காலிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தூக்கு தண்டனைக் கைதி தேவேந்திரபால் புல்லரின் கருணை மனுவை, குடியரசுத் தலைவர் நிராகரிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தைக் காரணம் காட்டி தண்டனையைக் குறைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, நாடு முழுவதும் மீண்டும் தூக்கு தண்டனை ரத்து குறித்துப் பேச வைத்துள்ளது.
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும் நடவடிக்கைகளை சிரோமணி அகாலி தளம் மேற்கொண்டிருக்கிறது. இந்தியப் பத்திரிகைக் கவுன்சில் தலைவர் கட்ஜு உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலரும் தூக்கு தண்டனை ரத்து செய்வதை வலியுறுத்தி வருகின்றனர்.
தூக்கு தண்டனை ரத்து செய்யக் கோரி கருணை மனு அளிப்பதும், மனு நிராகரிக்கப்படுவதும், மீண்டும் நீதிமன்றத்தில் முறையிடுவதும் இந்தியாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. சில முறையீடுகளில், அபரிமிதமாக காலதாமதம் ஏற்படுவதையும் அதனிடையே கைதிகளுக்கு ஏற்படும் மனஉளைச்சலையும் கருத்தில்கொண்டு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்ற கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டபோதிலும், தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பல்வேறு வழக்குகளில் கருணையை எதிர்நோக்கி இருக்கும் கைதிகள் பலரது தூக்குக் கயிறை இறுக்கியுள்ளது.
முன்விரோதம், தகராறுகளில் நடைபெறும் சாதாரண கொலை வழக்குகளோடு, "தடா' அல்லது தீவிரவாத வழக்குகளில் தூக்கு தண்டனை பெற்றவர்களை ஒப்பிடக்கூடாது; குடியரசுத் தலைவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுரை கூற முடியாது; மீண்டும் பரிசீலிக்குமாறு குடியரசுத் தலைவரைக் கேட்கவும் முடியாது; தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அபரிமிதமான காலதாமதத்தைக் காரணம் காட்டி, தண்டனையைக் குறைக்க முடியாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் இந்த வழிகாட்டுதலின்படி, கருணை மனு நிராகரிக்கப்பட்ட எவரையும் தூக்கிலிட முடியும். ஆகவேதான் இதுகுறித்துப் பல முனைகளிலும் கருத்துகள் எழுந்துகொண்டிருக்கின்றன.
ஏறக்குறைய, தூக்கு தண்டனைக்குக் காத்திருக்கும் அனைத்து கைதிகளுக்குமான தீர்ப்பு போல, ஒற்றை வரிகளில் ஒவ்வொரு வாதத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ள இந்தத் தீர்ப்பை முன்வைத்து குடியரசுத் தலைவர் பதவி மீதும், அவர் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததைப் போலவும் குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல.
குடியரசுத் தலைவர் இந்தக் கருணை மனுவின் மீது கடந்த 8 ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்தாரா என்கிற கேள்வியை புல்லரின் மனைவி கேட்பது, தனிப்பட்ட முறையில் அவரது உணர்வுக் கொந்தளிப்பாக இருக்கலாம். ஆனால், குடியரசுத் தலைவர் "உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்' என்று களங்கம் விளைவிக்கும் தொனி தேவையற்றது. குடியரசுத் தலைவர் பதவி மட்டும்தான் இன்னமும் அரசியல் சாயம் பூசப்படாமல் இருக்கிறது. அதன் மீதும் தேவையில்லாமல் சேற்றை வாரி இறைக்கும் முயற்சிகள் அர்த்தமில்லாதவை.
இன்னும் சொல்லப்போனால், குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்ற பிறகுதான் கருணை மனுக்கள் அதிக எண்ணிக்கையில் பரிசீலிக்கப்பட்டன. மும்பை தாக்குதல் தொடர்பில் அஜ்மல் கசாப், நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் அப்சல் குரு ஆகியோரது கருணை மனுக்களை நிராகரித்தவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிதான். தற்போது பரிசீலிக்கப்பட்ட கருணை மனுக்கள், கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல் ஆகியோர் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலம் முதலாகவே பரிசீலிக்கப்படாமல் இருந்தவை என்பதையும் விமர்சனம் செய்வோர் எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஏன் காலதாமதம் செய்யப்பட்டது என்ற கேள்வியை எழுப்புவதைக் காட்டிலும், இந்த மனுக்களை இத்தனை காலம் பரிசீலிக்காமல் இருந்ததால்தான் அவர்களும் இத்தனைக் காலம் உயிருடன் இருந்தார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இவர்களின் ஆயுள் நீட்டிப்புக்கு, இப்படிக் காலம் கடத்தியதுதான் காரணம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஒருவேளை இந்தக் காரணம் கருதியும் அவர்கள் காலதாமதம் செய்திருக்கவும் கூடும்.
மேலும், கருணைகூட அரசியலாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம்தான் பல தருணங்களில் இத்தகைய காலதாமதத்துக்கு அடிப்படைக் காரணம் என்பதை, குடியரசுத் தலைவர் மீது குற்றம் சொல்வோர் எண்ணிப்பார்ப்பது அவசியம். அதுமட்டுமல்ல, கருணை மனு நிராகரிக்கப்படுவதைவிடக் காலதாமதப்படுத்துவது மேல் என்று நினைத்தவர்கள்தான், இப்போது காலதாமதத்துக்குக் குடியரசுத் தலைவரைப் பழிக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தற்போது நீதிமன்றம் மிகத் தெளிவான வரையறைகளைக் கூறியுள்ள நிலையில், இனிமேல் எந்த ஒரு நீதிமன்றமும், குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரிப்பைத் தொடர்ந்து, காலதாமதத்தைச் சுட்டிக்காட்டி தண்டனை குறைப்பு கோரினால், அத்தகைய மனுக்கள் நிராகரிக்கப்படும் வாய்ப்புகளே அதிகம்.
ஆகவே, குடியரசுத் தலைவர் மாளிகைக்குக் களங்கம் கற்பிப்பதை நிறுத்திவிட்டு, "மரண தண்டனை கூடாது' என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி, மரண தண்டனை இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவது மட்டுமே சரியான வழிமுறையாக இருக்கும்.
ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்குச் சமமான தீவிரவாதத் தாக்குதல் நடத்தியவர்களுக்கான தூக்கு தண்டனையைக் குறைப்பது கூடாது என்று நாடாளுமன்றம் முழுஆதரவுடன் கருத்து தெரிவிக்குமேயானால், அத்தகைய குற்றவாளிகளுக்கு குடியரசுத் தலைவரும்கூட கருணை வழங்க முடியாது என்பதையும் சட்டப்படி உறுதி செய்துவிட்டால், இத்தகைய சிக்கல் ஏற்படாது.
கயிறா? கருணையா? ஏதாவது ஒன்றை விட்டுவிடத்தான் வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.