பல மாதங்களுக்கு பிறகு, குடியரசுத் தலைவரின் உரை வழக்கமான பல்லவிகளையும், அரசின் சாதனைகளையும் பட்டியலிடுவதை விட்டு ஆக்கப் பூர்வமான சில யோசனைகளை முன் வைத்திருக்கிறது. இந்த ஆண்டு குடியரசுத் தலைவரின் உரை மத்திய உள்துறை அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டு குடியரசுத் தலைவரால் படிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அப்படியே உள்துறை தயாரித்திருந்தாலும் அதில் குடியரசுத் தலைவர் தனது கருத்துக்களை இணைத்திருக்கிறார் என்பது தெளிவு.
குடியரசுத் தலைவரின் உரையில் இரண்டு முக்கியமான பிரச்னைகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. அரசு என்பது இலவசங்களை வாரி வழங்கும் அல்லது விநியோகம் செய்யும் நிறுவனமல்ல என்பதை அரசியல் கட்சிகளுக்கு குடியரசுத் தலைவர் நினைவுபடுத்தியிருக்கிறார். அடுத்தபடியாக, மக்கள் போராட்டம் என்பது திறமையான நிர்வாகத்துக்கு மாற்று அல்ல என்பது அவர் தனது உரையில் குறிப்பிட்டிருக்கும் இன்னொரு கருத்து.
மேலே குறிப்பிட்ட இரண்டு கருத்துகளுமே தில்லியில் சமீபத்தில் பதவியேற்றிருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு விடுக்கப்பட்டிருக்கும் அறிவுரை என்று கருதினால் தவறு. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இந்தியாவில் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கை அல்லது ஆலோசனை.
கொள்கைகளின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை முன்வைத்து வாக்காளர்களை அரசியல் கட்சிகள் அணுகிய தேர்தல்முறை இப்போது அறவே இல்லை என்றாகி விட்டது. இடதுசாரி கட்சிகள் ஆட்சி செய்த மாநிலங்களிலேயேகூட, தனியார்மய, உலகமய, சந்தைப் பொருளாதாரச் சிந்தனைகளின் அடிப்படையிலான பல செயல்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் நிலைக்கு இன்றைய சூழல் மாறிவிட்டிருக்கிறது. குறிப்பிட்ட கொள்கையின் அடிப்படையில் மக்கள் மன்றத்தை சந்தித்த காலம்போய், அத்தனை கட்சிகளும் ஏதாவது உணர்வு பூர்வமான வாக்குவங்கி கோஷத்தையும் வாக்காளர்களைக் கவரும் விதத்திலான இலவசத் திட்டங்களையும் முன்வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
மாணவ - மாணவியருக்கு சைக்கிள், மடிக்கணினி, வீடு தோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி என்று தொடங்கி, விலையில்லாப் பொருள்களாக மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி போன்றவற்றை விநியோகிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சமீபத்திய சட்டப்பேரவை தேர்தல்களில் தில்லியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி மின் கட்டணம் குறைப்பு, இலவசக் குடிநீர் விநியோகம் என்றெல்லாம் வாக்குறுதிகளை முன்வைக்கும் அளவுக்கு இந்தப் போக்கு மாறிவிட்டிருக்கிறது.
சமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்கு இலவச வேட்டி, சேலை, அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்குவது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். குறைந்த விலையில் தரமான பொருள்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குதல், கையறு நிலையில் இருக்கும் ஏழை எளியவர்கள் பயனடையும் வகையில் தரமான கல்வி, மருத்துவம் வழங்குதல், குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதி செய்து கொடுத்தல் போன்றவைகளையும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் மிக்ஸி, கிரைண்டர்களும் விநியோகம் செய்வதையெல்லாம் ஆரோக்கியமான அரசியல் வழிமுறைகளாக ஏற்றுக்கொள்ள முடியுமா?
மேலே குறிப்பிட்ட பிரச்னையில் குடியரசுத் தலைவரின் கருத்தை அட்சரம் பிசகாமல் வழிமொழியத் தோன்றும் நம்மால், இரண்டாவதாக அவர் தெரிவித்திருக்கும் கருத்து ஏற்புடையதுதான் என்றாலும், அதில் சில தயக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவது, ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே தெருவில் இறங்கிப் போராட முற்படுவது போன்றவை, குடியரசுத் தலைவர் கூறியதுபோல நல்ல நிர்வாகத்துக்கு மாற்றாக இருக்க முடியாது. ஆனால், ஊழலால் புரையோடிப் போயிருக்கும் நிர்வாக இயந்திரத்தை வழிக்குக் கொண்டு வரவும், மக்கள் மன்றம் திரளும் என்கிற அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்கும் இதுபோன்ற போராட்டங்களும் தேவைப்படத்தான் செய்கின்றன.
சுதந்திரக் குடியரசில் மக்களுக்காக அரசும், அரசு நிர்வாகமும் இயங்க வேண்டுமே தவிர, அரசு இயந்திரத்திற்காக மக்கள் என்கிற நிலைமை ஏற்படும்போது, "தாங்கள்தான் இந்நாட்டு மன்னர்கள்' என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்கு இதுபோன்ற வழிமுறைகளைக் கையாள வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. சில சந்தர்ப்பங்களில் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஏற்பட்டுவிடுகிறது.
குடியரசுத் தலைவர் வெளியிட்டிருக்கும் இரண்டு கருத்துகளுமே, மக்கள் மன்றத்தால் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும். அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். தொடர்ந்த விழிப்புணர்வு மட்டும்தான் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயக கடமையாற்றிய மலைவாழ் மக்கள்

விஜய் தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம்: கோபி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்

பேருந்துகளில் பொங்கல், தீபாவளி நேரங்களைக் காட்டிலும் அதிக கூட்டம்: மாவட்டத் தோ்தல் அலுவலா்

உத்தரகண்ட்: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து 8 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

