ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு முயன்று ஓராயிரம் பிரச்னைகளை எதிர்கொள்ளும் கதையாகிவிட்டது புதிதாகத் தெலங்கானா மாநிலத்தை உருவாக்க எடுத்த முடிவு. ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்னால் நடந்த போராட்டங்களும், இருதரப்பாருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பும் தெலங்கானா தனி மாநிலமாக உருவான பிறகும்கூட மறையவோ, மாறவோ இல்லை.
ஒன்றுபட்ட ஆந்திரத்தின் இயற்கை வளங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும், பிரித்துக் கொள்வது பற்றியும், நிதி ஆதாரங்களையும், சுமைகளையும் பகிர்ந்து கொள்வதையும் தீர ஆராய்ந்து ஆந்திரப் பிரதேச மறு சீரமைப்புச் சட்டம் 2014இல் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், பிரச்னை தீர்ந்துவிடாமல் இரு தரப்பினருமே கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.
குறிப்பாக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் அணுகுமுறை போராட்டக் காலத்தில் இருந்ததிலிருந்து மாறாமலே இருக்கிறது என்பதுதான் இதற்கு அடிப்படைக் காரணம். வருங்காலத்தில் இரு தரப்பினருக்கும் தாய்மொழியான தெலுங்கு, மறுபடியும் பிரிந்த மாநிலங்களை இணைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட செயல்பாடுகளில் அவர் ஈடுபடுகிறார் என்று கருத இடமிருக்கிறது. அதிலும் அவர் நடத்த முற்பட்ட களையெடுக்கும் கணக்கெடுப்பு முயற்சி, முகம்மது பின் துக்ளக்கையேகூட அதிர்ச்சியடைய வைத்திருக்கும்.
தெலங்கானா மாநிலத்தின் 10 மாவட்டங்களில், 90 லட்சம் வீடுகளில், ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஒரு நாளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலத்தில் மக்களின் பொருளாதார நிலை, தாழ்த்தப்பட்டோர் குறித்த விவரங்களைச் சேகரிக்கவே இந்தக் கணக்கெடுப்பு என்று சொல்லப்பட்டாலும், அது கண்துடைப்பு நாடகம் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
2011-ஆம் ஆண்டு இந்தியா முழுவதிலும் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே இந்த விவரங்கள் அனைத்தும் பெறப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் மாவட்ட வாரியாகவும் இருக்கின்றன. ஆகவே, அந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில் திட்டங்களை வகுப்பதும், தெலங்கானா மக்களின் பொருளாதார நிலைமையை உணர்ந்துகொள்வதும் சாத்தியம் என்பதால், இந்தக் கணக்கெடுப்பின் நோக்கம் - யார் மண்ணின் மைந்தர் என்பதை அறிந்து கொள்வதுதானே தவிர வேறில்லை.
தெலங்கானா மாநில அரசில் தெலங்கானாவைச் சேர்ந்தவர் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் முன்பு கூறியபோதே, கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தக் கணக்கெடுப்பின் உள்நோக்கம் தெரிந்திருப்பதால், வெளிமாநிலங்களில் பணி நிமித்தமாக வாழ்ந்துவரும் தெலங்கானா மாநில மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவந்து, கணக்கெடுப்பின்போது நேரிடையாகத் தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இந்தக் கணக்கெடுப்பின் முந்தைய நாளில் தெலங்கானா நோக்கிச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும், ரயில்களும் பயணிகளால் நிரம்பி வழிந்தன. அந்த அளவுக்கு தகவல் பரப்பப்பட்டு, பரபரப்பாகி விட்டது.
""இது சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பு மட்டுமே. இதில் பங்கேற்க விரும்பாதவர்களை அரசு கட்டாயப்படுத்தாது'' என்று தெலங்கானா அரசு நீதிமன்றத்தில் கூறியது. வந்தேறிகளை, தகவல் பெற்று அறிவதும் ஒன்றுதான். தகவல் தர மறுத்தவர்களை வந்தேறிகளாக புள்ளி வைத்து, பின்னர் புறக்கணிப்பதும் ஒன்றுதான். மண்ணின் மைந்தர்களை மட்டும் ஆதரித்து மற்றவர்களை புறக்கணித்து, வெளியேறச் செய்து, அவர்தம் சொத்துகளை அபகரித்து அல்லது குறைந்த விலையில் மண்ணின் மைந்தர்கள் வலியப் பெற்று மகிழ்வதுதான் இதன் நோக்கமாக இருக்க முடியும்.
பிரிவினையினால் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் போதாது என்று, இப்போது ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களுக்கு மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கும் வரிச் சலுகைகளும் பிரச்னையாகி இருக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா எச்சரித்திருப்பதுபோல, ஆந்திரப் பிரதேச மறு சீரமைப்புச் சட்டம் 2014இல் 94-ஆவது பிரிவில் உள்பிரிவு 1இல் இடம் பெற்றுள்ள அம்சங்கள் அண்டை மாநிலங்களிலிருந்து தொழிற்சாலைகள் ஆந்திரம், தெலங்கானாவுக்கு இடம்பெயர்வதற்கும், வலுவான கட்டமைப்பு, பயிற்சி பெற்ற மனிதவளம் போன்றவை புதிதாக உருவான மாநிலங்களால் ஈர்க்கப்படுவதற்கும் வழிகோலக்கூடும்.
புதிய மாநிலங்கள், அளவுக்கு அதிகமான வரிச் சலுகைகள் அளிக்குமேயானால் புதிய முதலீடுகளும், பழைய தொழில் நிறுவனங்களின் விரிவாக்கமும் அந்த மாநிலங்களால் ஈர்க்கப்படுவது தவிர்க்க முடியாது. ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களின் வளர்ச்சிக்காகப் பகுதி அடிப்படையிலான வரிச் சலுகைகளை அளிக்க முற்படுவதற்கு முன்னால், தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியிருப்பதுபோல, அண்டை மாநிலங்களைக் கலந்தாலோசித்து அவர்களது நலன்களையும் பாதுகாப்பது மத்திய அரசின் கடமை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress

மே. வங்கத்தில் திரிணமூல், கேரளத்தில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வெற்றி: ஃபரூக் அப்துல்லா

ஈரான் தலைநகரில் நாளை முதல் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்!

பலம் வாய்ந்த ஆர்சிபியுடன் மோதும் குஜராத்: சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

