புற்று - முற்றவிடக் கூடாது!

ஊடகங்களில் இப்போது பேசப்படும் செய்தியாக இருப்பது, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனக்கு முலைப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 70 சதவீதம் இருப்பதை மருத்துவச் சோதனைகளில் அறியவந்ததால் தனது இரு மார்பகங்களிலும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் என்பதுதான்.
Updated on
2 min read

ஊடகங்களில் இப்போது பேசப்படும் செய்தியாக இருப்பது, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனக்கு முலைப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 70 சதவீதம் இருப்பதை மருத்துவச் சோதனைகளில் அறியவந்ததால் தனது இரு மார்பகங்களிலும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் என்பதுதான். (முலைப்புற்றுநோய் என்றால் ப்ரெஸ்ட் கேன்சர். மார்பகப் புற்றுநோய் என்றால் தொராசிக் கேன்சர்.)

"மார்க்கெட் சரிவை' விரும்பாத எந்த ஒரு பிரபல நடிகையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கும் இந்த அறுவைச் சிகிச்சையை ஏஞ்சலினா ஜூலி உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லக் காரணம் - மருத்துவ வணிகம்தானே தவிர, மகளிர் நலன் அல்ல.

உலகில் உள்ள எல்லாப் பெண்களும் தங்களுக்கு முலைப்புற்று நோய்க்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள இந்த மருத்துவப் பரிசோதனையைச் செய்ய வேண்டும் என்பதும், இதனால் இந்தச் சோதனையைச் செய்யும் மருத்துவமனைகள் மற்றும் இதற்கான மருத்துவக் கருவிகளை, தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை பெற்றுள்ள நிறுவனங்கள் லாபம் பெற வேண்டும் என்பதும்தான் ஜூலியின் வெளிப்படையான ஒப்புதலுக்குப் பின்னணியில் உள்ள மருத்துவ உண்மை.

இந்தியாவில், சில கிரீம்களை பூசிக்கொண்டால் முகத்தின் நிறம் அல்லது கரும்புள்ளி நீங்கி, "டல்' திவ்யா-க்கள் பிரகாசமாக ஆகிவிடுவதும், குறிப்பிட்ட ஊட்டச்சத்தை சாப்பிட்ட பிறகு குழந்தைகள் வேகமாக பனியன் சிறுத்துக் கிழியும் அளவுக்கு வளர்ந்துவிடுவதும், குழந்தை அதிக மதிப்பெண் வாங்குவதுமாக நிறைய விளம்பரங்கள், நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் கொண்டு தயாரிக்கப்படும் விளம்பரங்களைப் போன்றதுதான் ஏஞ்சலினா ஜூலியின் மருத்துவ அறுவைச் சிகிச்சையும்!

முலைப்புற்று நோயை ஏற்படுத்தும் மரபீனி "பிஆர்சிஏ-1', "பிஆர்சிஏ-2' ஆகியவற்றை அறிந்து, அதன் மூலம் நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று கணிக்கிறார்கள். ஏஞ்சலினா ஜூலியின் மனம் திறந்த பேட்டியால் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களிடையே இதற்கான விழிப்புணர்வு ஏற்படலாம். வியாபாரமும் நடக்கலாம். ஆனால் இந்தியாவில் முலைப்புற்று நோய்க்கு ஆளாகியிருப்பதை அறிந்துகொள்ளவும் இயலாத நிலையில் பெண்கள் இருக்கிறார்கள் என்கிற நிலையில், நாம் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

இந்தியாவில் 2011-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, ஆண்டுதோறும் முலைப்புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 1.15 லட்சம். இது 2015-ஆம் ஆண்டு 2.5 லட்சமாக உயரும் என்று கணிக்கப்பட்டது. குறிப்பாக பெருநகர வாழ்க்கைச் சூழல் காரணமாக, இந்நோயால் பாதிக்கப்படும் பெண்கள் சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் அதிகமாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டது.

இந்தியாவில் அதிகமாகக் காணப்படுவது கருவாய் புற்றுநோய் (செர்விகல் கேன்சர்), முலைப்புற்று நோய் இரண்டும்தான். இதற்கு அடுத்த நிலையில்தான் வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய் போன்றவை.

முலைப்புற்று நோய் இருப்பதைத் தொடக்க நிலையிலேயே கண்டறியும் "மம்மோகிராபி' சோதனைக்கு இந்தியாவில் மருத்துவமனைக்கு ஏற்ப ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியப் பெண்கள் தங்களுக்கான நோயைச் சகித்துக்கொண்டு வாழ்க்கையைத் தொடருவதால், தாங்கமுடியாத நிலையில் மட்டுமே அதைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால், தொடக்கநிலையில் இந்த நோயைக் கண்டறிந்து, கதிர்வீச்சு மூலம் குணப்படுத்தும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர்.

இந்திய புற்றுநோய்க் கழகம் மற்றும் பல்வேறு சமூக சேவை அமைப்புகளின் மூலம் எல்லா மாநிலங்களிலும் நடமாடும் மம்மோகிராபி வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் பரவலாகப் பெண்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டது உண்மை என்றாலும், இது முழுமையாக நடைபெறவில்லை என்பதோடு, இந்த வாகனம் தங்கள் பகுதிக்கு வருவது குறித்த விழிப்புணர்வும், இந்தச் சோதனையைப் பெண்கள் செய்து கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பானது என்கின்ற பரப்புரையும் இல்லாததால் இத்திட்டத்தால் பயன்அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருந்தது.

முலைப்புற்று நோய்க்குக் காரணம் துல்லியமாகத் தெரியவரவில்லை. இருப்பினும், இதற்கான அடிப்படைக் காரணமாக கருதக்கூடியவை, 30 வயதுக்குப் பின்னர் திருமணம் செய்தல், குழந்தை பெறுவதை பல ஆண்டுகள் தள்ளிப்போடுதல், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்த்தல் ஆகிய மூன்றும்தான். இதில் முதல் இரு காரணங்களும் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரம் சார்ந்தவையாக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் இலவசமாக மம்மோகிராபி மற்றும் கருவாய்ப் புற்றுக்கான சோதனைகளை நடத்துவது மிகவும் அவசியம். தமிழக அரசு இதற்கான நடவடிக்கையை எடுப்பது சிரமமான செயல் அல்ல.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உதவியுடன் தமிழ்நாடு முழுவதும், அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெண்களுக்கு இந்த இரு சோதனைகளையும் நடத்தலாம். மேலும், இத்தகைய சோதனைகளை நடத்துவதற்கான செலவுத் தொகையைப் பங்கிட்டுக் கொள்ள மத்திய சுகாதாரத் துறையும், உலக அளவிலான பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முன்வரக்கூடும். இந்தியப் புற்றுநோய்க் கழகத்தின் ஆலோசனைகளைப் பெற்று இதைத் தமிழக அளவிலாவது நாம் செய்ய வேண்டியது அவசியம்.

தமிழகத்தை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக்குவதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com