இன்று இந்திய அரசியலில் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு, நிலக்கரி வயல் ஒதுக்கீட்டில் முறைகேடு, பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பில் தனியாருக்கு நிர்ணயிக்கப்படும் விலை என்று எதை எடுத்துக்கொண்டாலும் அதற்கு முழுமுதற்காரணம் - பொது கணக்குத் தணிக்கைத் துறை.
இத்தகைய தணிக்கைத் துறையில், தணிக்கையின் சட்ட விதிமுறைகளில் ஆழந்த அறிவும், தெளிவும், அனுபவமும் இல்லாதவர்களை தலைவர்களாக நியமித்து, அவருக்குக் கீழே பணிபுரியும் அதிகாரிகள் அவரை ஏமாற்றும் நிலை உருவானால், என்னவாகும்? இத்தகைய சூழல் இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இதை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம்.
பொது கணக்குத் தணிக்கைத் துறையின் அறிவுரைப்படி, 1992ஆம் ஆண்டு தமிழக நிதித் தணிக்கை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், பல்கலைக்கழகங்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளிட்டவற்றை தணிக்கை செய்ய உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், பாடநூல் நிறுவனம், சத்துணவுத் திட்டம் உள்ளிட்டவற்றை தணிக்கை செய்ய அரசுத்துறை நிறுவன தணிக்கைத் துறையும் உருவாக்கப்பட்டன.
தற்போது கடந்த சில ஆண்டுகளாக இந்த இரு துறைகளின் தலைவர்களாக நியமிக்கப்படும் அதிகாரிகள் தணிக்கை குறித்த ஆழ்ந்த புரிதல் இல்லாதவர்களாக இருப்பதால், இவர்கள் மூலம் சில உத்தரவுகளை தணிக்கைத் துறையின் கருப்பு ஆடுகள் பிறப்பிக்கின்றன. அதில் மிகவும் பாதகமான ஒன்று: தணிக்கையை ஒரு வாரம், 10 நாள்கள், 30 நாள்கள் என இலக்கு வைத்து முடிக்க வேண்டும் எனும்
உத்தரவு.
மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் என்றாலும், சத்துணவுத் திட்டம், நியாயவிலைக் கடைகள் போன்ற அரசுத் துறை அமைப்புகள் என்றாலும் தணிக்கை செய்பவர் உரிய ஆவணங்களை, ரசீதுகளை சரிபார்த்தாக வேண்டும். உள்ளாட்சிகளில் சொத்துவரி, தொழில்வரி விதிக்கப்பட்ட முறை, வசூல் இழப்பு, முறைகேடு ஆகியவற்றையும் சரிபார்க்க உரிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று நியாயவிலைக்கடைகள், பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி நிதித்திட்டத்துக்கான செலவுகள் குறித்து தணிக்கை செய்யும்போதும் அனைத்து ரசீதுகளையும் சரிபார்த்து, அரிசி மூட்டை இருப்புக் கணக்கு உள்பட பார்த்தாக வேண்டும். அதுதான் சரியான தணிக்கை முறை. ஆனால், உள்ளாட்சிகளிலும், அரசுத் துறைகளிலும் பதிவேடுகள், செலவுக்கான ரசீதுகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.
உத்தரவுப்படி, குறித்த நாள்களுக்குள் தணிக்கையை முடிக்கும்போது, இன்னின்ன ஆவணங்களை இந்த அதிகாரிகள் தரவில்லை என்று தணிக்கையாளர் குறிப்புரை எழுதினால், உயரதிகாரி இதில் மேலாய்வு செய்து, அந்த பதிவேட்டுக்கு தொடர்பான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அதுவும் செய்யப்படுவதில்லை. தணிக்கையை மட்டுமே வேகமாக முடிக்கும்படி அதிகாரிகள் நிர்பந்திக்கிறார்கள். இவ்வாறு தணிக்கையை அறிவியல்பூர்வமாகச் செய்யவிடாமல், அவசரக் கோலத்தில் முடித்துக் கொடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பது தமிழக முதல்வருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. நிர்வாகம் பற்றிய புரிதலுடனே முதல்வர் இதற்கு ஒப்புதல் அளித்திருக்கமாட்டார் என்பது நிச்சயம்.
இதன் விளைவு எப்படிப் போகும்? தமிழக அரசின் பல திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கிறது. குறிப்பாக நியாயவிலைக் கடைகள் மூலம் அளிக்கப்படும் உணவுப் பொருள்களுக்கான மானியம், பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி, தொடர்கல்வி ஆகியவற்றுக்காக அரசு தரும் மானியம் ஆகியவை மத்திய அரசால் ஆண்டுதோறும் விடுவிக்கப்படும் நிதியால் நடத்தப்படுகிறது.
இந்த திட்டங்கள் சரியாக நிறைவேற்றப்படவில்லை என்ற புகாரின் பேரில் அல்லது சில இடங்களில் மட்டும் மாதிரி ஆய்வு என்பதற்காக மத்திய அரசின் பொதுக் கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரிகள் மேலாய்வு செய்ய முடியும். அப்போது மாநில தணிக்கைத் துறை பல தணிக்கைகளை அவசரக் கோலத்தில் முடித்திருப்பது குறித்து அவர்கள் அறிக்கை அளித்தால், அதைக் காரணம் காட்டி, திட்டக்குழு இதற்கான மானிய ஒதுக்கீட்டை குறைக்க நேரிடும். அதனால் மாநிலத்திற்குத்தான் இழப்பு.
தணிக்கை அனுபவம் இல்லாததால் இத்தகைய முடிவுகளை எடுக்கிறார்களா அல்லது ஆட்சிக்கும் முதல்வருக்கும் களங்கம் ஏற்படட்டுமே என்ற எண்ணத்தில் தெரிந்தே செய்கிறார்களா என்று தெரியவில்லை. முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, தணிக்கைத் துறையின் செயல்பாடுகளையும், உத்தரவுகளையும் மறுபரிசீலனை செய்வது அவசியம். இல்லையென்றால் அது அவருக்குப் பல தர்மசங்கடங்களை ஏற்படுத்தக்கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்
மாற்றம் தேவையில்லை எனக் கூறினாரா அஜித்? சா்ச்சைக்கு மேலாளா் விளக்கம்

இருந்தும் பயன்படாத கைப்பேசி பைகள்; பெயரளவுக்கு செயல்பட்ட சக்கர நாற்காலிகள்

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய முதல் வாக்காளா்களின் குரல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

