இடைக்கால ரயில்வே நிதிநிலை அறிக்கையில் எந்தவிதமான கட்டண உயர்வும் இருக்காது என்பதும், தமிழ்நாட்டைப் பற்றி கவலைப்படவே மாட்டார்கள் என்பதும் ஏற்கெனவே தெரிந்ததுதான்.
இரண்டு மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில் கட்டணங்களை உயர்த்தி, மக்களின் மனக்கசப்பை சம்பாதிக்க எந்தவொரு ஆளும்கட்சியும் விரும்பாது. அதைத்தான் மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேயும் செய்துள்ளார். அடுத்த ஆட்சியின் ரயில்வே நிதிநிலை அறிக்கையிலும் கட்டணங்கள் உயராது. ஏனென்றால், ரயில்வே போக்குவரத்து ஆணையம் அமலுக்கு வந்துவிடுவதால், ரயில் கட்டணத்தை இந்த ஆணையமே அவ்வப்போது தீர்மானிக்கும். ஆகவே, அரசியல்வாதிகள் தங்கள் பொறுப்பை ஒரேயடியாக தட்டிக் கழித்துவிட்டார்கள்.
அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஒரு வலிமையான, முன்னுதாரணமான, ரயில்வே வளர்ச்சிக்கு பாதை வகுக்கக்கூடிய ஒரு இடைக்கால நிதிநிலை அறிக்கையை அவர் தயாரித்திருக்க வேண்டும். கட்டணங்களில் மாறுதல் இல்லாவிட்டாலும், ரயில்வே நிர்வாகத்தில் பாதுகாப்பு, பயணிகள் சேவையில் தேவைப்படும் சீரமைப்புகள் இவற்றை செய்திருக்க வேண்டும்.
இந்த இடைக்கால ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் கார்கே ஒரு ஆபத்தான திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். அதுதான் "பிரீமியம் ரயில்' எனப்படும் உயர்கட்டண ரயில் சேவை! தில்லி-மும்பை இடையே கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த உயர்கட்டண அதிவிரைவு ரயில் சேவை மூலம், இதே வழித்தடத்தில் ராஜதானி ரயில்களால் கிடைத்ததைவிட 48 விழுக்காடு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதால், இதேபோன்ற பிரீமியம் ரயில்கள் 17 வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று இடைக்கால ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 73 ரயில்களில் 38 ரயில்கள் விரைவு ரயில்களாகவும் 17 ரயில்கள் பிரீமியம் ரயில்களாகவும் இருக்கும் என்றால், அதாவது பாதிக்குப்பாதி பிரீமியம் ரயில்களை அமல்படுத்துவார்கள் என்றால், இனி எல்லா வழித்தடங்களிலும் பிரீமியம் ரயில்களே கோலோச்சும். இந்த பிரீமியம் ரயில் கட்டண முறை என்பது ஆம்னி பஸ் கட்டணம் போல, பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப உயர்ந்துகொண்டே போகும்.
புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படாத காரணத்தால் வேறுவழியின்றி சாதாரண மக்களை இதில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கும் உத்திதான் ரயில்வே துறையில் இன்று நடந்துகொண்டிருக்கிறது. நாளையே ரயில்வே துறையை தனியாரின் பங்களிப்புடன் நடத்துவதற்கு இது வழிவகுக்கும்.
ரயில் பெட்டிகளில் அடிக்கடி தீ விபத்து நிகழ்கிறது. புகை மற்றும் தீ அறியும் கருவிகளை சோதனையடிப்படையில் ராஜதானி எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளில் அறிமுகம் செய்திருப்பதாக அமைச்சர் சொல்கிறார். அதற்கு முன்னுரிமை அளித்து எல்லா விரைவு ரயில்பெட்டிகளிலும் அறிமுகம் செய்திருக்க வேண்டாமா? மலக்கழிவுகளை மனிதரைக் கொண்டு அகற்றுவது குற்றச்செயல் என்ற சட்டம் அமலுக்கு வந்த பிறகும், ரயில் பெட்டிகளில் பசுமைக் கழிவறைகளை (கிரீன் டாய்லட்) மேலதிகமாக அறிமுகம் செய்வதற்கான வேகம் இந்த அறிக்கையில் இல்லையே ஏன்?
ஆனால் ரயில்வே நிலங்களை தனியாருக்கு வாடகைக்கு கொடுத்து சம்பாதிப்பதில் மிகத் தீவிரம் காட்டியிருக்கிறார்கள். நிகழாண்டில் அமைக்கப்பட்ட "ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம்' மூலம் ரூ.1000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்தார்கள். இதுவரை ரூ. 937 கோடி வருவாய் கிடைத்துவிட்டது. அதில் காட்டும் ஆர்வமும், வேகமும் பயணிகளின் வசதிகளை அதிகரிப்பதில் காட்டப்படவில்லை.
2013 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வருவாய் அளவு ரூ.1,60,775 கோடியாக மதிப்பிடப்பட்டாலும், நடைமுறைச் செலவினத்தில் சுமார் 17000 கோடி உயர்ந்துவிட்டதால், நடைமுறைச்செலவினம் போக ரயில்வே துறைக்கு நிகர வருவாய் 19,655 கோடியாக இருக்கும் என்று சொல்வது பொருத்தமில்லாத வாதம். இதனை முன்கூட்டியே கணித்திருக்க வேண்டும். நடைமுறைச்செலவு எவ்வாறு, எந்தெந்த இனங்களில் உயர்ந்தது என்பதை மக்களுக்கு விளக்கும் பொறுப்பு அமைச்சருக்கு இருக்கிறது.
முறையான பராமரிப்பும் இல்லாமல், பயணிகளும் அதிகம் இல்லாமல் ஏதோ சடங்குக்கு சில பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுமே அதுபோல, அதிகம் அலட்டிக் கொள்ளாமல் போகிற போக்கில் அள்ளித் தெளித்த கோலமாக ஒரு இடைக்கால நிதிநிலை அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்திருக்கிறார். இது பயணிகளுக்கும் பயனளிக்காது. அமைச்சருக்கும் பெருமை சேர்க்காது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.