இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவின் முதல் அறிவிப்பே, பாரதம் என்கிற இந்தியா, மாநிலங்களின் கூட்டமைப்பாக இருக்கும் (India, that is Bharat, shall be a Union of States) என்பதுதான். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் அந்த உணர்வு மதிக்கப்படுகிறதா என்பது சந்தேகம்தான். மத்திய அரசின் தயவை எதிர்பார்த்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில்தான் மாநில அரசுகள் இருக்கின்றன என்பதுதான் உண்மை. ஆண்டுதோறும் மாநில முதல்வர்கள் திட்டக் கமிஷனிடம் அதிகரித்த மத்திய நிதி ஒதுக்கீட்டைக் கெஞ்சியும், வாதாடியும் பெற வேண்டிய சூழ்நிலைதான் தொடர்கிறது.
கடந்த 2012-ஆம் ஆண்டிற்கான திட்ட ஒதுக்கீட்டின்போதே, தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய ஒதுக்கீடு முறை பற்றிக் கேள்வி எழுப்பி இருந்தார். இப்போது, மத்தியப் பிரதேச முதல்வரும் தமிழக முதல்வரின் கருத்தை எதிரொலிக்க முற்பட்டிருக்கிறார்.
மாநிலங்களிலிருந்து மத்திய அரசுக்குக் கிடைக்கும் மொத்த வரி வசூலில் 50 விழுக்காடு அந்தந்த மாநிலங்களுக்குத் தரப்படுவதை 14-ஆவது நிதி ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்கிற மத்தியப் பிரதேச அரசின் கோரிக்கையை அஸ்ஸாம், கேரளா போன்ற காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களும் எழுப்பி இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது குஜராத் மாநிலமும் இதே கோரிக்கையை எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாயில் பாதிக்குப் பாதி, அந்தந்த மாநிலங்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதுடன், அந்தந்த மாநிலங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை வளங்களின் விற்பனையிலும் 50 விழுக்காடு மாநிலங்களையே சேர வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. அலைக்கற்றை ஒதுக்கீட்டு வருவாயில் தொடங்கி, அந்தந்த மாநிலங்களிலிருந்து கிடைக்கும் எண்ணெய் வளம், கனிம வளம் போன்றவற்றின் வருவாயிலும் மாநிலங்கள் பங்கு கேட்பதில் என்ன தவறு? அந்தக் கோரிக்கைகள் மறுக்கப்படும்போது, பிரிவினைவாதமும் தீவிரவாதமும் எழும் என்பதுதான் சரித்திரம் காட்டும் உண்மை.
இப்போதைய நடைமுறைப்படி, மத்திய அரசு, மாநிலங்களிலிருந்து கிடைக்கும் வருவாயை, நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி ஒவ்வொரு மாநிலத்தின் தேவைக்கு ஏற்றபடி பிரித்துக் கொடுக்கிறது. எந்த மாநிலத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்வது என்கிற அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பதால், மாநிலங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவோ, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைப் பழி வாங்கவோ இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு, மத்திய - மாநில உறவில் காணப்படும் மிகப்பெரிய நெருடலாகத் தொடர்கிறது.
அதுமட்டுமல்ல, மத்திய அரசின் சில திட்டங்களை மாநிலங்கள் செயல்படுத்துவதை இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் உறுதிப்படுத்தும் போக்கும், அதற்கு இணங்காத மாநிலங்களைப் பழிவாங்கும் போக்கும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா "நாங்கள் மத்திய அரசிடம் பல்வேறு திட்டங்களுக்கு உதவியும், கூடுதல் ஒதுக்கீடும் கேட்பதற்குத் திட்டக் கமிஷனிடம் பேச்சுவார்த்தைக்கு தில்லிக்கு வந்தால், அவர்கள் நாங்கள் எப்படி எங்கள் வருவாயை செலவழிக்க வேண்டும் என்று பாடம் நடத்துகிறார்கள்' என்று 2012-இல் கூறியது போலத்தான் மத்திய அரசின் போக்கு காணப்படுகிறது.
மாநிலங்கள் எந்தெந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும், தங்களது நிதியாதாரத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என்கிற உரிமையை மத்திய அரசு எடுத்துக் கொள்வது, அரசியல் சட்ட உணர்வுக்கு எதிரானது. அந்தந்த மாநிலத்தின் தேவைகள் அந்தந்த மாநில அரசுக்குத்தான் தெரியும் என்பதால், மாநிலங்களுக்கு நிதி நிர்வாகத்தில் சுதந்திரம் அளிக்கப்படுவதுடன் மாநில அரசுகள் மத்திய அரசைச் சார்ந்து இருக்கும் போக்கையும் அகற்றியாக வேண்டும்.
இப்போதைய அரசு, மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்று, அந்தந்த மாநிலங்களிலிருந்து மத்திய அரசு பெறும் வருவாயில் சரிபாதிப் பங்கும், சுதந்திரமும் அளித்தாலும், வருங்காலத்தில் அமைய இருக்கும் மத்திய அரசு அதை மாற்றக்கூடாது என்பதில்லை. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை, மாநிலங்களை முதன்மைப்படுத்திய தேசிய வளர்ச்சிக்கான புதிய அணுகுமுறையைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்திலும் அதைக் குறிப்பிட்டார். இப்போது, பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலமான மத்தியப் பிரதேசமே அதற்குக் குரலெழுப்பி இருக்கிறது.
நிதி நிர்வாகத்தில் மாநிலங்களுக்கு சுயாட்சி அளிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. அதுதான் அரசியல் சட்டம் விரும்பிய கூட்டாட்சித் தத்துவத்திற்கான அடிப்படையும்கூட!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்

ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா கமேனி! எங்கே, எப்படி இருக்கிறார்?

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.23! 22 காசுகள் சரிவு!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

