தேவை தீர்வு, சட்டமல்ல!

பிரபல பத்திரிகை ஆசிரியர், அரசியல் பிரமுகர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
Updated on
2 min read

பிரபல பத்திரிகை ஆசிரியர், அரசியல் பிரமுகர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிடுவதில்லை என்றாலும், சாட்டப்பட்டிருக்கும் குற்றமும், குற்றம் சாட்டப்பட்ட நபரும் பிரச்னையின் முக்கியத்துவத்தை அதிகரித்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

தொடர்ந்து அடுக்கடுக்காக பாலியல் வன்முறைச் சம்பவங்கள் ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதன் பின்னணி, அதிகரித்திருக்கும் விழிப்புணர்வா, இல்லை வேறு ஏதாவது பிரச்னையை திசைதிருப்பப் பயன்படுத்தப்படும் உத்தியா என்கிற ஐயப்பாடும் எழுகிறது. ஆனால், அதிகரித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கோ, மறைப்பதற்கோ முடியாது என்பதுடன், இப்படியே இது தொடருமானால் இதன் விளைவுகள் ஒட்டுமொத்த தேசத்தின் வருங்காலத்தையே சிதைத்துவிடும் என்பதையும் நாம் உணர வேண்டிய தருணம் இது.

பாலியல் பிரச்னைகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு மணி கட்ட முதலில் குரலெழுப்பியதே உச்சநீதிமன்றம்தான் 1997-இல் விசாகா வழக்கில், பத்து ஊழியகர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களில், பாலியல் புகார்களை விசாரிக்க நிர்வாகம் ஒரு புகார் குழு அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. அது மட்டுமல்லாமல், நாடாளுமன்றம் இது தொடர்பாக சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி மாதம்தான் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு (தடுப்பு, விலக்கு மற்றும் தீர்வு) சட்டம் 2013 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஏப்ரல் மாதம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டும் இந்தச் சட்டம் இன்னும் அரசால் அறிவிக்கப்படவில்லை என்பதுதான் வேடிக்கை.

அரசு சட்டமாக்கவில்லை, போகட்டும். வழிமுறைகளைக் கோடிட்ட உச்சநீதி மன்றம் தன்னளவிலாவது ஓர் அமைப்பை ஏற்படுத்தி பெண் வழக்குரைஞர்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்புத் தந்திருக்கலாமே? 16 ஆண்டுகளாகியும்,அப்படி ஓர் அமைப்பு இல்லாமல் போனதால்தானே, பயிற்சி வழக்குரைஞராக இருந்த அந்தப் பெண்ணால், முன்னாள் நீதிபதி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, புகார் செய்யவோ, பரிகாரம் தேடவோ முடியாமல் போயிற்று. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம், உடனடியாக ஒரு குழுவை நியமித்து, குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்டார் என்றாலும், இத்தனை நாளும் மெத்தனமாக இருந்த குற்றச்சாட்டிலிருந்து நீதித்துறை தப்பமுடியாது.

அதிகரித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மாறிவரும் சமுதாயம் ஒரு மிக முக்கியமான காரணம். மேலைநாட்டு பழக்க வழக்கங்களையும், நடைமுறைகளையும் மனதில் பதிய வைத்துக்கொண்டு இந்திய சூழலைப் பார்க்கவோ, கணிக்கவோ முற்படலாகாது. மகளிர் அதிக அளவில் கல்வி அறிவு பெற்று, வேலைக்கும் போவது கடந்த சில வருடங்களாகத்தான் அதிகரித்து வந்திருக்கிறது. மகளிர் உரிமை, அதிகாரம், பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மேம்பாடு முழுமையானதா என்றால், இல்லை என்றுதான் சொல்லமுடியும். இது சரியா, தவறா என்பது அவரவர் கண்ணோட்டம் சார்ந்தது.

பன்னாட்டு தொழில் நிறுவனங்களிலும், தகவல் தொலைத்தொடர்புத் துறையிலும்தான் மிக அதிகமான பாலியல் பிரச்னைகள் காணப்படுகின்றன. அங்கெல்லாம் முறையான கண்காணிப்பு, பாதுகாப்பு அமைப்புகள் இல்லை என்பதும், வெளிப்படைத் தன்மையே இல்லாத நிர்வாகமாக அவை செயல்படுகின்றன என்பதும் வெளிப்பட்டிருக்கின்றன. சட்டம் படித்த, பயிற்சி வழக்குரைஞருக்கே இந்த கதி என்றால், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர் பற்றி நினைக்கவே பகீரென்கிறது.

இது மாறிவரும் சமுதாயச் சூழலின் ஒரு காலகட்டம். பெண்கள் பற்றிய, குறிப்பாக உழைக்கும் மகளிர் பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றமும், பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னுரிமை தரப்படுவதும்தான் ஓரளவுக்கு இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும். சட்டம் போட்டு மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும் என்று நினைப்பது பேதைமை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com