நுகர்வோர் நலனுக்கு முன்னுரிமை!

தனியார் மருத்துவமனைகள் ஒவ்வொரு சிகிச்சைக்கும் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு என்பதை மக்கள் பார்க்கும்படி எழுதி வைக்க வேண்டும் என்று அண்மையில் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Updated on
2 min read

தனியார் மருத்துவமனைகள் ஒவ்வொரு சிகிச்சைக்கும் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு என்பதை மக்கள் பார்க்கும்படி எழுதி வைக்க வேண்டும் என்று அண்மையில் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதாவது, ஓட்டலில் உணவுப் பண்டங்களுக்கான விலை எழுதப்பட்டிருப்பதைப் போல எழுதி வைக்க வேண்டும். பத்து ரூபாய்க்கு காபி விற்கும் ஓட்டல்களும் இருக்கின்றன. ஒரு காபிக்கு ரூ.50, ரூ.100, ரூ.150 என நிர்ணயிக்கும் காபி ஷாப்புகளும் இருக்கின்றன. தேர்வு நுகர்வோரைச் சார்ந்தது. அதே செளகரியம், அதே வெளிப்படைத்தன்மை மருத்துவமனைகளிலும் வேண்டும் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது.

கட்டணம் முழுவதையும் வசூலிக்காமல் நோயாளியை அல்லது சடலத்தை வெளியே விடுவதில்லை என தனியார் மருத்துவமனைகள் பிடிவாதம் செய்ததும், அதனால் ஏற்பட்ட தகராறுகளும், இதைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வழக்குகள் வந்ததும்தான் இதற்குக் காரணம்.

ஒரு தனியார் மருத்துவமனையைப் பொருத்தவரை, தான் அளிக்கும் சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயிப்பது அதன் விருப்பம். ஆனால், ஒரு நோயாளி, அங்கே சிகிச்சை பெறுவதா, வேண்டாமா என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொண்டு, பிறகு அந்த மருத்துவமனைக்குள் கால் வைப்பதுதான் பிரச்னைகளும், மனவருத்தங்களும், சிக்கல்களும் இல்லாததாக அமையும்.

மருத்துவக் கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்கப்படும் நிலை இல்லாததால், நடுத்தர வருவாய்ப் பிரிவினர் படும் துன்பம் சொல்லொணாதது. ஒரு சிறிய மருத்துவமனையில் நடைபெறும் சிசேரியனுக்கு குறைந்தது ரூ.30,000 வாங்குகிறார்கள். அதன் பிறகு, குழந்தையைப் பரிசோதிக்க, சிறப்பு மருத்துவர்கள் முடிவற்று வந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு வருகைக்கு, அதாவது முழுதாக இரண்டு நிமிடம்கூட இடம் பெறாத வருகைக்கு, இவர்களுக்கு அந்த மருத்துவமனையில் ரூ.1,000 வரை கணக்கு எழுதப்படுகிறது. குறைந்தது ரூ.50,000 வரை இழுக்காமல் விடுவதில்லை என்கிற நிலைமை அனைத்து நகரங்களிலும் காணப்படுகிறது.

கண் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ள ரூ.100 வாங்குகிறார்கள். ஆனால், அதற்கான கண் கண்ணாடி பரிந்துரைக் கடிதம் நேரடியாக, அங்கே இருக்கும் "ஆப்டிகல்ஸ்' கடைக்குத்தான் போகிறது. கண் கண்ணாடியை அங்கேயே வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்குகிறார்கள். இது நுகர்வோர் மீதான அப்பட்டமான திணிப்பல்லவா?

சில தனி ஆலோசனை மருத்துவமனைகளில், அவர்கள் அங்கேயே நடத்தும் "பார்மஸி' யில்தான் நோயாளிகள் மருந்து மாத்திரைகளை வாங்க வேண்டும். டாக்டர் எழுதிக் கொடுத்த அனைத்து மருந்துகளையும் வாங்கும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதே மருந்தை அம்மா மருந்தகத்தில் குறைந்த விலையில் வாங்க விரும்பினாலும், அவர்கள் விடுவதில்லை.

இன்று மருத்துவம் வெறும் சேவை மட்டுமல்ல, அது ஒரு வணிகமும்கூட என்றாகிவிட்ட பின்னர், அது நுகர்வோர் தேர்வுக்கு உள்பட்டதாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு மருத்துவமனையும் தனக்கான கட்டணம் எவ்வளவு என்பதை வெளிப்படையாக எழுதி வைப்பதுதான் நியாயமான நடைமுறை.

அதேபோன்று, அரசிடம் மருத்துவமனை கட்டுவதற்காக நிலம் வாங்கியிருந்தால் அல்லது சொத்து வரி விலக்கோ, சலுகையோ பெற்றிருந்தால், அத்தகைய மருத்துவமனைகள் குறிப்பிட்ட விழுக்காடு படுக்கைகளை நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று 2011-இல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. தில்லியில், இத்தகைய சலுகை பெற்ற 47 தனியார் மருத்துவமனைகளில், நலிந்த பிரிவினரான வெளிநோயாளிகள் 25 விழுக்காட்டினருக்கும், உள்நோயாளிகள் 10 விழுக்காட்டினருக்கும் இலவசமாகச் சிகிச்சைத் தரப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த நடைமுறை சில கண் மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. பொது மருத்துவ சிகிச்சை அளிக்கும் இடங்களில் இருப்பதில்லை.

ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும் சிகிச்சைக்கான கட்டணம், ஆலோசனைக்கான கட்டணத்தை எழுதி வைப்பதோடு, பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கும் உரிமையை நுகர்வோரிடமே விட்டுவிட வேண்டும் என்பதை தமிழக அரசு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வலியுறுத்த வேண்டும். மேலும், எந்தெந்த தனியார் மருத்துவமனைகள் எத்தகைய சலுகைகளைப் பெற்றுள்ளன, அங்கே எத்தனை ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை அறிவிக்க வேண்டியதும் அவசியம்.

நோயாளியிடம் எவ்வளவு கட்டணம் வாங்கலாம் என்பதை மருத்துவமனை தீர்மானிப்பதைக் காட்டிலும், இந்த மருத்துவமனை நம் சக்திக்கு உகந்ததா என்பதை நோயாளி தீர்மானிக்கும் நிலையே, ஆரோக்கியமான தொழில் போட்டியைத் தக்கவைக்கும். வசதிக்கு ஏற்ற மருத்துவமனையை நோயாளி தேர்ந்தெடுக்கவும் உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com