நமக்கு உரிமையில்லை...

ஒற்றாடல் என்பது ராஜதந்திர உத்திகளில் ஒன்று. அப்படி இருக்கும்போது, என்.எஸ்.ஏ. எனப்படும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அமைப்பு, பல நாட்டு தலைவர்களின் பேச்சுகளை ஒட்டுக் கேட்டிருக்கிறது என்கிற செய்தி, இந்த அளவுக்குப் பரபரப்பாக வேண்டிய அவசியம்தான் என்ன?
Updated on
2 min read

ஒற்றாடல் என்பது ராஜதந்திர உத்திகளில் ஒன்று. அப்படி இருக்கும்போது, என்.எஸ்.ஏ. எனப்படும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அமைப்பு, பல நாட்டு தலைவர்களின் பேச்சுகளை ஒட்டுக் கேட்டிருக்கிறது என்கிற செய்தி, இந்த அளவுக்குப் பரபரப்பாக வேண்டிய அவசியம்தான் என்ன?

இருக்கிறது. இந்தியாவைப் போன்ற வளர் பொருளாதார நாடுகளின் தலைவர்களையும், அரசு ரகசியங்களையும் அமெரிக்கா உளவு பார்த்தபோதும் ஒட்டுக் கேட்டபோதும் கொதித்தெழாத உலகம் இப்போது வியப்படைவதற்குக் காரணம், அமெரிக்கா வேவு பார்த்திருப்பது அதன் நட்பு நாடுகளையும் சேர்த்து என்பதுதான். நட்பு நாடுகள் என்பது மட்டுமல்ல, அமெரிக்கர்களைப் போலவே வெள்ளை சருமம் கொண்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் என்பதுதான் இத்தனை பரபரப்புக்கும், விமர்சனத்திருக்கும் காரணம்.

அமெரிக்க உளவுத் துறையில் பணியாற்றி அங்கிருந்து திருட்டுத்தனமாகத் தான் களவாடி வந்த பல ரகசியத் தகவல்களை, இப்போது ரஷியாவில் அடைக்கலம் தேடி இருக்கும் எட்வர்ட் ஸ்நோடன் வெளியிட்டிருக்கிறார். பிரிட்டனிலிருந்து வெளிவரும் "கார்டியன்' மற்றும் பிரான்சிலிருந்து வெளிவரும் "லி மோன்டி' நாளிதழ்களின் தகவல்படி உலகிலுள்ள 35 நாடுகளின் தலைவர்களது தொலைபேசிகள் அமெரிக்க உளவுத் துறையான என்.எஸ்.ஏ.வால் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. ஏறத்தாழ 70 கோடி தொலைபேசி அழைப்புகள் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

உலகளாவிய அளவிலுள்ள அமெரிக்கத் தூதரகங்கள், என்.எஸ்.ஏ.வின் உளவு பார்க்கும் பணியில் உதவியாக இருந்திருக்கின்றன என்பது வியப்பைத் தரவில்லை. காரணம் அமெரிக்காவும் ரஷியாவும் (முன்னாள் சோவியத் யூனியன்) பிரிட்டனும் உலகளாவிய அளவில் உளவாளிகளை வைத்திருக்கிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம்தான்.

இரண்டாம் உலகப்போர் முடிந்த கையோடு 1946-இல் "ஃபைவ் ஐஸ்' (ஐந்து கண்கள்) என்கிற பெயரில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உளவு பார்ப்பதில்லை என்றும், பிற நாடுகளைப் பற்றிய ரகசியத் தகவல்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதென்றும் ஒப்பந்தம் செய்து கொண்டன. அந்த ஒப்பந்தத்தையேகூட அமெரிக்கா மீறியிருக்கக் கூடும் என்பதுதான் இப்போதைய சந்தேகம்.

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான ஜெர்மனியும், பிரான்ஸýம் தங்களது தலைவர்கள் வேவு பார்க்கப்பட்டிருப்பதில் அதிர்ச்சி அடைந்திருப்பதில் நியாயம் இருக்கிறது. இப்போது, தங்களுடனும் பரஸ்பரம் உளவு பார்ப்பதில்லை என்கிற ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்து கொள்ள வேண்டும் என்கின்றன ஜெர்மனியும் பிரான்ஸýம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஒரு பகுதியாகத்தான், தங்களது பாதுகாப்பைக் கருதி தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், பிற நாடுகள் உளவு பார்க்கப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவிக்கிறது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, தங்களது உளவுத்துறை வரம்பு கடந்து விட்டதாகவும், சில விதிமுறைகளையும் கட்டுப்பாட்டையும் விரைவிலேயே ஒபாமா அரசு விதிக்கும் என்றும் பிரச்னைக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். இது ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளை திருப்திப்படுத்தவும் அந்த நாடுகளின் நட்பு முறிந்துவிடாமல் இருப்பதற்காகவும்தான் என்பது தெளிவு.

இதையெல்லாம்விட மிகப்பெரிய பேராபத்து ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது. அமெரிக்காவின் என்.எஸ்.ஏ., கூகுள், பேஸ்புக், மைக்ரோசாஃப்ட் போன்ற இணையதளக் கருத்து மற்றும் செய்திப் பரிமாற்றங்களையும் உள்ளே புகுந்து உளவு பார்த்து வருகிறது என்பதுதான் அது. அந்த நிறுவனங்களின் துணையில்லாமல் அது நடந்திருக்கும் என்பதை நம்ப முடியவில்லை.

கையிலே செல்பேசி, பையிலே கடன் அட்டை, வங்கியில் கணக்கு, இணையதளத்தில் கூகுள் அல்லது பேஸ்புக் உறுப்பினராக இருப்பது - இவைபோதும் நமது தனிப்பட்ட விவரங்களும், ரகசியங்களும் பொது விவரங்களாவதற்கு. இந்தச் சூழ்நிலையில் அமெரிக்கா உளவு பார்க்கிறது என்று சொன்னால், ஆமாம், உளவு பார்க்கிறது அவ்வளவே...

நாம் தொழில்நுட்பத்தின் அடிமைகளாகிவிட்ட நிலையில் தனிமனித சுதந்திரம், தனிமனித ரகசியம் போன்றவை அர்த்தமற்றதாகிவிட்டன. சாமர்த்தியசாலி உளவு பார்க்கிறான். ஏமாளி ஏமாறுகிறான். பிரேசில் அதிபர் தில்மா ரோசெபுக்கு இருக்கும் துணிவு ஏனைய தலைவர்களுக்கும் இருக்குமானால் மட்டுமே இன்றைய உலகில், ஒரு நாட்டை இன்னொரு நாடு உளவு பார்ப்பதைத் தடுக்க முடியும்.

அதெல்லாம் கிடக்கட்டும். தனிமனித பேச்சு, கருத்து உரிமையின் குரல்வளையை நெரிக்கும் சர்ச்சைக்குரிய இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ,பி,சி பிரிவுகளை இந்திய அரசு எப்போது அகற்றப் போகிறது? இப்படியொரு சட்டப் பிரிவை வைத்துக்கொண்டு அமெரிக்காவை குற்றம்சாட்டும் தார்மிக உரிமை நமக்குக் கிடையாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com