மகளிர் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நிர்பயா நிதியைப் பயன்படுத்துவது எவ்வாறு என்று மத்திய நிதியமைச்சகம் அண்மையில் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. இதன்படி, நிர்பயா நிதிக்கு முகமை அமைப்பாக (நோடல் ஏஜென்ஸி) மத்திய மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படும். மகளிர் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை இந்த அமைச்சகத்திடம் அளித்து, அவர்கள் பரிந்துரைக்குப் பிறகு, மத்திய நிதியமைச்சகம் அதைப் பரிசீலித்து நிதி ஒதுக்கீடு செய்யும்.
2012 டிசம்பர் 16-ஆம் தேதி புது தில்லியில் துணை மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவில் கொலை செய்யப்பட்ட பின்னர் ஆண்டொன்றுக்கு ரூ.1,000 கோடி நிர்பயா நிதி என்ற பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை ரூ.3,000 கோடி குவிந்துள்ள இந்த நிதி பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சாலைப் பயணங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான, சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் திட்டத்துக்கு ரூ.50 கோடியும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் திட்டத்துக்கு ரூ.150 கோடியும் 2014-15ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அண்மைக்காலமாக நடைபெற்ற பாலியல் வன்முறைகள் சம்பவங்களில் பெரும்பாலானவை உழைக்கும் மகளிர் மீதானவை. ஆகவே, அது தொடர்பான திட்டங்களும் அவர்களை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இதனால், நாட்டில் பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளைத் தடுக்கவோ, அவர்களுக்குப் பாதுகாப்பு பெறவோ இயலாமல் போகும். பாலியல் வல்லுறவுக் கொலைக்குப் பிறகு உருவாக்கப்பட்ட நிதி என்பதால், இதை அரசும் மற்ற அமைப்புகளும் பாலுறவு சார்ந்த குற்றங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதாகக் கருதுவதும், அவை சார்ந்த திட்டங்களை மட்டுமே முன்வைப்பதும் பெண்களின் பாதுகாப்புக்குப் பெருந்துணையாக அமையாது.
மகளிர் மீதான வன்முறை என்கின்றபோது பாலியல் சார்ந்த வன்முறைகளோடு, ஒரு பெண் தனது வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்து துன்பங்களும் அதில் இடம் பெறுகின்றன. இளவயதுத் திருமணம், கட்டாயத் திருமணம், கணவனால் தாக்கப்படுதல், கணவனால், புகுந்த வீட்டினரால் தரக்குறைவாக ஏசப்படுதல், கண்ணியக் குறைவாக நடத்தப்படுதல், மானபங்கம், வரதட்சிணைக் கொடுமை, கட்டாயக் கருக்கலைப்பு, களவுகால வாக்குறுதி மீறல் (டேட்டிங் அப்யூஸ்), அமில வீச்சு, கெüரவக் கொலை, மகளிர் மற்றும் குழந்தைகள் கடத்தல் எனப் பலவிதமான வன்முறைகள் பெண்கள் மீது நிகழ்த்தப்படுகின்றன. இந்த வன்முறைகளில் 90 சதவீதம் வீட்டில்தான் நடக்கின்றன.
பாலியல் வன்முறைகளில் 90 சதவீதம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிந்த நபர்களால் நடத்தப்படும் சம்பவங்களே. குடும்பத்துக்குள்ளே இருப்பவர்கள் 1.6%, உறவினர்கள் 6.4%, அண்டைவீட்டார் 34.7%, பெண்ணுக்கு அறிமுகமான நபர்கள் 57% என்பதாக இவை அமைகின்றன. ஆகவே, பெண்ணின் வீட்டுக்கு வெளியே ஏற்படும் வன்முறைகளிலிருந்து பாதுகாக்கும் திட்டங்கள் அவசியம் என்றாலும், அதே வேளையில் வீட்டுக்குள் துன்புறும் பெண்களைப் பாதுகாக்க வேண்டியதும் மிகவும் அவசியம்.
இத்தகைய குடும்ப வன்முறைகள் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்வதே மிகமிக அரிதாகவே இருக்கிறது. இதை நியாயப்படுத்தும்விதமாக, குடும்பத்துக்குள் சமரசமாகப் போய்விடுவார்கள் என்கிற பொருந்தா வாதம் முன்வைக்கப்பட்டாலும், உண்மையான காரணம், இத்தகைய வழக்குகள் குற்ற வழக்குகள் (கிரைம்) பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதாலும், குற்ற வழக்குப் பட்டியல் பெரிதாக இருப்பின், அந்தப் பகுதியில் சட்டம் - ஒழுங்கு சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்பதாகக் கருதப்படுவதால், தங்கள் "காவல் நிலையத்தைப் பாதுகாக்கும்' பணியில் காவலர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதுதான். இதனால், மகளிர் மீதான வன்முறைப் புகார்கள் பலவும் பதிவாகாமலேயே மறைக்கப்பட்டு விடுகின்றன.
இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், மகளிர் மீதான வன்முறைகள் அனைத்தையும் தனிப் பட்டியலிடவும், அவற்றை வழக்கமான கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி, அடிதடி போன்ற புகார் பட்டியலில் சேர்க்காத நடைமுறையும் தேவை. இதை அரசு ஒரேயொரு உத்தரவில் செய்துவிட முடியும்.
குடும்ப வன்முறை குறித்தும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம், பாதுகாப்பு தேடலாம் என்கிற நம்பிக்கையை பெண்களிடம் ஏற்படுத்தும் திட்டங்கள் இன்று இன்றியமையாதவை.
குடிகாரக் கணவனின் அடி பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவை குடிசைப் பகுதிகளிலேயே அதிகம் நடப்பதால், இத்தகைய குடும்ப வன்முறை குறித்து நடுத்தர வருவாய்ப் பிரிவினரோ அல்லது சமூகத்தின் உயர்குடியினரோ கவலைப்படுவதில்லை.
குடும்ப வன்முறைகளின்போது, உடனடியாக வெளியேறி ஓர் இரவுப் பொழுதைப் பாதுகாப்பாக கழிக்க வகை செய்யும் "அடைக்கல இல்லங்கள்' அனைத்து நகரங்களிலும் உருவாக்கப்பட்டால், ஏழை மகளிருக்கு மட்டுமன்றி, அனைத்து மகளிருக்கும் பயனுள்ளதாக அமையும். குடும்ப வன்முறை குறித்தும், பாச அணைப்பு, காம அணைப்பு குறித்தும் விழிப்புணர்வுப் படத்தை பள்ளி மாணவிகளுக்காக மத்திய மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம் தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது. அதை விரைவுபடுத்த வேண்டும்.
மகளிர் மீதான குடும்ப வன்முறையைத் தடுப்பது குறித்தும் அரசு திட்டமிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

ஈரோடு, கோபி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

