகூரச் செய்திருக்கின்றன.
[தகவல்கள் – அன்றைய 'தினமணி'யின் பக்கங்களிலிருந்து]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.