சமுதாய அலட்சியம்

இருநாள்களுக்கு முன்பு தஞ்சாவூரில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக உள்ளே இறங்கிய இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர்.
Updated on
2 min read

இருநாள்களுக்கு முன்பு தஞ்சாவூரில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக உள்ளே இறங்கிய இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். தமிழ்நாட்டில் இத்தகைய மரணங்கள் அடிக்கடி நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்த மரணங்கள், "விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' என்பதாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதாவது இவை தொழிற்சாலை விபத்து போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகின்றது. இவர்கள் தொழிலாளர்கள் என்றாலும்கூட, ஒரு தொழிற்கூடத்தில் ரசாயனத் தொட்டியைக் கழுவும்போது ஏற்படும் விபத்தையும் சாக்கடையைத் துப்புரவு செய்வதையும் ஒன்றுபோல எப்படிக் கருத முடியும்? முதலாவது

எதிர்பார்க்காத தொழிற்சாலை விபத்து என்றால், சாக்கடைக்குள் மனிதர் இறங்குவதால் ஏற்படும் மரணம், சமுதாய அலட்சியத்தால், அதிகாரிகள் அரசு அறிவுறுத்தலைப் புறக்கணிப்பதால் ஏற்படும் ஒன்று.

கடந்த இரு ஆண்டுகளில் ஆங்காங்கே ஒருவர், இருவர் என இருபதுக்கும் மேற்பட்டோர் சாக்கடை அல்லது "செப்டிக் டேங்க்' பணிகளின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், இவர்களுக்கு எத்தகைய காப்பீடு உள்ளது அல்லது இவர்களது குடும்பத்துக்கு எத்தகைய இழப்பீடு வழங்கப்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக இருக்கிறது. நகராட்சி அல்லது மாநகராட்சி துப்புரவுப் பணியாளராக இருந்தால், குடும்ப நலநிதியாக ரூ.1.5 லட்சம் உடனடியாக வழங்கப்படும்.

தஞ்சை சம்பவத்தைப் பொருத்தவரையில், இவர்கள் தஞ்சை மாநகராட்சியின் துப்புரவு ஊழியர்கள் அல்லர். அயல்பணி ஒப்பந்தத்தில் இந்தப் பணி தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் கூலிக்கு வேலை செய்யும் நபர்கள்தான் மரணமடைந்த இருவரும். ஆகவே, அரசு இந்த மரணத்துக்குப் பொறுப்பேற்காது. அயல்பணி ஒப்பந்தத்தில் இத்தகைய மரணங்கள் நேர்ந்தால் பெரும்பாலான நகரங்களில் இவர்களுக்கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்து கதையை முடித்துவிடுகிறார்கள் என்பதே உண்மை.

இத்தகைய மரணங்களில் அயல்பணி ஒப்பந்ததாரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தங்களில் தெளிவாகக் குறிப்பிடப்படுவதே இல்லை.

அயல்பணி ஒப்பந்தம் என்றாலும்கூட, புதை சாக்கடை அடைப்புக்கு உள்ளானால் அதனை இயந்திரம் வைத்துதான் துப்புரவு செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத தருணங்களில், புதை சாக்கடைக்குள் இறங்குபவர், இது குறித்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்திருப்பவராக இருக்க வேண்டும். தஞ்சையில், இவர்கள் இறக்க நேர்ந்த புதை சாக்கடையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர், முதலில் எரியும் விளக்கை உள்ளே இறக்கி, அது அணைந்துபோனதால், ஆக்ஸிஜன் குழாய்களுடன் இறங்கியுள்ளனர் என்று சொன்னால், இறந்த தொழிலாளர்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கை பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்பது தெரிகிறது.

பணியின்போது இதுபோன்ற துப்புரவுப் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களுக்காக எத்தகைய இழப்பீடு தரப்படும் என்பது போன்ற நிபந்தனைகள் இந்த ஒப்பந்தங்களில் சட்டப்பூர்வமாக வலியுறுத்தப்படுவதில்லை. அப்படிப்பட்ட நிலையில் தனியார் நிறுவனங்களிடம் அயல்பணி ஒப்பந்தமாக இதுபோன்ற வேலைகளை ஒப்படைப்பது ஈவிரக்கமில்லாத செயலாகத்தான் இருக்க முடியும்.

இப்போதெல்லாம் எல்லா மாநகராட்சிகளிலும் துப்புரவுப் பணிகள் அனைத்தும் அயல்பணி ஒப்பந்தமாக மாற்றப்பட்டு வருகின்றன. பாதிக்கும் மேற்பட்டோர் அயல்பணி ஒப்பந்த நிறுவனத்தின்கீழ், வாரச் சம்பளம், அல்லது மாதச் சம்பளம் பெறுவோராக இருக்கின்றனர். இவர்களுக்கு எந்தச் சலுகைகளும் கிடையாது. துப்புரவுத் தொழிலுக்குரிய கருவிகள், கையுறைகள், பிரத்யேக ஆடைகள் அந்தந்த நாளுக்கு தரப்பட்டு திரும்பப் பெறப்படுகின்றன. வேறு எந்தவிதமான காப்பீடு திட்டமும், எதிர்கால வைப்புநிதியும் இவர்களுக்குக் கிடையாது.

திறந்த கழிவுறைகள் ஒழிப்புக்கு 1993-ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. மனித மலத்தை மனிதர் அள்ளும் அவலநிலை முடிவுக்கு வந்ததாகப் பேசப்பட்டது. ஆனால், அவ்வாறாக இல்லை. இன்னும் பல இடங்களில் அது நடந்துகொண்டுதான் இருக்கின்றது. மிக அப்பட்டமாக நாம் காணக்கூடிய இடம் ரயில் நிலையம். ரயில்நிலைய தண்டவாளங்களில் மலத்தை அகற்றும் தொழிலில் மனிதர்கள்தான் இன்றும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் ரயில்வே ஊழியர்கள் அல்லர். அயல்பணி ஒப்பந்ததாரர்களிடம் பணிபுரிபவர்களே, தண்டவாளங்களுக்கு இடையே தூய்மை செய்யும் பணியை மேற்கொள்கின்றனர்.

இந்த வேலையை இவர்கள் செய்யாவிட்டால், வேறு யாரைக் கொண்டு செய்வது? வேறுஎப்படி சாக்கடையைச் சுத்தப்படுத்த முடியும்? இது அவர்களுக்கு ஒரு தொழில் என்றெல்லாம் பலர் வாதிடுகின்றனர். துப்புரவுப் பணியை அறிவியல்பூர்வமாக, ஆபத்து இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியும், அதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது நாம் ஏன் அதைப் பயன்படுத்துவதே இல்லை என்பதுதான் நமது கேள்வி.

புதைசாக்கடை, அல்லது தொழிற்சாலையின் ரசாயானத் தொட்டி என எதுவாக இருந்தாலும், இயந்திரத்தால் முடியாது அதை மனித உழைப்பின் மூலம்தான் செய்ய முடியும் என்ற கட்டாயச் சூழ்நிலையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்கின்ற நிபந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்தப் பணியைத் தொடங்கும் முன்பாக, அந்த இடத்தில் மனிதர் இறங்கலாமா? ஆக்ஸிஜன் உள்ளதா? என்பதை சோதிக்க ரசாயன வல்லுநர்களை அங்கே நிறுத்தவும், உள்ளே இறங்குபவர் போதுமான மூச்சுக்கவசங்களுடன் பணியில் ஈடுபடவும் செய்வதில் என்ன பெருஞ்செலவு ஏற்படப் போகிறது!

அடித்தட்டு மக்கள்தானே என்கிற அலட்சியப் போக்கு நமக்கு எப்போதுதான் மாறுமோ? இறைவனுக்குத்தான் வெளிச்சம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com