கருணைக்கொலையை அனுமதிக்கலாமா என்று மாநில அரசுகளிடம் உச்சநீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்தை கேட்பதோடு, மக்கள் கருத்தையும் கேட்பதே சரியானதாக இருக்கும்.
கருணைக்கொலையை ஏற்பதற்கில்லை என்று மத்திய அரசு மறுத்துவிட்டது. கருணைக்கொலையும் ஒரு வகையில் தற்கொலைதான். அது சட்டப்படி குற்றம் என்று குறிப்பிட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்வது குற்றம் என்றாலும், தற்கொலை செய்து கொண்டவரை சட்டம் தண்டிக்க முடியாது. முயன்று பிழைத்தவரைத்தான் தண்டிக்க முடிகிறது. மேலும், தற்கொலை செய்துகொள்ள முடியாத நிலையில் இருப்பவருக்குத்தான் கருணைக்கொலை தேவைப்படுகிறது என்பது கருணைக்கொலைக்கு ஆதரவான வாதம்.
கருணைக்கொலைக்கு அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுப்பதும், நீதிமன்றத்தை அணுகுவதும் அண்மைக்காலமாக காண நேர்கின்ற ஒரு சங்கடம். அனுமதி கேட்போரும் முழு விருப்பத்துடன் கேட்பதில்லை. பொருளாதார வசதி இல்லாததால் ஏற்பட்டுவிட்ட மனவலி இவர்களை இவ்வாறு கேட்கத் தூண்டுகிறது.
குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்ட தனது குழந்தையை, தன் மரணத்துக்குப் பிறகு யார் பார்த்துக் கொள்வார்கள்; யார் அதற்கான செலவுகளை ஏற்பார்கள்? ஆகவே கொன்றுவிட அனுமதிக்கவும் என்று பெற்ற தாயே கேட்கும் சூழ்நிலை எத்தகையது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
கருணைக்கொலை என்பது மரணப்படுக்கையில் உள்ளவரின் வலி, வேதனையைக் காட்டிலும், அவரைச் சார்ந்துள்ளவர்களின் பொருளாதார நெருக்கடி சார்ந்ததாகத்தான் இருக்கிறது. மிகப்பெரும் செலவை ஏற்படுத்தி, அவர்களை நடைப்பிணமாக மாற்றிவிடும் சூழலை கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஏற்படுத்தி விடுகின்றன. பிழைக்கும் வாய்ப்பு இல்லை. வீட்டுக்கு கொண்டு போய்விடுங்கள் என்று சொல்லும் மருத்துவர்கள் அரிதாகிவிட்டனர். செலவு எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை என்று உடனிருந்தே உசுப்பேற்றிவிடும் கெட்ட உறவுகளும் அதிகமாகிவிட்டன.
ஒருவர் மரணப் படுக்கையில் இருக்கும்போது அவருக்கான மருத்துவச் செலவு மிக அதிகம். இதற்காகவே கருணைக் கொலைக்கு அனுமதி கேட்கப்படுகிறது. இந்தக் கோரிக்கை நியாயமாக இருந்தால், நீதிபதிகள் கொண்ட குழு இதனை ஆராய்ந்து, உயிர்காக்கும் இயந்திரங்களை விலக்கிக் கொள்ள அனுமதிப்பதுதான் சரியானதாக இருக்க முடியும் என்று நீதியரசர் மார்க்கண்டேய கட்சு ஒரு வழக்கில் கூறியிருக்கிறார்.
பல குடும்பங்களுக்கு தன் கணவர் அல்லது மனைவி அல்லது மகன் பிழைக்க மாட்டார் என்று தெரிந்திருந்தும்கூட, பணத்தை செலவழிக்க மனமில்லாமல் சாகவிட்டுவிட்டார் என்ற சமூக குற்றச்சாட்டுக்கு ஆளாக நேருமோ என்ற அச்சம்தான், மரணப் படுக்கையில் இருப்பவரின் மருத்துவச் செலவை கடன்பட்டும் ஏற்கும் கட்டாயத்தை உருவாக்குகிறது. ஓர் உறவின் இழப்பைவிட, சமூகக் குற்றச்சாட்டுதான் அதிக வலி தருவதாக இருக்கிறது. கருணைக் கொலையை சட்டம் அனுமதித்தாலும்கூட, சமூகத்துக்காக அச்சப்பட்டு செலவு செய்வோரின் எண்ணிக்கை தொடரவே செய்யும்.
கருணைக்கொலையும் ஒருவகை தற்கொலை என்ற கருத்தைக் காட்டிலும் கருணைக்கொலையை தீர்மானிப்பவர் யார் என்பதற்கு முக்கியத்துவம் தருவதே இந்தப் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்.
ஒருவர் வாழ்கின்ற காலத்திலேயே கண் தானம், உடல் தானம் செய்திருந்தாலும்கூட, அவர் இறந்தபிறகு அவரது ரத்த உறவுகள் அனுமதித்தால் மட்டுமே கண் தானம், உடல் தானம் நடைமுறை சாத்தியமாகிறது. அவர்கள் விரும்பாவிட்டால் இறந்தவரின் விருப்பம் நிறைவேறுவதே இல்லை. ஆக, ஒருவர் இறந்த பிறகு அல்லது மரணப் படுக்கையில் இருக்கும்போது தீர்மானிக்கிறவர்கள் அவருடைய ரத்த உறவுகளே.
ஆக, "நான் சுயநினைவில்லாமல் மரணப்படுக்கையில் இருக்கும்போது, என்னைக் கருணைக்கொலை செய்வது குறித்து என் உறவுகளில் இன்னார் தீர்மானிக்கலாம்' என்பதை ஒருவர் சுயநினைவுடன் எழுதி, பதிவு செய்திருக்கிறார் என்றால், அவர் குறிப்பிடும் ரத்த உறவுகளின் சம்மதமும், இனி அவர் இயந்திர உதவியில்லாமல் பிழைப்பது இயலாது என்று மருத்துவக் குழுவின் சான்றும் இருக்குமானால் கருணையைக் கொலையை அனுமதிக்கலாம்.
ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சொத்துக்காகவும், அதிக பணம் செலவாகும் என்பதாலும் "கருணைக்கொலை' நாடகங்கள் நடத்தப்படலாம். இந்தப் பிரச்னையில் முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் தரப்பட வேண்டும். போதிய நிபந்தனைகளுடன் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டால், கருணைக்கொலையை அனுமதிப்பதில் தவறில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

வார பலன்கள் (ஏப். 24 - 30) மேஷம் - மீனம்! பதவி உயர்வு யாருக்கு?

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!

தன்னுடைய ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து பிறந்தநாளைக் கொண்டாடிய சச்சின்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

