பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் நேபாளப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த 17 ஆண்டுகளில் நேபாளத்துக்கு அரசு முறைப் பயணமாகச் சென்று வந்துள்ள முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பதால் இந்தப் பயணம் இந்தியா - நேபாளம் இடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் என்கிற அவரது கூற்று சரியானதே.
கடந்த 10 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மன்மோகன் சிங் அரசு தெற்காசிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதில் உரிய கவனம் செலுத்தவில்லை. நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற நிகழ்ச்சிக்கு தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் வரவழைத்தது ஐரோப்பிய யூனியன், ஏசியன் போல "சார்க்' நாடுகளும் வலுவான பொருளாதாரக் கூட்டணியாக உருவாகும் வாய்ப்பை மீண்டும் ஏற்படுத்தி இருக்கிறது.
பண்பாடு, கல்வி, வர்த்தகம் மற்றும் புவியியல் அமைப்பு ரீதியாக நம்முடன் தொடர்புடைய அண்டை நாடுகளுடனான உறவு முந்தைய வாஜ்பாயி, மன்மோகன் ஆட்சிகளில் முறையாகப் பேணப்படாதது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறிவிட்டிருக்கிறது. இதனால், நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள் உள்ளிட்ட நமது பாரம்பரியமிக்க நட்பு நாடுகள் சீனாவுடனான உறவை வலுப்படுத்திக் கொண்டுள்ளன. சீனாவின் மேலாதிக்கத்திலிருந்து இந்த நாடுகளை விடுவித்து, அவற்றுடன் நமது பாரம்பரிய உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கான முயற்சிகளை மோடி அரசு மேற்கொண்டுள்ளது பாராட்டத்தக்கது.
நேபாளத்தின் பொருளாதாரம் வெளிநாடுகளில் பணியாற்றும் அந்த நாட்டு மக்கள் அனுப்பும் சேமிப்பைத்தான் நம்பி இருக்கிறது. பெரும்பாலான நேபாளிகள் இந்தியாவில் பணிபுரிகிறார்கள்.
நேபாளத்தின் இரண்டாவது முக்கியமான வருமானம் சுற்றுலாப் பயணிகள் வருவது. அந்த வகையிலும் நேபாளம் இந்தியாவைச் சார்ந்து இருக்கிறது. அதனால் இந்தியாவுடனான சுமுக உறவு நேபாளத்துக்கு மிகவும் அவசியம்.
மோடியின் நேபாளப் பயணத்தின் போது அந்த நாட்டுடன் வர்த்தகம், நீர் மின் திட்டம், தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதோடு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நேபாளத்துக்கு ரூ.6,300 கோடி கடனுதவியை இந்தியா அளிக்கும் என்றும், அந்த நாட்டின் தகவல் தொடர்புத் திட்டங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளும் அளிக்கப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார்.
மேலும், 1950-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இந்திய - நேபாள நட்புறவு ஒப்பந்தத்தை மீளாய்வு செய்து, காலத்துக்கு
ஏற்றவாறு புதிய அம்சங்களைச் சேர்க்கவும், தேவையற்றவற்றை நீக்கவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதும் ஆக்கபூர்வமான நடவடிக்கையாகும்.
நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி, பின்னர் ஜனநாயக அரசியல் வழிமுறைக்குத் திரும்பிய நேபாள
கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) தலைவர் பிரசண்டாவையும் மோடி சந்தித்துப் பேசியது நல்லதொரு தொடக்கமாகும். சீனாவுடன் நட்பு பாராட்டி வரும் மாவோயிஸ்ட் தலைவரான பிரசண்டா இதுவரை இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். இந்த நிலையில், மோடியுடனான சந்திப்பு வரலாற்றுச் சிறப்பு
மிக்கது என பிரசண்டா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளதை, மோடியின் நேபாளப் பயணத்துக்கு கிடைத்த வெற்றி என்றுதான் கூற வேண்டும்.
இந்திய - நேபாள உறவில் இருந்த விரிசல்களை அகற்றுவதாகப் பிரதமர் மோடியின் காத்மாண்டு பயணம் அமைந்தது என்பதுதான் உண்மை. ஆயிரக்கணக்கில் நேபாள மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று ஒரு தலைவரை வரவேற்றார்கள் என்றால், எந்த அளவுக்குப் பிரதமர் மோடியின் நேபாளப் பயணம் அவர்கள் மத்தியில் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
நேபாள அரசியல் கட்சிகளின் மிகப் பெரிய பயம், இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய பா.ஜ.க., நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்தத் தலைப்படுமோ என்பதுதான். அந்தப் பயத்தைப் பிரதமர் மோடி அகற்றியது மட்டுமல்ல, நேபாளத்தின் உள்நாட்டு அரசியலில் இந்தியா எந்தவிதத்திலும் தலையிடாது என்று தெளிவாக அறிவித்ததில் அவர்களுக்கு அதீத மகிழ்ச்சி.
பூடான், நேபாளத்தைத் தொடர்ந்து மியான்மருக்கும் விரைவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையுடனான உறவுகளிலும் புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டும். ஆனால், அணுகுமுறை வேறாக இருத்தலும் வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.