நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் அங்கீகாரம் பெற்றுவிட்ட பிறகும்கூட, லோக்பால் அமைப்பு உருவாகும் வாய்ப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. லோக்பால் பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய குழுவின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. தேர்தல் முடிந்து அடுத்து அமைய இருக்கும் அரசுதான் லோக்பால் அமைப்பு உருவாகவும், அதற்குத் தலைமை வகிக்க ஒருவரை நியமிக்கவும் தேவையான முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும். ஆட்சியில் அமர்ந்து ஆறு மாதம் வரை அந்த அரசுக்கு லோக்பால் அமைப்பை உருவாக்கும் எண்ணமோ, நேரமோ இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம். ஆனாலும், பதவிக்காலம் முடியும் நேரத்தில் ஓர் அரசு லோக்பாலை நியமித்திருந்தால் தார்மிக ரீதியாகச் சரியாக இருந்திருக்காது என்பதால், இப்படித் தள்ளிப் போனதும்கூட ஒருவகையில் நல்லதுதான்.
அரசு உயர் பதவியில் இருப்பவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளையும், முறைகேடுகளையும் விசாரிப்பதற்கு அறுபது ஆண்டுகளாக ஓர் அமைப்பை ஏற்படுத்த முடியாமல் போயிற்று என்றால், நாடாளுமன்றம் லோக்பால் மசோதாவை நிறைவேற்றிச் சட்டமாக்கிய பிறகும் லோக்பால் அமைப்பு ஏற்படாமல் தள்ளிப் போகிறது என்றால், அதற்குக் காரணம், அந்த அமைப்பு முறையாகச் செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் யாருக்குமே இல்லாமல் இருப்பதுதான்.
லோக்பாலாக நியமிக்கப்படுபவரைத் தேர்ந்தெடுக்க பிரதமரின் தலைமையில் ஒரு தேர்வுக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது அவரால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி ஒருவர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் சட்ட வல்லுநர் ஒருவர் என்று நான்கு பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த ஐந்து நபர் தேர்வுக் குழு, பரிந்துரைக் குழு ஒன்றை நியமிக்கும்.
தேர்வுக் குழுவின் ஐந்தாவது உறுப்பினராக பிரதமரால் நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவ், ஒரு காங்கிரஸ்காரர் என்பதால் அவரை நியமிப்பதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் எழுத்து மூலம் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்ல, குடியரசுத் தலைவரிடம் ஆளும் கட்சிக்குச் சாதகமான நபரை நியமிப்பதைத் தடுக்கக் கோரி முறையீடும் செய்தார். "முதல் கோணல் முற்றும் கோணல்' என்பது போல அங்கிருந்தே தொடங்கிவிட்டது பிரச்னை.
நடுநிலையான ஒருவர் தேர்வுக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்படவில்லை என்கிற சுஷ்மா ஸ்வராஜின் ஆட்சேபணையையும் மீறி, தலைவர் என்கிற முறையில் பிரதமர் மன்மோகன் சிங், பி.பி. ராவை நியமனம் செய்தார். தேர்வுக் குழு, லோக்பாலாக நியமனம் செய்பவரைப் பரிந்துரைக்க, பரிந்துரைக் குழுவின் தலைவராக பிரபல வழக்குரைஞர் பாலி நாரிமனை நியமித்தது.
அரசுத் தரப்பிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே பரிந்துரைக் குழு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், பரிந்துரைக் குழு தன்னிச்சையாக விண்ணப்பங்களை வரவேற்கவோ, தானாக எந்தவொரு நபரையும் லோக்பாலாக நியமிக்கப் பரிந்துரைக்கவோ முடியாது என்றும் கூறப்பட்டபோது, மூத்த வழக்குரைஞர் பாலி நாரிமன், தான் பரிந்துரைக் குழுத் தலைவராக இருக்க விரும்பவில்லை என்று கூறி தவிர்த்து விட்டார். இப்போதைய இரண்டு கட்ட லோக்பால் தேர்வு முறையில், திறமையும் துணிவும் தன்னிச்சையாகச் செயல்படும் தன்மையும் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்று தனது கருத்தையும் வெளிப்படையாகத் தெரிவித்து விட்டார் நாரிமன்.
நாரிமன் விலகியதால், பரிந்துரைக் குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமûஸ அரசு நியமித்தது. தனக்குத் தரப்பட்ட பணியையும், லோக்பால் நியமன சட்டதிட்டங்களையும் அலசி ஆராய்ந்த நீதிபதி கே.டி.தாமஸ் திடுக்கிட்டார். பரிந்துரைக் குழுவால் முன்மொழியப்படும் நபரை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் தேர்வுக் குழுவுக்கு இல்லையெனும்போது, பிறகு எதற்காக ஒரு பரிந்துரைக் குழு என்று கூறி அவரும் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
அரசு பரிந்துரைக்கும் நபர்களில் ஒருவரைத்தான் பரிந்துரைக்குழு முன்மொழிய வேண்டும் என்றும், அப்படி முன்மொழியும் நபரை தேர்வுக் குழு ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் சட்டதிட்டங்கள் வகுத்து லோக்பால் நியமிக்கப்படுவதைவிட, தலையாட்டி பொம்மையாக அரசே யாரோ ஒருவரை லோக்பாலாக நியமித்து விடலாமே என்கிற கேள்விக்கு மன்மோகன் அரசிடமிருந்து பதிலில்லை.
நல்ல வேளை, தேர்தல் வந்துவிட்டதால் லோக்பால் நியமிக்கப்படுவது தள்ளிப்போடப் பட்டிருக்கிறது. அடுத்து அமையப்போகும் அரசு என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். சட்டம் இயற்றிவிட்டால் மட்டும் போதாது. அது செயல்படவும் வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.