இந்திய கடற்படையின் வலிமையைக் கூட்டுவதற்கு ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்கிற போர்க் கப்பல் ரஷ்யாவிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. போர்க் கப்பலின் ஆயுள்காலம் என்பது பொதுவாக 25 ஆண்டுகள்தான். இந்தியாவின் முதல் போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த், 1961இல் கடற்படையால் பெறப்பட்டு 1990 வரை மிகப் பெரிய பங்களிப்பு நல்கி ஓய்வு பெற்றது. 1987இல் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விராட் என்கிற போர்க் கப்பலை நமது கடற்படை வாங்கியது. கடந்த ஆண்டுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய அந்தப் போர்க் கப்பல், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவின் வரவை எதிர்பார்த்து ஓய்வு பெறக் காத்திருக்கிறது.
மாறிவிட்ட தற்காப்புச் சூழலிலும் அதிகரித்துவிட்ட தேவையினாலும் இந்தியா இனியும் நமது எல்லையைப் பாதுகாக்க ஒரே ஒரு போர்க் கப்பலுடன் சமாதானப்பட்டுக் கொள்ள முடியாது. இந்தியாவின் இருபுறங்களிலும் உள்ள அரேபியக் கடலிலும், வங்காள விரிகுடாக் கடலிலும் எந்த நேரமும், விமானப் படைக்கு உறுதுணையாக இருக்க இரண்டு கப்பல்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. அந்தக் குறையை அகற்ற, முதன்முதலாக நாமே தயாரித்த ஐ.என்.எஸ். விக்ராந்த் என்கிற புதிய போர்க் கப்பலை 2018இல் செயல்பாட்டுக்குக் கொண்டு வர இருக்கிறோம். ஐ.என்.எஸ். விராட் ஓய்வு பெற்று, புதிய ஐ.என்.எஸ். விக்ராந்த் கடலில் மிதப்பதற்கு இடைப்பட்ட கால கட்டத்தில் இந்தியாவின் கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதிசெய்ய ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இத்தனை பெரிய பொருள் செலவில் இந்தியாவுக்கு போர்க் கப்பல்கள் தேவைதானா என்றும், உள்ளூரில் எத்தனை எத்தனையோ பொருளாதாரப் பிரச்னைகள் இருக்கும்போது, பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள போர்க் கப்பல்களை வாங்கிக் கடலில் மிதக்க விடுவதில் என்ன லாபம் என்றும் கேட்பது அர்த்தமற்ற வாதம். கிழக்கே மலாக்கா ஜலசந்தியில் தொடங்கி மேற்கே ஏடன் வளைகுடா வரையிலான கடல் பகுதிகளைக் கண்காணிப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமாகிறது. கடல்வழித் தாக்குதல் அல்லது ஆபத்துக்களுக்கு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் ஓர் உதாரணம். பொருளாதார ரீதியாகவும், இந்தியாவின் வளர்ச்சிக்கு பலமான கடற்படை இருப்பது அவசியமாகிறது.
இந்தியாவின் பெருவாரியான ஏற்றுமதியும், இறக்குமதியும் கடல்மார்க்கமாகத்தான் நடைபெறுகின்றன என்பதும், சோமாலி கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் நமது ஏற்றுமதி இறக்குமதியின் போக்குவரத்துச் செலவினத்தைக் கணிசமாக அதிகரிக்கிறது என்பதும், பாதுகாப்பான கடல்வழிப் பாதையை உறுதிப்படுத்துவதை இன்றியமையாததாக்கி இருக்கிறது. அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாக் கடலிலும் சரக்குக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்தால் மட்டுமே இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்கிற நிலையில், கடற்படைக்காக நாம் செய்யும் செலவினங்களை முதலீடாகத்தான் கருத வேண்டும்.
ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யாவின் வரவாலும், 2018இல் கடலில் செலுத்த இருக்கும் ஐ.என்.எஸ். விக்ராந்தாலும் மட்டுமே நமது கடல் எல்லைகள் பாதுகாப்பாகிவிடும் என்று சொல்வதற்கில்லைதான். அணுசக்தியில் இயங்கும் ஐ.என்.எஸ். அரிஹந்த் என்கிற நீர்மூழ்கிக் கப்பல் எப்போது கடற்படைச் சேவைக்குப் பெறப்படும் என்பதும், இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். அந்தமானின் நிலை என்ன என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. அவை பெறப்பட்டால், தற்போது இந்திய கடற்படையில் இருக்கும் டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் படையின் பலம் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. நமது கடற்படை, கப்பல் போக்குவரத்து, கடற்கரைப் பாதுகாப்பு அனைத்துக்குமே நீர்மூழ்கிக் கப்பல்களின் தேவையும் மிகவும் அவசியம்.
இத்தனை ஆண்டுகளாக இந்து மகா சமுத்திரம் உள்ளிட்ட உலகக் கடல் மார்க்கம் முழுவதிலும் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் உலவி வந்தன. அவை கடல் பாதுகாப்பை உறுதி செய்தன. கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா தனது கண்காணிப்பு எல்லையை அட்லாண்டிக் மற்றும் பசுபிக் கடல் பரப்புடன் சுருக்கிக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது என்பதும்கூட, அதிகரித்து வரும் சோமாலிய கடற்கொள்ளைகளுக்கு ஒரு காரணம்.
இப்படிப்பட்ட சூழலில், இந்தியா தனது கடற்படையை பலப்படுத்துவதும், நவீனமயமான போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் மிகவும் அவசியம். அதன் மூலம் மட்டுமே, தெற்காசிய நாடுகளின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்வதுடன், இந்து மகா சமுத்திரத்தை இந்தியாவின் கண்காணிப்பிலும் கட்டுப்பாடிலும் வைத்திருக்கவும் முடியும். இல்லையென்றால், இந்து மகா சமுத்திரம் சீன கடற்படையின் ஆதிக்கத்தில் அகப்பட்டுக் கொள்ளும் ஆபத்து காத்திருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

