இழப்பு இயற்கைக்கு அல்ல!

கடந்த ஆண்டு உத்தரகண்ட் என்றால், இந்த ஆண்டில் இயற்கையின் சீற்றம் மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தைச் சேர்ந்த மலின் என்கிற கிராமத்தைப் பூண்டோடு அழித்து மண்ணோடு மண்ணாக்கிவிட்டிருக்கிறது.
Updated on
2 min read

கடந்த ஆண்டு உத்தரகண்ட் என்றால், இந்த ஆண்டில் இயற்கையின் சீற்றம் மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தைச் சேர்ந்த மலின் என்கிற கிராமத்தைப் பூண்டோடு அழித்து மண்ணோடு மண்ணாக்கிவிட்டிருக்கிறது. தொடர்ந்து பெய்த அடைமழையின் விளைவால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மலின் கிராமம் மண்ணுக்குள் புதைந்தது மட்டுமல்லாமல், நூறு பேருக்கும் அதிகமானவர்களைப் பலி கொண்டிருக்கிறது.

வருடா வருடம் சுட்டெரிக்கும் கோடை முடிவுக்கு வராதா, வறண்டு கிடக்கும் விளைநிலங்களின் தாகம் தீர்க்க மழை பொழியாதா என்று ஏங்குவது இந்தியாவில் வழக்கமாகிவிட்டிருக்கிறது. நிலத்தடி நீர் அதிகரிக்கவும், ஏரி, குளங்கள் நிரம்பவும், விவசாயம் நடைபெறவும் மழையை எதிர்பார்த்துக் காத்திருப்பதுடன், ஆண்டுதோறும் இயற்கையின் சீற்றம் எங்கே மனித உயிர்களைப் பலிவாங்கக் காத்திருக்கிறதோ என்கிற அச்சத்துடனும் நாம் வாழ வேண்டியிருக்கிறது.

மலின் கிராமத்தில் நிலச்சரிவினால் நடந்த பேரிழப்பு இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்டது என்று ஒரு வரியில் முடித்துவிடக் கூடியது அல்ல. மலின் கிராமத்து மக்களும், அரசு நிர்வாகமும் முன்னெச்சரிக்கைகளை மதித்து நடந்திருந்தால், விபத்தைத் தடுத்திருக்க முடியாவிட்டாலும்கூட, நிச்சயமாக இழப்பைக் கணிசமாகக் குறைத்திருக்கலாம். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பையும் எச்சரிக்கையையும் பொருள்படுத்தாமல், அரசு நிர்வாகம் தனது திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டதுதான் இந்தப் பேரிழப்புக்குக் காரணம் என்று இப்போது கூறுவதால் என்ன பயன் ஏற்பட்டுவிடும்? நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலி வாங்கப்பட்டுவிட்டனவே!

மலைவாழ் ஆதிவாசிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துகிறோம் என்கிற போர்வையில், மலைச்சரிவில் உள்ள மரங்களை வெட்டி, தேயிலை எஸ்டேட்டுகளில் காணப்படுவதுபோல, ஆங்காங்கே சமன்படுத்தி விளைநிலமாக்கும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த முற்பட்டது. 28,000 மரங்கள் மட்டுமே வெட்டப்பட்டன என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், ஆதிவாசிகளின் கூற்றுப்படி மூன்று லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. அவை எந்தெந்த அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் கஜானாக்களில் கரன்சி நோட்டுக்களாக அடுக்கி வைக்கப்பட்டன என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

மேற்குத் தொடர்ச்சி மலை தொடர்பான கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையின்படி மலின் கிராமம் "சூழலியல் உணர்வு' (உஸ்ரீர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப்ப்ஹ் நங்ய்ள்ண்ற்ண்ஸ்ங்) பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ளதாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. 2013-இல், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மலினை சூழலியல் உணர்வுப் பாதுகாப்புக்குரிய கிராமமாக அறிவித்திருப்பதுடன், இங்கே வளர்ச்சிப் பணிகள் என்கிற பெயரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது என்றும் பரிந்துரைத்திருக்கிறது.

அப்படியெல்லாம் இருந்தும், காடுகளில் உள்ள மரங்களைக் கொள்ளை அடிப்பதற்கு ஏதுவாக வளர்ச்சித் திட்டம் அறிவிக்கப்பட்டு, பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதன் விளைவைத்தான் மலின் கிராமம் அனுபவித்தது.

மலினில் மட்டுமல்ல, இதுவரை இந்தியாவில் நடந்திருக்கும் இயற்கைச் சீற்றங்களிலிருந்து நாம் எந்தவிதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு உலகத்தையே உலுக்கிய கங்கையின் சீற்றத்தை எதிர்கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில், இயற்கைச் சூழல் பாதிக்கப்பட்டதற்கு நீர் மின் நிலையங்கள் அமைத்ததுதான் மூல காரணமாகக் கூறப்பட்டது. இப்போது அரசு புதிய நீர் மின் நிலையங்களை அமைக்கத் திட்டமிடுகிறது. அதேபோல, சூழலைப் பாதிக்கும் கேதார்நாத் யாத்திரையும் அவசர அவசரமாக மீண்டும் தொடங்கப்படுகிறது.

முன்னறிவிப்புகள் தட்பவெப்ப நிலை பற்றியும், கனமழை பற்றியும் கூற முடியுமே தவிர, நிலச்சரிவு பற்றி எச்சரிக்க முடியாது. இதுபோன்ற இயற்கையின் சீற்றங்களுக்கு, மலையில் மரங்கள் வெட்டப்படுவதும், மலைச்சரிவு சமன்படுத்தப்பட்டு விவசாய நிலங்களாவதும்தான் காரணம் என்று பல அறிக்கைகள் தெளிவுபடுத்தியும்கூட, அதற்கு செவிசாய்க்க அரசும், மக்களும் தயாராக இல்லை.

கட்கில் குழு அறிக்கை இந்தியாவிலுள்ள வனப் பகுதிகளில் எந்தவித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று கூறியும், காடுகள் அழிக்கப்பட்டு சாலைகள் போடப்படுகின்றன; எஸ்டேட்டுகளாக மாற்றப்படுகின்றன. கஸ்தூரிரங்கன் குழுவின் அறிக்கை எச்சரித்திருந்தும், மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் இதே பிரச்னை தொடர்கிறது. இழந்ததைத் திரும்பப் பெற முடியாது என்கிற இயற்கை நியதியை நாம் புரிந்துகொள்ளாவிட்டால், இழப்பு நமக்குத்தான், இயற்கைக்கு அல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com