உச்சநீதிமன்றத்தின் 28-ஆவது தலைமை நீதிபதியாக ஒன்பது மாதங்கள் மட்டுமே பதவி வகித்த நீதிபதி மதன்மோகன் புன்ஞ்சி, நீதிபதிகள் நியமனத்தில் அரசுக்குத்தான் இறுதி அதிகாரம் என்கிற கருத்து உடையவராக இருந்தார். அவர் 1998-இல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியானபோது, 1993 தீர்ப்பின் அடிப்படையில் மூத்த நீதிபதிகளைக் கலந்தாலோசிக்காமல் ஐந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
தலைமை நீதிபதியின் இந்தத் தன்னிச்சையான முடிவு பலத்த விமர்சனத்திற்கு உள்ளானது. குடியரசுத் தலைவர் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உச்சநீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதுதான் மூன்றாவது நீதிபதிகள் வழக்கு என்று அறியப்பட்டு, நீதிபதிகள் தேர்வுக் குழு முறைக்கு வழிகோலியது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன், உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுதான் "நீதிபதிகள் தேர்வுக் குழு' என்பது. ஒரு நீதிபதியை உச்சநீதிமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த நீதிபதி பணியாற்றிய உயர்நீதிமன்றத்தைச் சார்ந்த தனது உச்சநீதிமன்ற சகாவின் கருத்தைத் தலைமை நீதிபதி கேட்டறிவதுடன், சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் உயர்
நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள் ஆகியோரின் கருத்துகளையும் கேட்டறிவார்.
நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரைக்கும் நபரை நீதிபதியாக நியமிக்கும்படி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குடியரசுத் தலைவருக்கு (அரசுக்கு) தெரிவிப்பார். அப்படிப் பரிந்துரைக்கும் யாரையாவது அரசு நிராகரிக்க விரும்பினால், அதற்குப் போதிய காரணங்களைத் தெரிவித்தாக வேண்டும். இறுதி முடிவு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம்தான் என்கிறது "நீதிபதிகள் தேர்வுக் குழு' முறை. இப்போதுவரை நடைமுறையில் இருந்து வரும் "நீதிபதிகள் தேர்வுக் குழு' முறை, 1998-இல் மூன்றாவது நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு ஏற்பட்ட ஒன்று.
"நீதிபதிகள் தேர்வுக் குழு' முறையின் மூலம் நீதித் துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் தவிர்க்க முடியும் என்பது எந்த அளவுக்குச் சரியோ, அதே அளவுக்குப் பிரச்னைகளும் இருக்கின்றன. மக்களாட்சியில், நீதித் துறை மட்டுமே அப்பழுக்கற்றது என்பதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், நிர்வாகமும் முறையற்றவை என்பதும் ஏற்புடையதல்ல. நிர்வாகத்தின் எல்லா மட்டங்களிலும் கலந்தாலோசனையும், கண்காணிப்பும், ஒருபால் கோடாமையும்
அரசியல் சட்டத்தால் உறுதிப்படுத்தப்படும்போது, நீதித் துறையில் மட்டும் தன்னிச்சையான செயல்பாடு என்பதை எப்படி ஏற்பது?
ஒரு தலைசிறந்த நீதிமான் என்று எல்லோராலும் அறியப்படும் நீதிபதி ஏ.பி. ஷா, ஏன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை? நீதிபதி ஏ.கே. பட்நாயக்கின் பதவி உயர்வு தாமதப்படுத்தப்பட்டதன் பின்னணி என்ன? நீதிபதி யு.எல். பட், உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தான் அனுசரித்துப் போகாததால் தனக்கு நியாயமாகத் தரப்பட வேண்டிய உச்சநீதிமன்றப் பதவி கிடைக்கவில்லை என்று பதிவு செய்திருக்கிறாரே, அதற்கு என்ன பதில் அல்லது விளக்கம்?
நீதிபதி தினகரன் பிரச்னையிலும், நீதிபதி அசோக் குமார் பிரச்னையிலும் இதே "நீதிபதிகள் தேர்வுக் குழு' முறைதானே பின்பற்றப்பட்டது? இந்த நியமனங்களில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் ஜாதிய உணர்வு காரணமாக இருந்தது என்கிற குற்றச்சாட்டு உண்டு. நீதிபதி அசோக்குமார் நியமனத்தில் அரசியல் நிர்பந்தங்கள் இருந்ததாக முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அண்மையில் குற்றம் சாட்டியிருக்கிறார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், எந்த "நீதிபதிகள் தேர்வுக் குழு'வை அல்லது எந்த மூத்த நீதிபதிகளை கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்தார் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும், அவை பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது.
குஜராத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியான நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா, தான் கொல்கத்தா உயர்நீதிமன்ற "நீதிபதிகள் தேர்வுக் குழு' உறுப்பினராக இருந்தபோது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீரின் சகோதரி சுக்லா கபிர் சின்ஹாவின் பெயரை நீதிபதி நியமனத்திற்குப் பரிந்துரைக்க மறுத்ததால்தான், நீதிபதி அல்டமாஸ் கபீர் தான் உச்சநீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெறுவதைத் தடுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டியபோது அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காகி இருக்க வேண்டாமா? ஏன் ஆகவில்லை?
இதற்கெல்லாம் ஒரே பதில், "நீதிபதிகள் தேர்வுக் குழு' முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதும், தேர்வு ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது என்பதும்தான்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி ஆவணத்துடன் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தானியர் கைது!

மதுரையில் ஏன் கருப்பு இசை வெளியீட்டு விழா?

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu

அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

