சரித்திரம் திருத்தப்படுகிறது!

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகம் முழுவதும் விவாதத்தைக் கிளப்பி இருக்கும் ஒரு முடிவை ஜப்பானியப் பிரதமர் ஷிண்சோ அபே எடுத்திருக்கிறார்.
Updated on
2 min read

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகம் முழுவதும் விவாதத்தைக் கிளப்பி இருக்கும் ஒரு முடிவை ஜப்பானியப் பிரதமர் ஷிண்சோ அபே எடுத்திருக்கிறார். இந்த முடிவு, ஒரு வகையில் ஜப்பானிய நாட்டின் சுயமரியாதையை நிலைநிறுத்தும் வகையிலானது என்றாலும், இதன் பின் விளைவுகள், மீண்டும் ஜப்பானின் ஏகாதிபத்திய எண்ணத்திற்கு வித்திட்டுவிடுமோ என்கிற பயம் அண்டை நாடுகளுக்கு!

இரண்டாம் உலகப் போரில், ஜப்பானியப் படைகள், அடால்ஃப் ஹிட்லரின் "நாசி'ப் படைக்கும், பெனிட்டோ முசோலினியின் "பாசிச'ப் படைக்கும் குறைவில்லாமல் போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் செய்திருக்கின்றன என்பதில் சந்தேகமே இல்லை. 1945-இல் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு வெடித்து, இரண்டாம் உலக மகா யுத்தத்தை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டு வந்தபோது, வருங்காலத்தில் ஜப்பான் மீண்டும் ஒரு வல்லரசாகி விடக் கூடாது என்பதில் நேச நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ் ஆகியவை உறுதியாக இருந்தன.

அணுகுண்டு போட்டு, தான் ஏற்படுத்திய பேரழிவுக்குப் பிராயசித்தம் தேடும் வகையில், போரால் சீர்குலைந்து கிடந்த ஜப்பானியப் பொருளாதாரத்தை முன்புபோல உயிர்ப்பிக்க அமெரிக்கா தீர்மானித்தது. அதற்கு, அமெரிக்கா விதித்த நிபந்தனைதான் புதியதொரு அரசியல் சட்டம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட அரசியல் சட்டத்தின் 9-ஆவது பிரிவு, ஜப்பானிய மக்கள் "போர்' தேசத்தின் உரிமை என்பதை நிரந்தரமாக நிராகரிப்பதாகவும், சர்வதேசப் பிரச்னைகளிலோ, விவகாரங்களிலோ படை பலத்தால் மிரட்டிப் பணிய வைப்பதை முற்றிலுமாகக் கைவிடுவதாகவும் உறுதி ஏற்கிறது. இந்த அரசியல் சட்டப் பிரிவு இருக்கும்வரை, ஜப்பான் எந்தக் காரணம் கொண்டும், இன்னொரு நாட்டுடன் போரில் ஈடுபட முடியாது.

ஜப்பானிய அரசியல் சட்டத்தின் 9-ஆவது பிரிவை அகற்றுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதல் பெற்றால் மட்டும் போதாது. அந்த ஒப்புதலைத் தொடர்ந்து, பொது வாக்கெடுப்பின் மூலம் ஜப்பானிய மக்களிடம் ஒப்புதல் பெற்றால் மட்டுமே இந்தச் சட்டப் பிரிவை மாற்ற முடியும்.

பிரதமர் ஷிண்சோ அபே, இந்தச் சட்டப் பிரிவை அகற்றுவதற்குப் பதிலாக, இதற்குப் புதிய விளக்கம் கொடுக்க முற்பட்டிருக்கிறார். அந்தப் புதிய விளக்கத்தின்படி, பல்லில்லாத அரசியல் சட்டத்திற்கு அதிகாரம் வழங்கி, ராணுவம் செயல்பட வழிகோலுகிறார். தனது தற்காப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற ஜப்பானிய ராணுவத்தின் செயல்பாடுகளைச் சற்று மாற்றி அமைத்து, பிரச்னையிலோ, போரிலோ ஈடுபடும் தனது தோழமை நாடுகளின் உதவிக்கும் ஜப்பானிய ராணுவம் பயன்படலாம் என்று மாற்ற முற்பட்டிருக்கிறார். போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்னர், ஜப்பான் மீது சட்டப் பிரிவு 9-ஐத் திணித்த அமெரிக்காவே, இப்போது அந்தச் சட்டப் பிரிவை அகற்றிவிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆஸ்திரேலியா, பிலிப்பின்ஸ், வியத்நாம், கம்போடியா போன்ற நாடுகளும் ஜப்பானின் முடிவை ஆதரிக்கின்றன. காரணம், தெற்கு, கிழக்கு சீனக் கடல் பகுதிகளில், சீனா தனது அதிகாரத்தை நிலைநிறுத்த விரும்புவதும், ஏனைய நாடுகளின் அதிகாரத்தை மறுப்பதும்தான்.

பிரதமர் ஷிண்சோ அபேயின் முடிவுக்கு மிகப் பெரிய எதிர்ப்பு தென் கொரியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும்தான் எழுந்திருக்கிறது. ஜப்பானின் போர்க் குற்றங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் அவை இரண்டும்தான். கொரியப் பெண்மணிகளை கணக்கு வழக்கில்லாமல் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியவர்கள் ஜப்பானியப் படையினர் என்பதை அவர்களால் மறக்கவே முடியவில்லை. தென் சீனக் கடலில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட முடியாமல், ஜப்பான் தடுக்க முற்படும் என்பதுதான் சீனாவின் கவலை.

ஜப்பான் இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், தனது பாதுகாப்புக்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்றாலும், ஜப்பானிய ராணுவம் ஒன்றும் பலவீனமானதல்ல. 2,50,000 வீரர்களைக் கொண்ட ஜப்பானிய ராணுவம், சண்டையில் ஈடுபடுவதில்லையே தவிர, அது இஸ்ரேலின் ராணுவத்துக்கு நிகரான தொழில்நுட்பத்தைக் கொண்டது. பிரதமர் ஷிண்சோ அபேயின் முடிவு, ஜப்பானின் சுயமரியாதை சார்ந்ததா இல்லை சீனாவுக்குத் தரப்பட்டிருக்கும் எச்சரிக்கையா என்பது இருக்கட்டும். நிச்சயமாக இது, சரித்திரத் திருப்புமுனை முடிவு என்பதில் சந்தேகமே இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com