முந்தைய மன்மோகன் சிங் அரசால் கொண்டு வரப்பட்ட "காப்பீட்டுத் திருத்த மசோதா 2008', சில மாற்றங்களுடன் நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி அரசால் தாக்கல் செய்யப்பட்டு, மாநிலங்களவையில் அதற்குப் போதிய ஆதரவு இல்லாததால் இழுபறியில் தொடர்கிறது. இந்தத் திருத்த மசோதாவின் அடிப்படை நோக்கம், காப்பீட்டுத் துறையில் இப்போது இருக்கும் 26 விழுக்காடு அன்னிய முதலீட்டுக்கான அனுமதியை 49 விழுக்காடாக உயர்த்துவது. இம் மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்குப் பிறகுதான் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட வேண்டும் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாதம்.
2000-இல் வாஜ்பாய் தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், காப்பீட்டுத் துறையில் தனியார் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அன்றைய நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா அப்போதே 49 விழுக்காடு அன்னிய முதலீட்டிற்கு வழிகோலி இருந்தார். ஆனால், எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸின் நிர்பந்தத்தால் அன்னிய முதலீடு 26 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 2012-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 விழுக்காடாக அதிகரிப்பதற்கான மசோதாவைத் தாக்கல் செய்தது. இப்போது எப்படி ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லையோ, அதேநிலையில் அப்போது மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்ததால், எதிர்க்கட்சியான பா.ஜ.க. தனது பங்குக்கு அந்த மசோதா நிறைவேறாமல் தடுத்து நிறுத்தி விட்டது. அடிப்படையில், காப்பீட்டுத் துறையில் தனியார் செயல்பாடு என்பதையும், அன்னிய முதலீட்டையும் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு கட்சிகளுமே ஆதரிக்கின்றன. யார் கொண்டு வருவது என்பதில்தான் அவர்களுக்குள் போட்டி.
120 கோடி பேர் மக்கள்தொகை உள்ள இந்தியாவில் காப்பீடு செய்திருப்பவர்கள் வெறும் 6 விழுக்காட்டினர் மட்டுமே என்பதால் உலகளாவிய நிறுவனங்கள் பல இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் நுழையத் தவித்துக் கொண்டிருக்கின்றன. காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதால், காப்பீட்டுத் துறை காலப் போக்கில் அன்னிய நிறுவனங்களின் கைகளில் போய்விடும் என்பது அபத்தமான வாதம் என்கிறார்கள் அவர்கள். அன்னிய வங்கிகள் இந்தியாவில் செயல்படலாமென்றால், அன்னியக் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுவதில் என்ன தவறு என்பது அவர்களின் கேள்வி. எப்படி பன்னாட்டு வங்கிகளின் வரவால், இந்திய வங்கிகள் பாதிக்கப்படவில்லையோ அதேபோல, பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுவதால் அரசு நிறுவனங்களான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமும், பொதுக் காப்பீட்டு நிறுவனங்களான நேஷனல், யுனைடட் இந்தியா, நியூ இந்தியா, ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனங்களும் பாதிக்கப்படாது என்பது அவர்களது கருத்து.
ஜப்பானில் 100 விழுக்காடு, இந்தோனேஷியாவில் 80 விழுக்காடு, சீனாவில் 50 விழுக்காடு அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்போது இந்தியாவில் 49 விழுக்காடு அனுமதிப்பதில் என்ன தவறு என்கிறார்கள் அவர்கள். இந்தியாவின் பாதுகாப்புக்கே அத்தியாவசியமான ராணுவம், தகவல் தொடர்பு, ரயில்வே, விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளிலெல்லாம் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும்போது, வங்கி, காப்பீடு போன்ற துறைகளில் மட்டும் எதிர்ப்பது எப்படி சரி என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், அடிப்படைப் பிரச்னையைப் பற்றி யாருமே உணர்வதாகவோ கவலைப்படுவதாகவோ தெரியவில்லை. முதலில், வங்கிச் சேவையை எடுத்துக் கொண்டால், பன்னாட்டு வங்கிகள் நகரங்களில் மட்டுமே செயல்படுகின்றனவே தவிர, விவசாயத்திற்கோ, கிராமப்புற மேம்பாட்டுக்கோ அவை முனைவதில்லை என்பதும், அந்த வங்கிகளின் வாராக் கடன் அளவு கட்டுக்குள் இருக்கிறது என்பதும், கல்விக் கடன் வரை அரசுடமை வங்கிகள் மூலம்தான் தரப்படுகின்றன என்பதும் கசப்பான உண்மைகள். அதேபோல, தனியார் காப்பீட்டு நிறுவனங்களாலும் சாமானியன் பயன்பெறுவானா என்பது சந்தேகமே!
மோடி அரசால் 97 திருத்தங்களுடன் கொண்டுவரப்பட்டிருக்கும் காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா 2008, 49 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டை மட்டுமல்ல, அன்னிய நிறுவன முதலீட்டையுமல்லவா அனுமதிக்கிறது. இதன் மூலம் கருப்புப் பணமல்லவா சலவை செய்யப்பட்டு முதலீடாக உள்ளே வரப்போகிறது. இந்த ஓட்டைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் 26 விழுக்காடா, 49 விழுக்காடா என்று பா.ஜ.க.வும் காங்கிரஸூம் நடத்துவது நிழல் யுத்தமா அல்லது போலி நாடகமா என்பது தெரியவில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்

ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா கமேனி! எங்கே, எப்படி இருக்கிறார்?

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.23! 22 காசுகள் சரிவு!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

