"பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்' என்ற சொலவடைக்கு ஏற்ப, ஏற்கெனவே ஒரு மலேசிய விமானம் கடலில் விழுந்து, 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியான சம்பவத்திலிருந்து மீளாத நிலையில், இப்போது மீண்டும் ஒரு விபத்தையும் 298 பேரின் உயிர்ப்பலியையும் எதிர்கொண்டுள்ளது மலேசிய ஏர்லைன்ஸ்.
உக்ரைனில் நடக்கும் உள்நாட்டுக் கலவரத்துக்கு மலேசிய ஏர்லைன்ஸ் விமானமும் அதன் பயணிகளும் பலியாகியுள்ளனர்.
உக்ரைன் பிரிவினைவாதிகள் மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை ஏவுகணையால் தாக்கியதில், அப்பாவிப் பயணிகள் 298 பேர் இறந்துள்ளனர். உலக நாடுகளின் கண்டனங்கள் ஒரு வகையில் பார்த்தால் இயலாமையின் வெளிப்பாடு என்றுதான் கூறவேண்டும்.
கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி, ரஷ்ய ஆதரவுப் பிரிவினைவாதிகள் அவ்தீகா என்ற இடத்தில் இருந்த உக்ரைன் ராணுவ தளவாட மையத்தை கைப்பற்றிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அந்த ராணுவ மையத்தில் தரையிலிருந்து வானைத் தாக்கும் ஏவு
கணைகள் இருந்தன. ஜூன் 29-ஆம் தேதி, தோனெஸ்க் மக்கள் படை என்ற பிரிவினைவாத இயக்கம், தாங்கள்தான் புக் ஏவுகணை அமைப்பை கைப்பற்றிவிட்டதாகச் சொன்னதாக ரஷ்யத் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியும் வெளிவந்துள்ளது.
இவை தவிர, ஜூலை 14-ஆம் தேதி, கலவரம் நடந்துகொண்டிருக்கும் பகுதியிருந்து 6,500 மீட்டருக்கு மேலாகப் பறந்துசென்ற ராணுவ சரக்கு விமானம், ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டுள்ளது.
மற்றொரு சிறுரக விமானமும்கூட வீழ்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
நிலைமை இப்படி இருக்கும்போது, அந்த வான்தடத்தில் எதற்காக பயணிகள் விமானங்களைத் தொடர்ந்து இயக்கினார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இந்த விபத்து நடந்த அடுத்த நிமிடமே அனைத்து விமானங்களையும் மாற்று வான்வழித்தடத்தில் இயக்க முடிந்திருக்கிறது என்றால், ராணுவ சரக்கு விமானம் வீழ்த்தப்பட்ட ஜூலை 14-ஆம் தேதியே, அனைத்து பயணிகள் விமானங்களையும் மாற்று வான்வழித்தடத்தில் இயக்கியிருக்க வேண்டாமா?
பயணிகள் விமானத்தைத் தாக்க மாட்டார்கள் என்று நம்பிய பேதைமைக்கு கொடுத்திருக்கும் விலைதான் 298 உயிர்ப்பலி.
இந்த விவகாரத்தில், ரஷ்ய அரசு இந்தப் பிரிவினைவாதிகளை பின்னின்று ஊக்குவித்தது என்று குற்றம் சொல்லப் போதிய ஆதாரம் இல்லை என்றாலும், விளாதிமீர் புதின், ரஷ்ய ஆதரவாளர்களான கிழக்கு உக்ரைன் தீவிரவாதிகளுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருவதுதான் அவர்களை இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்கமளிக்கிறது என்பது உக்ரைன் அரசின் குற்றச்சாட்டு. இதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆமோதிக்கின்றன.
புதின், உக்ரைனில் நடந்த தேர்தல் முடிவுகளை வரவேற்றிருக்கிறார். உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோஷெல்தோவுடன் இணைந்து பணியாற்றவும், தனது கட்டுப்பாட்டில் ரஷ்ய ஆதரவுப் பிரிவினையாளர்கள் இல்லை எனவும் தெளிவுடுத்தி இருக்கிறார். உக்ரைன் பிரச்னையில் ரஷ்ய ராணுவம் தலையிடாமல் இருக்க ரஷ்ய நாடாளுமன்றத்தை சம்மதிக்க வைத்திருக்கிறார். ஆனாலும்கூட ரஷ்யாவின் மீதான சந்தேகம் உலகத்தின் மனதிலிருந்து அகல மறுக்கின்றன.
புதினைப் பொருத்தவரை, கிழக்கு உக்ரைன் ஏனைய உக்ரைன் பகுதிகளைப்போல ஐரோப்பிய யூனியனின் தாக்கத்திற்கு உள்படாமல் இருப்பதைத்தான் விரும்புவார். ரஷ்யாவின் நேரடித் தலையீடு இல்லாவிட்டாலும்கூட, உக்ரைன் அரசுக்கும், கிழக்கு உக்ரைன் தீவிரவாதிகளுக்குமிடையில் போராட்டமும், பேச்சுவார்த்தையும், போர் நிறுத்தமும் என்று தொடர்வதுதான் தனக்கு நன்மை என்று ரஷ்யா கருதும். உக்ரைன் பிரச்னை அவ்வளவு சீக்கிரத்தில் தீர்ந்துவிடாது.
குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் கையில் அபாயகரமான ஏவுகணைகளும், அணு ஆயுதங்களும் கிடைத்தால் உலகில் எந்த நாடும் நிம்மதியாக இருக்க முடியாது என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. தீவிரவாதிகள் கையில் ஆயுதம் கிடைத்தால் அவர்கள் அதை தாங்கள் எதிர்க்கும் அரசாங்கத்துக்கு எதிராக பயன்படுத்துவதைக் காட்டிலும், தங்கள் வல்லமையைக் காட்ட சாதாரண மக்கள் மீது பயன்படுத்துவதையே வழக்கமாக்கி விட்டிருக்கிறார்கள் - தற்போது பயணிகள் விமானத்தை ஏவுகணையால் தாக்கி வீழ்த்தியதைப்போல!
1940-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இதுபோன்ற 20 விமானத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. பழிக்குப்பழி வாங்க, இன்னும் எத்தனை தாக்குதல்கள் நடக்கப் போகிறதோ தெரியவில்லை.
கடலுக்குள் கடற்கொள்ளையர்கள். தெருவில் நடக்க பயமாக இருக்கிறது என்றால், வானத்தில் அதைவிட ஆபத்து அதிகமாகி வருகிறது. இப்படியே போனால் எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.