சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு திங்களன்று வெற்றிகரமாக முடிந்தது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் பஸ்தர், ராஜ்நந்த்கான் மாவட்டங்களில் நடந்த வாக்குப் பதிவில் 67% வாக்காளர்கள் கலந்துகொண்டு, ஜனநாயகக் கடமை ஆற்றியிருக்கிறார்கள் என்பது சாதாரண விஷயமல்ல. சில வாக்குச் சாவடிகளில் 75% வாக்குகள் பதிவாகி இருப்பதாகத் தெரிகிறது. இத்தனைக்கும், வாக்களிக்கக் கூடாது என்று மாவோயிஸ்டுகள் தடை விதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நடந்த முதல் கட்ட வாக்குப் பதிவில் 143 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். தேர்தலில் வேட்பாளராக நிற்கக்கூடாது என்கிற தடையை மீறி களமிறங்கினர் இந்த வேட்பாளர்கள். கடந்த 2008 தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 66% ஆக இருந்த வாக்குப்பதிவு இப்போது 67% ஆக உயர்ந்திருக்கிறது என்றால், அதற்காக சத்தீஸ்கர் மக்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நாம் நன்றிகூறக் கடமைப்பட்டவர்கள்.
தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமல்லாமல், பாதுகாப்புப் படையினருக்கும், அடிமட்ட மாநில அரசு ஊழியர்களுக்கும்கூட இந்த வெற்றியில் பங்குண்டு. ஏறத்தாழ 5,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் பணியினர் எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடாமல் பாதுகாத்தனர்.
கடந்த 2008-ஆம் ஆண்டில் தேர்தல் நடந்தபோது, 16 இடங்களில் குண்டுகள் வெடித்தன. ஒன்பது பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். 23 இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தூக்கிச் செல்லப்பட்டன. இந்தமுறை ஜவான் ஒருவர் காயம் பட்டது மட்டும்தான் தீவிரவாதிகளின் சாதனை.
மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்பட்ட தந்தேவாடாவில் கடந்த முறை 55% வாக்குப்பதிவு என்றால் இப்போது அது 67% ஆக அதிகரித்திருக்கிறது. அதற்காக நிலைமை முற்றிலும் கட்டுக்கடங்கி விட்டதாகவோ, மாவோயிஸ்டுகளின் பிடியிலிருந்து சத்தீஸ்கர் விடுபட்டுவிட்டதாகவோ பொருளில்லை. அடர்ந்த வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் எச்சரிக்கை எதிரொலித்த வண்ணம்தான் இருந்திருக்கிறது. அதையும்மீறி அங்கிருந்த மக்கள் தேர்தலில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
பீஜப்பூர், கோண்டா, அண்டகர் பகுதிகளில் முறையே 24, 40, 58 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. சுமார் 15 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குகூடப் பதிவாகவில்லை. அங்கே எல்லாம் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் தொடர்கிறது என்பதன் அறிகுறிதான் இது.
அப்படி இருந்தும் இந்தப் பகுதியின் ஒட்டுமொத்த வாக்குப் பதிவு 11 விழுக்காடு அதிகரித்திருப்பது என்பது உற்சாகம் தரும் செய்தி. மாவோயிஸ்டுகளின் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, மங்கள்கிரி, சுக்மா மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களைக் கடத்திச் சென்றது முதலே, மாவோயிஸ்டுகள் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் ஆதரவு குறைவதாலேயே மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளும் பலமிழந்து வருகின்றன என்பதுதான் யதார்த்த நிலைமை.
மாவோயிஸ்டுகளிடமிருந்து இந்தப் பகுதிகளை முற்றிலுமாக மீட்டெடுப்பதற்கு அரசுக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான வாய்ப்பு இது. அடுத்த மாதம் முடிவு வெளிவந்து எந்தக் கட்சி சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க முடிந்தாலும், அந்த ஆட்சி, மக்கள் அளித்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமானதாக நடந்துகொண்டு முற்றிலுமாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தாக வேண்டும்.
தேர்தல் முடிவுகள் முழுமையான உண்மையைத் தெளிவுபடுத்தி விடுவதில்லை. பல பிரச்னைகள் வெளிப்படையாகத் தெரியாமலேகூட இருக்கக்கூடும். அதற்கெல்லாம் முறையான தீர்வு கண்டு மக்களின் முழு நம்பிக்கையை அரசு மீட்டெடுத்தால் மட்டுமே, இப்படிப் பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் ஜனநாயக முறையிலான தேர்தலை நடத்தும் முரண் அடுத்த தேர்தலில் அரங்கேறாமல் தவிர்க்க முடியும்.
உலகளாவிய அளவில் மக்களுக்கு தேர்தலில் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் குறைந்துதுவரும் வேளையில், நமது இந்தியாவில் மட்டும் வாக்குப் பதிவு 65 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்து வருவது சற்று ஆறுதலளிக்கிறது. இதற்குக் காரணம், சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் பணம் விநியோகிக்கப்படுவதுதான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படி இருக்குமானால், அதிகமாக பண விநியோகம் செய்யும் ஆளும் கட்சிகள் தோற்கடிக்கப்படுகின்றனவே, அது எப்படி?
மக்களாட்சித் தத்துவத்தில் மக்கள் இன்னும் நம்பிக்கை இழந்துவிடவில்லை. அவர்களது நம்பிக்கையை நமது அரசியல்வாதிகள் குலைத்து விடாமல் இருப்பார்களாக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.