சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் "சீல்' வைக்கப்பட்ட "ஐ', "ஜே', "கே' ஆகிய மூன்று வாயில்களுக்கு "சீல்'களை அகற்றி, மே 14-ஆம் தேதி ஐ.பி.எல். போட்டிக்கு மட்டும் திறந்துவிடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், ரசிகர்கள் இந்த அரங்கில் அமர்ந்து ரசித்தார்கள்.
ஆனால், இந்த விவகாரத்தைப் பொருத்தவரை கட்டுமானத்துக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனும் 12,000 கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்களின் பாதுகாப்புடன், உயிருடன் விளையாடுகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசுத் துறைகள், கிரிக்கெட் அசோசியேஷன், உச்ச நீதிமன்றம் ஆகிய மூன்று அமைப்புகளின் செயல்பாடுகளும் நெருடலாகவே இருக்கின்றன.
சென்னைப் பெருநகர மேம்பாட்டு ஆணையத்திடம் உரிய அனுமதி பெறாமல், இந்த கூடுதல் கட்டுமானம் நிறுவப்பட்டிருக்கிறது என்றால், இத்தனை நாள்களாக அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? ஏன் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை முன்னதாகவே மேற்கொள்ளவில்லை?
தாக்கல் செய்யப்பட்ட வரைபடத்துக்கு மாறாக கட்டப்பட்டிருந்தால், இந்நேரம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தின் நிர்வாகிகள், அலுவலர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை? வெறுமனே வாயில்களுக்கு "சீல்' வைப்பதால் என்ன பயன்? தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடையாதா?
""12,000 பேருக்கு டிக்கெட் விற்றாகிவிட்டது. ஆகவே தற்போது அனுமதி மறுக்கப்பட்டால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. ஆகவே ஒரு நாள் மட்டும் இந்த வாயில்களைத் திறந்துவிடலாம்'' என்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த ஒருநாளில் அசம்பாவிதம் நேரிட்டால், அரங்கம் நொறுங்கினால், யார் பொறுப்பு? அதிகாரிகளா, ஸ்டேடிய நிர்வாகிகளா, ஐ.பி.எல். அமைப்பாளர்களா இல்லை உச்ச நீதிமன்றமா? ரசிகர்களை அனுமதிக்கும் முன்பாக ஒரு நிபுணர் குழு ஆய்வு செய்து, அவர்கள் கட்டுமானத் திடத்தன்மையை பரிசோதித்த பிறகு, இந்த ஒருநாள் மட்டும் அனுமதிக்கலாம் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாததேகூட நெருடலாக இருக்கிறது.
தங்களுக்குக் காரணக் கேட்பு அறிக்கைகூட அளிக்காமல் "சீல்' வைத்தனர் என்று புலம்பும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன், அளிக்கபட்ட வரைபடத்துக்கு மாறாக தாங்கள் கட்டுமானத்தைக் கட்டவில்லை என்பதை ஆணித்தரமாகப் பேசவில்லையே ஏன்? சர்வதேச கிரிக்கெட் கழகத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய, எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தை மாறுதலுக்கு உட்படுத்தும்போது அதை முறையாகச் செய்வதில் என்ன சிக்கல்? பல்லாயிரம் ரசிகர்கள் அமரும் இடத்துக்கு உரிய முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டாமா?
பொதுப்பணித் துறையால், 2011-ஆம் ஆண்டில், கட்டுமான திடத்தன்மை சான்று எப்படி எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தின் இந்தப் புதியக் கட்டுமானத்துக்கு வழங்கப்பட்டது என்பது புரியாத புதிர். அந்தத் தவறை, ஐ.பி.எல். போட்டிக்கு டிக்கெட் விற்கும்போதெல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு, போட்டி நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாக அதிகாரிகள் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளும் விசித்திரம் அதைவிடப் புதிரானது. அப்படியானால், சரிபார்க்காமலேயே கண்ணை மூடிக்கொண்டு அனுமதி கொடுத்தார்களா? இப்போது விலக்கிக்கொள்ளப்படுகிறதா? இந்தத் தவறுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? எடுக்கப் போகிறது?
அண்மையில் வங்கதேசத்தின் டாக்கா நகரில் ஆயத்த ஆடைத் தொழிலகம் செயல்பட்ட 8 மாடிக் கட்டடம் நொறுங்கி விழுந்தததில் 900-க்கும் அதிகமானோர் இறந்தனர். இன்னமும்கூட இடிபாடுகளிலிருந்து அழுகிய சடலங்கள் நாள்தோறும் மீட்டெடுக்கப்படுகின்றன. (எந்த நேரத்திலும் அதுபோன்ற அசம்பாவிதம் சென்னை ரங்கநாதன் தெருவில் நிகழ இருக்கிறது, எச்சரிக்கை!)
இந்நிலையில், பொதுமக்கள் கூடும் ஒரு கட்டுமானத்தின் திடத்தன்மை குறித்து விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டடத்திலும், அது அலுவலக வளாகம் என்றாலும், விளையாட்டு அரங்கம் என்றாலும், வணிக வளாகம் மீள்ஆய்வு செய்து, கட்டுமானத் திடத்தன்மையைச் சரிபார்க்க வேண்டிய தேவை உள்ளது.
அரசு அதிகாரிகள், சில தினங்களுக்கு முன்பாகவே இந்த "சீல்' வைப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால், விளையாட்டுப் போட்டியை வேறு இடத்துக்கு மாற்றவும், டிக்கெட்டுகளை ரத்து செய்து, ரசிகர்களுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கவும் காலஅவகாசம் இருந்திருக்கும். அதிகாரிகள் காலம்கடந்து எடுத்த நடவடிக்கை காரணமாக, அதன் நோக்கம் நிறைவேறாமல் போனது. தற்போது அதே அரங்கில் ரசிகர்கள் அமர்ந்து பார்வையிட நேர்ந்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, கிரிக்கெட் வளர்ச்சிக்கானதும் அல்ல. அரசுக்கு வரி வருவாய் தரும் கேளிக்கை நிகழ்வும் அல்ல; சில தொழில் அதிபர்களின் பெருலாபத்துக்கு நடத்தப்படுவது. கிரிக்கெட் இவர்களுக்கு விளையாட்டல்ல. பெரும் பணம் சம்பாதிக்க நடத்தப்படும் சூதாட்டம். அரசியல் பினாமிகளின் சரணாலயம்தான் ஐ.பி.எல். என்பதால் அரசின் ஆணைக்கு இவர்களால் ஒரே நாளில் நீதிமன்றத் தடை பெற முடியும்; தவறுகளை நேர்படுத்த முடியும்; கட்டட விதிமீறல்களை முறைப்படுத்திடவும் முடியும்!
நாம் குற்றம் சாட்ட வேண்டியது நமது நீதிமன்றங்களைத்தான். விதிமுறைமீறல் கட்டடங்கள், ஆக்கிரமிப்புகள், நடைபாதைக் கடைகள் போன்ற சட்ட மீறல்களுக்குத் துணைபோகும் விதத்தில் அவர்கள் அவ்வப்போது வழங்கும் தாற்காலிகத் தடைதான் பலருக்கும் விதிமீறல் செய்யும் துணிவைத் தருகிறது. அரசியல்வாதிகளும் அரசும் துணையாக நின்றாலும், நீதிமன்றம் தெளிவாகவும் துணிவாகவும் இந்தப் பிரச்னைகளில் முடிவுகளை வழங்கினால் தவறுகள் நிகழாது. சட்டம் ஒழுங்குப் பிரச்னையை அரசு பார்த்துக் கொள்ளட்டும். நீதிமன்றங்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முனைப்புக் காட்டுவதுதான் நியாயம். ஐ.பி.எல். போட்டி நடக்காவிட்டால் குடிமுழுகிவிடாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.