அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநில சிறுபான்மை அரசு பதவி விலகியதில் வியப்பொன்றும் இல்லை. 70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையில் 31 இடங்களை வென்ற பாரதிய ஜனதா கட்சி, தனக்குப் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க விரும்பவில்லை. அடுத்ததாக 28 இடங்களைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி அமைக்க தில்லியின் துணைநிலை ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆம் ஆத்மி கட்சி யாரிடமும் ஆதரவு கோராத நிலையிலும் 8 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ், ஒரு சுயேச்சை உறுப்பினர் மற்றும் ஒரு ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சிக்கு வலிய ஆதரவளித்ததால்தான், அரவிந்த் கேஜரிவால் முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.
முதல்வர் தெருவில் இறங்கிப் போராடலாமா, மத்திய அரசுக்கு எதிராக தர்னா செய்வது தேவைதானா என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆம் ஆத்மி கட்சி அரசின் சில நடவடிக்கைகள், நடைமுறைகளைத் தகர்ப்பதாக இருந்திருக்கலாம். ஆனால், அதற்குப் பின்னால் சில நியாயங்கள் இருக்கவே செய்தன. காவல் துறை தனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும், ஆங்காங்கே நடைபெறும் காவல் துறை அத்துமீறல்களுக்கு ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்க முடியாது என்பதையும் சாமானிய வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆம் ஆத்மி கட்சியின் 49 நாள் அரசு சில முன்னுதாரணங்களை உருவாக்கி இருப்பதை மறுப்பதற்கில்லை. சிவப்பு விளக்கு வாகனங்களில் வளைய வராமல் இருப்பது, பிரம்மாண்டமான பங்களாக்களில் அமைச்சர்கள் குடியிருப்பதைத் தவிர்ப்பது, வாக்காளர்களின் கருத்தை அறிந்து முடிவெடுப்பது போன்ற சில செயல்பாடுகள் இந்திய அரசியலில் வரவேற்புக்குரிய மாற்றங்கள்.
அரவிந்த் கேஜரிவாலின் பல முடிவுகள் நிர்வாக ரீதியாக முறையான திட்டமிடலுடன் அறிவிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு நிஜம். பதவியில் அமர்ந்தவுடன் அவசர அவசரமாக எல்லா திட்டங்களையும் நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற அவரது முனைப்பு அவரது அனுபவமின்மையைத்தான் வெளிச்சம் போட்டது. 1967இல் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற அறிஞர் அண்ணாவுக்கும் நிர்வாக அனுபவம் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் அவரிடம் தெளிவு இருந்தது. நிதானம் இருந்தது. அரசியல் சாதுர்யம் இருந்தது. அரவிந்த் கேஜரிவால் அண்ணாவிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
தேர்தலின்போது வாக்குறுதி அளித்து விட்டோம் என்பதற்காக இத்தனை அவசரமாக இலவசத் தண்ணீர், மின் கட்டண மானியம், தெருவோரம் வீடின்றி வாழும் மக்களுக்கு தங்கும் வசதி என்று திட்டங்களை நிறைவேற்றத் துடித்திருக்க வேண்டாம். தில்லிக்கு எரிவாயு விநியோகம் செய்யும் விவகாரத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய தில்லி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேஜரிவால் உத்தரவிட்டது புத்திசாலித்தனமான முடிவல்ல. அம்பானியையே எதிர்க்கிறார் என்று பெருமை தட்டிக் கொள்வதிலல்ல சாமர்த்தியம். விசாரணையை முடுக்கிவிட்டு குற்றத்தை நிரூபித்திருக்க வேண்டும். பதவியைத் துறந்திருக்கக் கூடாது.
பதவிக்கு வந்தால் ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்பது ஆம் ஆத்மி கட்சியின் தலையாய தேர்தல் வாக்குறுதி என்பது சரி. அதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடித்து அந்த மசோதாவை முறையாக நிறைவேற்றுவதுதானே புத்திசாலித்தனம்? காங்கிரஸ் கட்சியை ஆம் ஆத்மி கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ள வைத்திருந்தால், அது சாமர்த்தியம். கேஜரிவாலைப் பதவி விலகச் செய்து விட்டார்களே பா.ஜ.க.வும், காங்கிரஸýம், அவர்களல்லவா புத்திசாலிகள்?
அரசியலுக்கும் ஆட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சியினர் புதியவர்கள் என்பதால், அவசரமும் ஆத்திரமும் அவர்கள் ஆட்சியைக் கவிழ்த்து விட்டது. ஆட்சி இழந்ததால் மக்களின் அனுதாபத்தைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்று கேஜரிவால் நினைத்தால் அது அரசியல் முதிர்ச்சியின்மை. மக்களின் ஆதரவு எப்படியும் திரும்பலாம்.
தில்லி துணைநிலை ஆளுநர் (மத்திய அரசு) கேஜரிவாலின் அமைச்சரவை முடிவின்படி சட்டப்பேரவையைத் கலைத்து மறு தேர்தலுக்கு வழிகோலாமல், குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைத்திருக்கிறார். விரைவிலேயே குதிரைப் பேரம் நடக்கும். ஆம் ஆத்மி கட்சி பிளவுபடும். மாற்று ஆட்சி பதவி ஏற்கக்கூடும். அது சாத்தியப்படாவிட்டால் மட்டும்தான், அவை கலைக்கப்பட்டு மக்களவைத் தேர்தலுடன் தில்லி சட்டப்பேரவைக்கும் மறு தேர்தல் நடத்தப்படும்.
அதனால், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகுதான் அரவிந்த் கேஜரிவால் சிறுகதையா தொடர்கதையா என்பதை முடிவு செய்ய இயலும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு: நயினாா் நாகேந்திரன்

சிறப்பு அலங்காரத்தில் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா்...

தோ்தலை புறக்கணித்த புதுப்பட்டினம் மீனவா்கள்: அதிகாரிகள் பேச்சு நடத்தியதால் வாக்களிப்பு

ஜனநாயக கடமையாற்றிய மன நல காப்பகவாசிகள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

