திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் நகராட்சிகள், மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படுகின்றன என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு செய்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 12 ஆக உயருகிறது.
பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களை மட்டுமே மாநகராட்சிகளாக அறிவிக்கும் நிலைமை இந்தியா முழுவதிலுமே மாறிவிட்டது. ஆந்திரத்தில் 17 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் பத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சிகளில் மக்கள் தொகை 4 லட்சத்துக்கும் குறைவு. இதுபோன்று மகாராஷ்டிர மாநிலத்தில் 27 மாநகராட்சிகள்!
ஒரு மாநகராட்சியில் 10 லட்சம் பேர் வசிக்காத நிலையிலும்கூட, அந்த மாநகராட்சியில் மிக அதிகமான வருவாய் கிடைக்கின்றது என்றால், அந்த வருவாயைக் கொண்டு தனக்கான நிதிநிலை அறிக்கையை தானே தயாரித்து வரவு - செலவு பார்த்துக்கொள்ள முடியும் என்றால் அத்தகைய நகரங்களை மாநகராட்சியாக அறிவிப்பதும் நடைமுறையில் இடம்பெறத் தொடங்கியுள்ளது.
ஏனென்றால், ஒரு மாநகராட்சி என்று அறிவிக்கப்பட்ட பின்னர், அதை நிர்வகிக்க அரசு சார்பில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்படுவதும் மக்கள் பிரதிநிதியாக மேயர் தேர்வு செய்யப்படுவதும் அவசியம். அரசும் மக்கள் பிரதிநிதிகளும் இசைவாகப் பணியாற்றி, நகரத்தின் சாலை, குடிநீர், புதைசாக்கடை, தெருவிளக்கு, மாநகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி மருத்துவமனைகள் ஆகியவற்றை நிர்வகிக்க வேண்டும். இதற்கான நிதியாதாரம்- இவர்களுக்குக் கிடைக்கும் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி,கேளிக்கை வரி ஆகியன மட்டுமே!
இன்றைய அரசியல் சூழ்நிலையில், ஒவ்வொரு மாநகராட்சியும் தனக்கான சொத்து வரி, தனக்கான தொழில்வரி, குடிநீர் வரியைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவையாக இல்லை. புதை சாக்கடைத் திட்டத்தை உலக வங்கி நிதியுதவியில் நடத்திய போதிலும், அவர்கள் சொல்லும் நிபந்தனைப்படி, குடிநீர் வரியை உயர்த்த முடியாதபடி அரசியல் நெருக்குதல் மேலதிகமாக இருக்கிறது.
தற்போது மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ள திண்டுக்கல், தஞ்சாவூர் இரண்டு நகரங்களிலும் மக்கள் தொகை 10 லட்சமாக இல்லை என்ற போதிலும், சுற்றிலும் உள்ள பல்வேறு நகராட்சி அல்லது உள்ளாட்சிகளையும் இந்த நகரத்துடன் இணைத்து, மாநகராட்சியாக மாற்ற வேண்டிய நிர்பந்தம் தவிர்க்க முடியாதது. இதனால் சாதாரண உள்ளாட்சியில் மிகக் குறைவாக தொழில் வரி, குடிநீர் வரி, சொத்து வரி செலுத்திக் கொண்டிருந்தவர்கள், மாநகராட்சியுடன் பலவந்தமாக இணைக்கப்பட்டுவிட்ட நிலையில், கூடுதலாக செலுத்தியாக வேண்டும்.
விளைவு? முதற்கட்டமாக, சாதாரண பஞ்சாயத்திலும்கூட வீட்டு வாடகை இரு மடங்காக உயரும். வீட்டு மனை மற்றும் அடுக்குமாடி வீடுகளின் விலையும் குறைந்தபட்சம் 20% உயரும். ஆனால், மாநகராட்சிக்கான வசதிகளை ஏற்கெனவே நகரின் மையத்தில் இருப்போர் மட்டுமே அனுபவிப்பர். அதற்கான செலவை இணைக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.
புதிய மாநகராட்சிகளை உருவாக்குவதில் தவறில்லை. தமிழகத்தில் மேலும் சில நகரங்களைக்கூட மாநகராட்சிகளாக தரம் உயர்த்துங்கள். ஆனால், அவற்றின் வருவாய் ஆதாரம் வெறும் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி ஆகியன மட்டுமாக இல்லாமல், வேறு வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே சாதாரண நடுத்தர மக்கள் மீது விழக்கூடிய வரிச்சுமையைக் குறைக்க முடியும்.
மாநகராட்சி எல்லைக்குள் இருந்து இயங்கும் சிற்றுந்து, பேருந்து ஆகியவற்றுக்கான சாலை வரி, நுழைவு வரியில் மாநகராட்சிக்கு 50% பங்குத்தொகையை நேரடியாகப் பிரித்துத்தரலாம்.
மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தொலைக்காட்சி கேபிள் ஆபரேட்டர்கள் செலுத்தும் வரி, முழுமையாக மாநகராட்சிக்கு வந்துசேர வகை செய்ய வேண்டும்.
மாநகராட்சி எல்லையில் உள்ள விமான நிலையங்களில் எத்தனை விமானங்கள் எத்தனை நடை வந்து செல்கின்றனவோ அதற்கேற்ப ஒரு வரியை மாநகராட்சிக்குக் கிடைக்கச் செய்தல் வேண்டும்.
மின்விநியோகத்தை மாநகராட்சியே மேற்கொள்ளலாம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கோவை நகராட்சி மின்வாரியத்திடம் மின்சாரத்தைப் பெற்று தன் எல்லைக்குள் அனைத்து இணைப்புகளுக்கும் மின்விநியோகம் செய்து மின்கட்டணத்தையும் வசூலித்தது. தற்போது, மின்விநியோகம் தனியாரிடம் விடப்பட வேண்டும் என்று மத்திய மின்சார ஆணையம் வலியுறுத்தும் நிலையில், மாநகராட்சியே ஏன் ஒரு மின்விநியோக நிறுவனத்தைத் தொடங்கி, தன் எல்லைக்குள் மின்விநியோகம் செய்து பெருலாபம் பார்க்கக் கூடாது?
மாநகராட்சிப் பள்ளிகளை, உள்ளூரில் சிறந்துவிளங்கும் தனியார் பள்ளிகளுடன் இணைத்து நடத்தவும், நியாயமான கல்விக் கட்டணங்களை நிர்ணயிக்கவும் அனுமதித்தால், மாநகராட்சிப் பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கையும் அதிகரிக்கும், கல்வித் தரமும் உயரும், மாநகராட்சிப் பள்ளிகளின் வளாகங்களும், கட்டடங்களும் முறையான பயன்படுதலுக்கு உள்ளாகும்.
குடிநீர் வரியை வைத்துக்கொண்டு, நீரேற்று நிலையங்களின் மின்கட்டணம்கூட செலுத்த முடியாத மாநகராட்சியாக, அரசிடம் கையேந்தும் நிலைமைதான் நீடிக்கும் என்றால், அந்த நகரம் மாநகராட்சியாக மாறியும் பெருமை பெறாது.
ஒரு மாநகராட்சி என்பது சிற்றரசு போல இருக்க வேண்டும். மாநில அரசுக்குக் கப்பம் செலுத்த வேண்டுமே தவிர, கையேந்தி நிற்கும்நிலை இருத்தல்கூடாது.
தமிழகத்தைத் தலைநிமிர்ந்து நிற்க வைக்க நினைக்கும் முதல்வர், மாநகராட்சிகளை உருவாக்கினால் மட்டும் போதாது, அவை தன்னிறைவு பெற்றவையாகத் திகழ்வதையும் உறுதி செய்ய வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.