தெளிவான இலக்கு!

இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவில் இல்லாமல் இருப்பதன் காரணம், எந்தவொரு திட்டமிடலிலும், கொள்கை முடிவுகளிலும் தெளிவும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் இருப்பதுதான்.
Updated on
2 min read

இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவில் இல்லாமல் இருப்பதன் காரணம், எந்தவொரு திட்டமிடலிலும், கொள்கை முடிவுகளிலும் தெளிவும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் இருப்பதுதான். எல்லா முடிவுகளும் அதற்கு இரண்டு அல்லது மூன்று விதமான பொருள்படி அமைந்திருப்பதால், அதிகார வர்க்கமும் சுயநலக் கும்பலும் அவரவர் வசதிக்கேற்ப முடிவுகளையும், சட்ட திட்டங்களையும் விருப்புரை (வியாக்கியானம்) செய்து கொள்கிறார்கள்.

அது உள்நாட்டு வர்த்தகக் கொள்கைக்கு வேண்டுமானால் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், அயல்நாட்டு வர்த்தகக் கொள்கை, அதாவது இந்தியாவின் ஏற்றுமதிக் கொள்கைக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்து வந்தது. அதுமட்டுமல்ல. இதுபோன்ற கொள்கை முடிவுகளைக் குறுகிய காலக் கொள்கை முடிவுகளாக மேற்கொள்வது, சர்வதேச வர்த்தகத்தில் மிகுந்த பாதிப்பையும், ஏற்றுமதியாளர்கள் மத்தியில் தெளிவற்ற நிலையையும் ஏற்படுத்தும். இந்தியாவின் வர்த்தக வளர்ச்சிக்கு இதுதான் மிகப்பெரிய தடையாக இருந்து வந்தது.

நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்ததுமுதல், இதுபோன்ற குறுகிய காலக் கொள்கை முடிவுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, தங்களது ஐந்தாண்டு ஆட்சிக் காலத்துக்கான கொள்கை முடிவுகளை எடுத்து அறிவிக்க முற்பட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரிய செயல்பாடு. முதலாவது ஆண்டில் அந்தந்தத் துறையின் பிரச்னைகளை ஊன்றிக் கவனித்து, விவாதித்து, இப்போது அடுத்த ஐந்தாண்டுக்கான கொள்கை முடிவுகளை மத்திய அரசு வெளியிடத் தொடங்கி இருக்கிறது.

ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2020 வரையிலுள்ள ஐந்தாண்டுக்கான புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை அல்லது ஏற்றுமதிக் கொள்கை கடந்த வாரம் மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனால் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுபோன்ற வர்த்தகக் கொள்கைகளை வெளியிடும்போது, இன்னின்ன சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது போன்ற அறிவிப்புகள்தான் இருக்குமே தவிர, முறையான தெளிவான வழிகாட்டுதல் இருப்பதில்லை. நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் அரசின் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை சற்று வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது.

சர்வதேசப் பொருளாதாரச் சூழல் சற்று மந்தமாக இருக்கும் நிலையில், இந்திய அரசு ஐந்தாண்டுக்கான தனது வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை அறிவித்திருக்கிறது. இந்தச் சூழலிலும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ஏற்றுமதியை இரட்டிப்பாக்கிவிட வேண்டும் என்கிற அரசின் முனைப்பு பாராட்டுக்குரியது. இலக்கைக் குறைவாக நிர்ணயித்து, இலக்கைத் தாண்டி ஏற்றுமதி செய்து விட்டோம் என்று பெருமை தட்டிக் கொள்வதைவிடத் துணிந்து நமது ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவதை இலக்காக்கி இருப்பது மெச்சப்பட வேண்டிய அணுகுமுறை.

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் சரக்கு, சேவை இரண்டும் சேர்ந்த ஏற்றுமதி 900 பில்லியன் டாலர் (சுமார் ரூ.54 லட்சம் கோடி) என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கை தற்போதைய 2 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக உயர்த்துவது என்கிற அரசின் முனைப்பு, சாதிக்க முடியாததல்ல. அதே நேரத்தில், எளிதானதுமல்ல.

அரசு நிர்ணயித்திருக்கும் ரூ.54 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைய வேண்டுமானால், நமது ஏற்றுமதி தொடர்ந்து ஆண்டுதோறும் 14 சதவீதம் என்கிற அளவில் அதிகரிக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் காரணிகள் உள்நாட்டைச் சார்ந்தவையல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். உலகப் பொருளாதாரச் சூழல், ஏனைய நாட்டு நாணயங்களின் மதிப்பு ஆகியவைகூட இந்த இலக்கை நாம் எட்டவும், எட்டாமல் போகவும் காரணிகளாகக்கூடும்.

ஏற்றுமதி வர்த்தகம் என்பது மிகவும் சிக்கலானது மட்டுமல்ல, காலநிலை பிரச்னைகளை உள்ளடக்கியது. எங்கேயாவது போர் மூளுதல், இயற்கைச் சீற்றம் நேருதல் போன்றவைகூட ஏற்றுமதியைப் பாதித்துவிடும். அதேபோல, ரூபாயின் மதிப்பு இன்னொரு காரணி. ஏற்கெனவே இந்திய ரூபாய் 24 சதவீதம் மிகை மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், அரசின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் தொலைநோக்குடனும், தன்னம்பிக்கை

யுடனும் முன்வைக்கப்பட்டிருக்கும் இலக்குகளும், செயல்திட்டங்களும், இதற்கு முந்தைய ஆட்சியாளர்களிடம் காணப்படாதவை. வேலைவாய்ப்பு சார்ந்த, வேளாண்மையுடன் தொடர்புடைய ஏற்றுமதிக்கும், மதிப்புக்கூட்டிய பொருள்களின் ஏற்றுமதிக்கும் முன்னுரிமை அளித்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

கைவினைப் பொருள்களின் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதுடன், அவற்றின் இணைய வணிகத்துக்கு (ஆன்லைன் டிரேட்) வழிகோலியிருப்பது, மரபுசார் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடும். அதேபோல, ஏற்றுமதியாளர்கள் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பட்டியலிட்டு, அதற்குத் தீர்வும் அளித்திருப்பது புதிய அணுகுமுறை.

வழக்கத்துக்கு மாறாக, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை அறிவிக்கும் கூட்டத்தில் வருவாய்த் துறை செயலரும் கலந்து கொண்டிருந்தது, நிதித் துறையும் வர்த்தகத் துறையும் இணைந்து இந்தக் கொள்கை முடிவை விடுத்திருப்பதைக் காட்டு

கிறது. கட்டமைப்பு வசதிகள் முறையாக ஏற்படுத்தப்பட்டால்தான் ஏற்றுமதியை அதிகரிப்பது சாத்தியம். ஐந்தாண்டுகளில் ஏற்றுமதி இலக்கை நாம் எட்டும்போது, கட்டமைப்பு வசதிகளும் உலகத்தரமானதாக மாறி இருக்கும் என்று எதிர்பார்ப்போமாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com