கடந்த இரு மாதங்களில் சிமென்ட் விலையை 50 கிலோ மூட்டைக்கு ரூ.60 உயர்த்தியுள்ளன சிமென்ட் ஆலைகள். அதாவது கடந்த மாதம் ரூ.300-க்கும் குறைவாக இருந்த சிமென்ட் மூட்டை விலை தற்போது ரூ.340 அல்லது ரூ.350 ஆக சந்தையில் விற்கப்படுகிறது. டான்செம் போன்ற அரசுத்துறை நிறுவன சிமென்ட் விலை மட்டும் உயராமல் இருக்கிறது.
இந்த விலை உயர்வை கட்டுநர்கள் சங்கங்கள் எதிர்த்துள்ளன. வாங்குவதை நிறுத்தும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தன. அப்படி இவர்கள் போராட்டம் நடத்தினால், கட்டுமானச் செலவு கூடி பெரும் இழப்பை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பது சிமென்ட் ஆலைகளுக்கு நன்றாகவே தெரியும்.
இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவர் என். சீனிவாசன் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது, கட்டுமானத் துறையில் சிமென்ட் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் குறைவு. ஒரு சதுர அடிக்கு அரை மூட்டை சிமென்ட் செலவாகும். அந்த வகையில் சிமென்ட் விலை உயர்வு ஒரு சதுர அடிக்கு ரூ.30 தான். இதனால், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் விலையில் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அதிகரிக்கலாம், அவ்வளவுதான் என்று புள்ளிவிவரங்களை அடுக்கினார். சிமென்ட் வாங்குவது அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுபவர்கள் மட்டுமல்ல, வீடு கட்டும் சராசரி நடுத்தர வகுப்பினரும்கூட!
உலகிலேயே அதிகளவு சிமென்ட் உற்பத்தி செய்து பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில், முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 30 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. 185 பெரிய சிமென்ட் ஆலைகள் அதில் 97 சதவீத உற்பத்தியை செய்கின்றன. இதில் 77 ஆலைகள் தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமே 21 சிமென்ட் ஆலைகள் உள்ளன.
சிமென்ட் ஆலைகளில் 98 சதவீதம் தனியார் ஆலைகள். சிமென்ட் இன்றியமையாப் பொருள் பட்டியலில் இல்லை. ஆகவே, தனியார் ஆலைகள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. இடுபொருள் விலையேற்றம், ஊழியர் சம்பள உயர்வு ஆகியனதான் சிமென்ட் விலையேற்றத்திக்குக் காரணம் என்று வழக்கமான பல்லவி பாடப்பட்டாலும், இந்தியாவில் எந்த சிமென்ட் ஆலையும் நஷ்டத்தில் இயங்கவில்லை. பல நூறு கோடி லாபத்தில் தான் இயங்குகின்றன.
இவர்கள் வியாபார நெறிமுறைக்கு ஒவ்வாத கூட்டணி அமைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் காரணமாக விலையை உயர்த்திக் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.
இந்தியாவில் கட்டுமானத் துறையில் மிகப்பெரும் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. வீடுகள் கட்டுவதில் சிமென்ட் தேவை ஆண்டுதோறும் 17 சதவீதம் அதிகரிக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 12-வது திட்டக் காலத்தில் (2012-17) டிரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. போதாக்குறைக்கு இந்தியாவில் கட்டுமானத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு கதவுகள் அகல திறக்கப்பட்டுள்ளதால், சிமென்ட் விலையை உயர்த்தி தனியார் சிமென்ட் ஆலைகளின் கூட்டணி கொள்ளை லாபத்தை அடைய முனைகிறது.
சிமென்ட் நுகர்வில் 60 சதவீதம் வீடுகள் கட்டவும், 17 சதவீதம் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கும், 13 சதவீதம் வணிகப் பயன்பாட்டுக்கும், 6 சதவீதம் தொழில் துறைக்கும் தேவைப்படுகிறது. மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள், சிமென்ட் ஆலைகளிடம் நேரடியாக முன்விலைத் திட்டத்தில் கொள்முதல் செய்யும்போது, அவர்களால் இந்த விலை உயர்வை சமாளிக்கவும், தொடர்ந்து லாபத்தில் வீடுகளை விற்கவும் முடியும். சிமென்ட் விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்படுவது வீடு கட்டும் சராசரி, நடுத்தரப் பிரிவினர் மட்டுமே.
அகில இந்திய அளவில் சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முனைகிறதோ, இல்லையோ, தமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர் நினைத்தால் சிமென்ட் தயாரிப்பாளர்கள் கூட்டணியின் அடாவடித்தனத்திற்கு நிச்சயமாக முடிவு கட்ட முடியும். அடுக்குமாடி குடியிருப்புகள் தவிர்க்கப்பட்டு, 1000 சதுர அடிக்கு மிகாமல் வீடு கட்டும் நடுத்தர மக்களுக்கு, "டான்செம்' சிமென்ட்டின் விலையில் "அம்மா' சிமென்ட் வழங்கப்பட்டால், ஒட்டுமொத்த நகர்ப்புற, ஊரக, நடுத்தர மக்களும் முதல்வரை வாழ்த்துவார்கள்.
இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு சிமென்ட்டை இன்றியமையாப் பொருள்கள் பட்டியலில் சேர்த்து, அதன் விலையையும் விற்பனையையும் அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது மட்டுமே. உண்ண உணவு, தவித்த வாய்க்குத் தண்ணீர், நியாய விலையில் மருந்து என வழங்கும் தமிழக முதல்வர் நடுத்தர வர்க்கத்தினருக்கு நியாயமான விலையில் சிமென்ட் கிடைக்கவும் வழிகோல வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.