முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நூற்றாண்டு காணும் கவிஞர் கண்ணதாசனின் வண்ணச் சித்திரங்கள்!

கவிஞர் கண்ணதாசனின் நூற்றாண்டு தொடங்குவதையொட்டி அவருடைய சில திரைப்பாடல்கள் பற்றி...

News image

கவிஞர் கண்ணதாசன் - கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2026, 3:07 pm IST

கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டு விழாக் காலம் தொடங்குவதையொட்டி அவருடைய சில திரைப்பாடல்கள் பற்றி...

திங்களில் வந்த செவ்வாய்

இதயகமலம் படத்தில் கவியரசர் கண்ணதாசனின் கைவண்ணத்தில் ஒரு பாடல்.

‘தோள் கண்டேன், தோளே கண்டேன், தோளில் இரு கிளிகள் கண்டேன், வாள் கண்டேன், வாளே கண்டேன், வட்டமிடும் விழிகள் கண்டேன்..’ என அந்தப் பாடல் தொடங்கும்.

இந்தப் பாடல் கம்பராமாயணத்தில் வரும், ‘தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே’ என்ற பாடலின் தாக்கத்தால் பிறந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆகவே, அதைப் பற்றி இங்கே நாம் பேச வரவில்லை. அந்தப் பாடலில் கவியரசர் செய்திருக்கும் ஒரு நகாசு வேலையைப் பற்றி மட்டும் இங்கே பேசுவோம்.

அந்தப் பாடலில் தேன் சொட்டும் வரிகள் ஏராளம். தாராளம்.

‘கட்டாத மேகம் கட்டிவந்த கூந்தல் எட்டாத நிலவு எட்டிவந்த போது’, ‘செண்டு வண்ணச் சிட்டு, சின்ன முல்லைமொட்டு, குங்குமப் பொட்டு, கொஞ்சும் நெஞ்சைத் தொட்டு’ என்று ஏராளமான இனிப்பான வரிகள் அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும்.

இருந்தாலும் அந்தப் பாட்டின் உச்சம் கடைசி சரணம்தான்.

‘தேடிவந்த திங்கள், திங்களில் செவ்வாய், செவ்வாயில் வெள்ளி சேர்த்தெடுத்தேன் அள்ளி அள்ளி’ என அந்த கடைசி சரணத்தில் கிழமைகளின் பெயர்கள் துள்ளி விளையாடும்.

கவியரசரின் இந்த கனிந்த வரிகளுக்கு கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகரின் ஒரு பாடல் அகத் தூண்டுதலாக இருந்திருக்கலாம். கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் குடந்தையை அடுத்த கொட்டையூரைச் சேர்ந்தவர். 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

அவரது பாடல்:

‘எப்போதும் உன்வாய்ச் செவ்வாய்

எனக்குநீ என்றும் திங்கள்

இப்போதுன் சிரிப்பு வெள்ளி

இன்பந்தான் நமது பள்ளி!’

என்றாலும் கொட்டையூராரின் இந்த வரிகளைவிட கவியரசரின் வரிகளே அதிக கொண்டாட்டமாக இருக்கின்றன.

சரி. ‘தேடிவந்த திங்கள், திங்களில் செவ்வாய், செவ்வாயில் வெள்ளி சேர்த்தெடுத்தேன் அள்ளி அள்ளி’ என்ற இந்த வரிகளுக்கு உண்மையில் என்னதான் அர்த்தம்?

‘தேடி வந்த திங்கள்’ (திங்கள் - நிலா (நிலவு போன்ற முகம்)

‘திங்களில் செவ்வாய்’ (அந்த நிலா முகத்தில் சிவந்தநிற வாய்)

‘செவ்வாயில் வெள்ளி’ (அந்த சிவப்பு நிற வாயில் வெள்ளி நிறப் பற்கள்)

அற்புதம் இல்லையா? இப்போது சொல்லுங்கள் கவியரசருக்கு உண்டா நிகர் என்று?

எண்களில் இலக்கிய விளையாட்டு

தமிழ்த் திரைப்படங்களில் எண்களைச் சொல்லிச் சொல்லி விளையாடும் ஏகப்பட்ட பாடல்கள் உள்ளன. அந்தப் பாடல்களில் மிகவும் சிறப்பான ஒன்று, கலைக்கோயில் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய ‘நான் உன்னைச் சேர்ந்த செல்வம்’ என்ற பாடல்.

அந்தப் பாடலின் ஒரு சரணத்தில் 4, 5, 6, 7 என்ற எண்கள் அடுத்தடுத்து வந்து அழகு செய்யும். அந்த வரிகள் இதோ:

'உன் அச்சம் நாணம் என்ற நாலும் (4)

என் அருகில் வந்தவுடன் அஞ்சும் (5)

இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறும் (6)

அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்' (7)

என்ன அழகான வரிகள் பாருங்கள். கலைக்கோயில், 1964 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைக் காவியம்.

இந்த வரிகளுக்கான அர்த்தத்தைப் பாருங்கள். பெண்ணின் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் ஆடவனின் அருகில் வந்தவுடன் அஞ்சுமாம். அதாவது பயப் படுமாம். இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறுமாம். அது சரிகமபதநி என்ற ஏழு இன்ப ஸ்வரங்களையும் பாடுமாம்.

எண்களில் என்ன ஓர் இலக்கிய விளையாட்டு பாருங்கள்?

இதழுக்கும் விழிக்கும் இடமாற்றம்

இரவில் நெடுநேரம் விழித்திருந்தால் இதழில் இருக்கும் சிவப்பு விழிக்கு இடம்மாறி விடும். விழியில் இருக்கும் வெண்மை நிறம் இதழுக்கு இடம்பெயர்ந்து விடும்.

இதைத்தான் கலிங்கத்துப் பரணி என்கிற காவியம், ‘வாயின் சிவப்பை விழிவாங்க மலர்க்கண் வெளுப்பை வாய் வாங்க, தோயக் கலவி அமுதளிப்பீர் துங்க கபாடம் திறமினோ’ என்கிறது.

இந்த காவிய வரிகளை அன்னை இல்லம் (1963) படத்தில் மிகமிக அழகாகக் கையாண்டிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.

அந்தப் படத்தில் வரும், ‘மடிமீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம்’ என்ற பாடலில், ‘வாயின் சிவப்பு விழியிலே, மலர்க்கண் வெளுப்பு இதழிலே, காயும் நிலவின் மழையிலே காலம் நடக்கும் உறவிலே’ என கவியரசர் களிநடம் புரிந்திருப்பார்.

கட்டோடு குழலாட ஆட

பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சொல்லழகை, மயங்க வைக்கும் அதன் மதுச்சாரத்தைத் துளிகூட சுவை குன்றாமல் பாமரர்களுக்கும் கொண்டு சேர்த்த பெருமை கவியரசர் கண்ணதாசனையே சேரும்.

அந்த வரிசையில் பல பாடல்களை கவியரசர் படித்தவர்களுக்காகவும், பாமரர்களுக்காகவும் எடுத்தாண்டு இருக்கிறார். அவற்றைத் திரை இலக்கியங்களாக்கி இருக்கிறார்.

மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவையில் ஒரு பாடல் உண்டு.

‘காதார் குழையாடப் பைம்பூண் கழலாடக் கோதை குழலாட வண்டின் குழாமாட’ என்ற பாடல் அது.

அதே மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் மற்றொரு மணியான பாடல்.

‘முத்தணி கொங்கைகள் ஆடஆட

மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்

சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்

செங்கயற் கண்பனி ஆட ஆட’ என்ற பாடல் அது (திருவாசகம் 178)

கவியரசருக்கு இது போதுமே. மாணிக்கவாசகரின் மணிவரிகளை அடியொற்றி ‘பெரிய இடத்துப் பெண்’ (1963) என்ற படத்தில் கவியரசர் எழுதிய பாடலே ‘கட்டோடு குழலாட ஆட, கண்ணென்ற மீனாட ஆட.’

கவியரசரின் மணிமகுடத்தில் கச்சிதமாகப் பதிக்கப்பட்ட, கண்கவரும் இன்னொரு மாணிக்கக் கல் இந்தப் பாடல் என்றால் யார் மறுக்கப் போகிறார்கள்?

கவியரசர் கண்ணதாசனின் நூற்றாண்டு தொடங்கும் இந்த நல்ல நாளில் அவரையும், அவரது இலக்கிய விளையாட்டையும் என்றும் நினைவுகூர்ந்தபடியே இருப்போம்.

(ஜூன் 24 - கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் - நூற்றாண்டு தொடக்கம்)

Summary

Tamil lyricist, poet kannadasan special songs on his birthday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.