கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையின் கிளைச் சாலையான ரங்கநாதன் தெருவில் இருக்கும் ஜெயச்சந்திரன் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கிறது. ரங்கநாதன் தெருவைச் சுற்றியுள்ள பகுதிகள் புகை மண்டலத்தில் ஆழ்ந்தன என்பது மட்டுமல்ல, பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்ததால் ஏற்பட்ட புகை, சுற்றியிருந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு மூச்சு முட்டலையும், பாதிப்பையும் ஏற்படுத்தியது.
அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இதே தீ விபத்து பகலில் ஏற்பட்டிருந்தால் நூற்றுக்கணக்கான ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் உயிரிழக்க நேரிட்டிருக்கும். இரு ஆண்டுகளுக்கு முன்பு இதே ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து ஏற்பட்டபோது, அந்தத் தெருவுக்குள் தீயணைப்புப் படையினரால் எளிதில் நுழைய முடியாத நிலை ஏற்பட்டதை இப்போது நினைவுகூரத் தோன்றுகிறது.
இதே போன்ற தீ விபத்து தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் ஏற்பட்டால் என்னவாகும்? தீப்பிடித்ததால் மரணமடைபவர்கள் ஒருபுறம் இருக்க, உயிருக்கு பயந்து ரங்கநாதன் தெருவிலிருந்து வெளியேறத் துடிக்கும் வாடிக்கையாளர்களில் பலர் கூட்ட நெரிசலில் அகப்பட்டுமல்லவா உயிரிழக்க நேரிடும்? இதெல்லாம் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரியாதா என்ன?
அரை நூற்றாண்டுக்கு முன்னால் ரங்கநாதன் தெருவைப் பார்த்தவர்களுக்குத் தெரியும், அந்தத் தெரு எவ்வளவு அமைதியான குடியிருப்பாக இருந்தது என்று. ரங்கநாத ஐயங்காருக்குச் சொந்தமான பகுதி அது என்பதால், அந்தத் தெரு ரங்கநாதன் தெரு என்கிற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. மாநகரப் பேருந்து அப்போதெல்லாம் ரங்கநாதன் தெரு முனையில் இருக்கும் மாம்பலம் ரயில் நிலையம் வரை செல்லும். ரயிலில் வரும் பயணிகள் ரயில் நிலையத்தின் வெளியில் இருந்தே மாநகரப் பேருந்திலும், குதிரை வண்டிகளிலும், ரிக்ஷா வண்டிகளிலும் ஏறிச் சென்ற காலம் அது.
வெறும் நாற்பதே அடி அகலமுள்ள அந்தத் தெருவில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்தான் கடைகள் வரத் தொடங்கின. எண்பதுகளில், விதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, அன்றைய மாநகராட்சி நிர்வாகமும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமும் நாற்பதடி சாலையில் பல அடுக்கு வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்க முற்பட்டதால் அல்லது அப்படிக் கட்டப்பட்ட வளாகங்களை தயவு தாட்சண்யமில்லாமல் தடுத்து நிறுத்தவோ இடித்துத் தள்ளவோ முன்வராததால், இப்போது பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது ரங்கநாதன் தெரு.
"வணிக வளாகங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் விதிமுறைகளை மீறிக் கட்டப்படும்போது, ஒரு சிறிய நில அதிர்ச்சியோ, கட்டுமானத்தில் உள்ள குறைபாடோ மிகப்பெரிய விபத்தில் போய் முடிந்து, உயிர்ச் சேதத்திற்கும், பொருள் சேதத்திற்கும் வழிகோலும் என்பதால்தான் விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த விதிமுறைகளை ஏற்படுத்திய அரசு, விதிமுறைகளை மீறியவர்களைக் கண்டிப்பதற்குப் பதிலாக, அந்தக் கட்டடங்களை இடிக்க உத்தரவிடுவதற்குப் பதிலாக அவர்கள் கட்டணம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள சலுகை தருவது எப்படி சரி? அந்தக் கட்டடங்களில் விபத்து ஏற்பட்டால், அதற்கு யாரைப் பொறுப்பாக்கப் போகிறது அரசு?' என்கிற கேள்விகளை 05.11.2012-இல் எழுதிய "விதிமுறை மீறல்கள்' என்கிற ஆசிரியர் உரையிலேயே எழுப்பியிருந்தோம்.
ரங்கநாதன் தெரு போன்ற நாற்பது அடி சாலையில் கட்டப்பட்டிருக்கும், வாகனம் நிறுத்தக்கூட வசதி இல்லாத பல அடுக்கு வணிக வளாகங்கள் யாரால் அனுமதிக்கப்பட்டுக் கட்டப்பட்டன? அவை ஏன் இடிக்கப்படவில்லை அல்லது அகற்றப்படவில்லை? இந்தக் கேள்விகளை நூறாயிரம் முறை பல்லாயிரக்கணக்கானவர்கள் கேட்டுக் கேட்டுச் சலித்து விட்டனர். நீதிமன்றமும்கூட, ஒரு முறை இடிக்கச் சொல்லி உத்தரவு பிறப்பிப்பது, அதே உத்தரவுக்கு இன்னொரு அமர்வு தடை உத்தரவு பிறப்பித்து விதிமுறை மீறல்களை மறைமுகமாக ஆதரிப்பது என்கிற நிலைப்பாட்டைத்தான் கடைப்பிடிக்கிறது.
ரங்கநாதன் தெருவில் செயல்படும் பல அடுக்கு வணிக வளாகங்கள் அகற்றப்பட்டே தீர வேண்டும். ஜெயச்சந்திரன் வணிக வளாகத் தீ விபத்திற்குப் பின்னாலும் அரசு இந்தப் பிரச்னையில் மெத்தனமாக இருந்தால், மிகப் பெரிய உயிர்ச் சேதத்தையும், அவப்பெயரையும் எதிர்கொள்ள நேரும். ரங்கநாதன் தெருவில் இரண்டு மாடிகளுக்கு மேல் உள்ள கட்டடங்களை தயவுதாட்சண்யமே இல்லாமல் அகற்ற அரசு இனியும் தயங்கலாகாது.
மௌலிவாக்கம்போல, உயிர்ச்சேதத்திற்குப் பிறகு இழப்பீடு கொடுப்பது, விசாரணை நடத்துவது போன்ற நடவடிக்கைகளால் பயனில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress

மே. வங்கத்தில் திரிணமூல், கேரளத்தில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வெற்றி: ஃபரூக் அப்துல்லா

ஈரான் தலைநகரில் நாளை முதல் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்!

பலம் வாய்ந்த ஆர்சிபியுடன் மோதும் குஜராத்: சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

