மிஞ்சியது ஏமாற்றம்தான்!

மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒட்டுமொத்த இந்தியாவே கூர்ந்து கவனித்த தொலைக்காட்சி பேட்டி அது. தனியார் தொலைக்காட்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழு தலைவரும், அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளருமானவர் பேட்டி அளிக்கிறார் எனும்போதே அந்தப் பேட்டியின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
Updated on
2 min read

மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒட்டுமொத்த இந்தியாவே கூர்ந்து கவனித்த தொலைக்காட்சி பேட்டி அது. தனியார் தொலைக்காட்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழு தலைவரும், அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளருமானவர் பேட்டி அளிக்கிறார் எனும்போதே அந்தப் பேட்டியின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இளைஞரான ராகுல் காந்தி, இந்தியாவின் வருங்காலம் பற்றியோ அவர் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தால் செயல்படுத்த விரும்பும் திட்டங்கள் பற்றியோ ஏதாவது கூறுவார் என்கிற நம்பிக்கையுடன் தொலைக்காட்சிப் பேட்டியைப் பார்த்த அனைவருக்குமே, "இவ்வளவுதானா இவர்...' என்கிற ஏமாற்றம்தான் மிஞ்சியது.

மகளிருக்கு கூடுதல் முக்கியத்துவமும் எல்லா தளங்களிலும் நிர்ணாயகமான பொறுப்புகளும் வழங்குதல், தகவல் பெறும் உரிமைச் சட்டம், இப்போது இருக்கும் நடைமுறைகளை மாற்றுதல் ஆகிய மூன்று விஷயங்கள் பற்றி பல தடவை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார் ராகுல் காந்தி. இவை மூன்றுமே எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவைதான். அவற்றில் என்ன குறைபாடுகள், எப்படி எல்லாம் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பது பற்றி அவருக்கு ஏதாவது கருத்துகள் உண்டா என்றால், அந்தப் பேட்டியைப் பார்த்த பிறகு அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஊடகங்களும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்கிறார். அரசின் பங்களிப்பே இல்லாமல், முழுக்க முழுக்க தனியாரால் நடத்தப்படும் ஊடகங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கொண்டுவர முடியாது என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி பேசும் ராகுல் காந்தி, மக்களுக்காக, மக்களிடம் நன்கொடை வசூலித்து நடத்தப்படும் அரசியல் கட்சிகளை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கை பற்றி வாயே திறக்கவில்லை.

÷இப்போதைய நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும், சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறுகிறார். அரசியல், நிர்வாகம், சமூகம், நீதித்துறை, பொருளாதாரம் என்று பல தளங்களில் சீர்திருத்தம் மேற்கொண்டாக வேண்டும். ராகுல் காந்தி இதில் எந்த சிஸ்டத்தை, அதாவது நடைமுறையை, மாற்ற விரும்புகிறார், அதில் எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறார் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க இந்தப் பேட்டி அற்புதமான வாய்ப்பாக இருந்திருக்கும். பொத்தாம் பொதுவாக எதையோ சொல்லி ராகுல் காந்தி தனது அறியாமையை வெளிப்படுத்தியதுதான் மிச்சம்.

ராகுல் காந்தியின் பிரசாரத்தை நம்பித்தான் காங்கிரஸ் கட்சியே மக்களவைத் தேர்தலை எதிர் நோக்க இருக்கிறது. அப்படிப்பட்டவருக்கு, கேரளத்திலுள்ள சில பெண்மணிகள் விலைவாசி ஏற்றத்தைப் பற்றிச் சொல்வதைக் கேட்ட பிறகுதான் அது பற்றிய கவலை வந்தது என்று சொன்னால் வேடிக்கையாக இருக்கிறது. பணவீக்கம், பொருளாதாரம் பற்றி எல்லாம் தனது கட்சித் தலைவர்களுடன், அமைச்சர்களுடன், தலைநகர் தில்லியிலுள்ள நிபுணர்களுடன் இவர் விவாதிப்பதே இல்லை என்பதைத்தான் இது வெளிச்சம் போடுகிறது.

÷மீண்டும் மீண்டும் இளைஞர்கள், பெண்கள் அதிக அதிகாரம் பெறுதல், தகவல் பெறும் உரிமைச் சட்டம், நிர்வாக இயந்திரத்தை, நடைமுறைகளை மாற்றுதல் என்று பல தடவை சொன்னதுதான் நினைவில் நிற்கிறது. இன்றைய நடைமுறைகள் சரியில்லை. வாக்களிக்கும் குடிமக்களுக்கு நியாயமாக நிர்வாகம் நடக்கவில்லை என்று ராகுல் காந்தி திரும்பத் திரும்ப கூறும்போது, "சுதந்திர இந்தியாவை அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும், உங்கள் குடும்பமும்தானே இந்த அவலங்களுக்கெல்லாம் காரணம்?' என்று அவரிடம் கேட்கத் தோன்றுகிறது.

எதைப் பற்றியுமே ஆழ்ந்த சிந்தனையும், தெளிவான பார்வையும் இல்லாத ஒருவராக ராகுல் காந்தி தன்னை வெளிப்படுத்திக் கொண்டதுதான் அதைவிட வேதனை. பிரதமர் வேட்பாளர் என்பதை விடுங்கள், அந்தப் பேட்டியைப் பார்த்த பிறகு ராகுல் காந்தியை ஓர் அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்வதில்கூட தயக்கம் ஏற்படுகிறது.

ராகுல் காந்திக்காக பரிதாபப்படுவதா இல்லை ராகுல் காந்தியின் தலைமையில் இயங்க முற்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்காகப் பரிதாப்படுவதா என்று தெரியவில்லை. இப்படி பேட்டி அளித்து தனது அறியாமையை வெளிப்படுத்தியதற்கு பதிலாக ராகுல் காந்தி பேட்டி அளிக்காமலே இருந்திருக்கலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com