இணைவதும் பிரிவதும் "ஜனதா' முத்திரையுடன் உலாவரும் முன்னாள் சோஷலிசத் தலைவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. 1977, 1989, 1996-ஐத் தொடர்ந்து இப்போது நான்காவது முறையாக மீண்டும் ஒருமுறை ஜனதா பரிவாரம் ஒன்றுபட முடிவெடுத்திருக்கிறது. பிரிந்து கிடக்கும் ஜனதா பரிவாரங்கள் இணைந்து செயல்படாமல் போனால், அந்தக் கட்சிகளின் எதிர்காலமே இருண்டுவிடக்கூடும் என்கிற அச்சம்தான், இந்தக் கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறது.
சமாஜவாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஒருங்கிணைந்த பலம் மக்களவையில் 15, மாநிலங்களவையில் 25 என்று இருப்பதுடன் உத்தரப் பிரதேசம், பிகார் என்று இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியிலும் இருப்பதால், ஒரே கட்சியாக செயல்பட்டால் பலமான எதிர்க்கட்சியாக உருவாக முடியும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. அதுமட்டுமல்ல, உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய இரண்டு மாநிலங்களும் சேர்ந்து நாடாளுமன்றத்துக்கு 120 உறுப்பினர்களை அனுப்புகின்றன என்பதால், இந்த ஒருங்கிணைந்த கட்சி, சக்தி வாய்ந்த அரசியல் அமைப்பாகச் செயல்பட முடியும் என்பதில் சந்தேகமும் இல்லை.
இப்படிப்பட்ட பின்னணியில், இப்போது சமாஜவாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக தளம், சமாஜவாதி ஜனதா கட்சி ஆகிய ஆறு கட்சிகளும் இணைய முடிவெடுத்திருக்கின்றன. தில்லியில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்து செயல்பட்டு பிகாரிலும் பா.ஜ.க.வை தோல்வியைத் தழுவச் செய்வது என்பதுதான் இந்த இணைப்பின் அடிப்படை நோக்கம்.
ஜனதா பரிவாரக் கட்சிகள் இணைவது என்று முடிவெடுத்ததற்கு முக்கியமான காரணம், பிகாரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த இடைத்தேர்தல்தான். அந்த இடைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து போட்டியிட்டபோது, 10 இடங்களில் ஆறு இடங்களை வென்று பா.ஜ.க.வின் வெற்றி முகத்தைத் தடுத்து நிறுத்த முடிந்தது.
அரிச்சுவடிக் கூட்டல் கணக்கு என்று பார்த்தால், பிகாரில் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரûஸயும் இணைத்துப் பார்த்தால் 45% வாக்குகளையும், பா.ஜ.க.வும் கூட்டணிக் கட்சிகளும் 38% வாக்குகளையும்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்றிருந்தன. ஆனால், பா.ஜ.க. அணி 31 இடங்களில் வெற்றி பெற முடிந்தது. காரணம், ஜனதா பரிவாரக் கட்சிகள் பிரிந்து கிடந்தன என்பது மேலெழுந்தவாரியான கருத்து.
ஒருங்கிணைந்த கட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்பதிலேயே இவர்களுக்குள் சிக்கல் எழுந்திருக்கிறது. சமாஜவாதி ஜனதா தளம் என்று பெயர் வைக்கலாம் என்றும், அந்தப் புதிய கட்சி சமாஜவாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தையும், கொடியையும் ஏற்றுக்கொள்வது என்றும் கருத்துக் கூறப்படுகிறது. இதற்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர் மட்டுமல்ல, சமாஜவாதி கட்சியினரேகூட எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். சமாஜவாதி கட்சியினரைப் பொருத்தவரை, இப்படியோர் இணைப்பால் உத்தரப் பிரதேசத்தில் தங்களது கட்சிக்கு எந்தவித ஆதாயமும் இல்லை என்று கருதுகிறார்கள்.
கடந்த கால் நூற்றாண்டு காலமாக வாக்காளர்களுக்குப் பரிச்சயமாகி இருக்கும் பெயரை மாற்றக்கூடாது என்பது சமாஜவாதி கட்சியினரின் கருத்து என்றால், சின்னத்தை மாற்றினால் அது தங்களது வெற்றிவாய்ப்பைப் பாதிக்கும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் கருதுகின்றன. இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
பிகாரைப் பொருத்தவரை, இப்படியோர் இணைப்பின் மூலம் மட்டுமே நிதீஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் அரசியல் சக்திகளாகத் தொடர முடியும் என்பதுதான் யதார்த்த உண்மை. அதேநேரத்தில், லாலு பிரசாத் யாதவின் ஆட்சியை "காட்டு தர்பார்' என்று வர்ணித்துக் கடுமையான விமர்சனம் செய்து அவருக்கு எதிரான அரசியல் நடத்திய நிதீஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கைகோப்பதை எந்த அளவுக்கு அவரது கட்சியினரே விரும்புவார்கள் என்பது தெரியவில்லை. இதே தர்ம சங்கடம்தான் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கும் அதன் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கும்.
"மண்டல்' கோஷம் பிகாரில் இனியும் எடுபடுமா என்பது சந்தேகம்தான். பிரதமர் நரேந்திர மோடி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை பா.ஜ.க. முன்னிலைப்படுத்த முற்பட்டிருக்கிறது. ஜிதன்ராம் மாஞ்சியும், ராம் விலாஸ் பாஸ்வானும் பா.ஜ.க.வுக்குத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் ஆதரவை உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் ஒற்றுமை மட்டுமே பா.ஜ.க. அணியை எதிர்க்க இந்தக் கட்சிகளுக்குப் போதுமானதாக இருக்காது. மேலும், தொகுதிப் பங்கீடு, யார் முதல்வர் என்கிற கேள்வி, காங்கிரஸின் நிலைப்பாடு ஆகியவையும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கிய காரணிகளாக இருக்கும்.
எந்தவொரு வலுவான கொள்கையோ, ஒருங்கிணைப்புக்குத் தேவையான மக்கள் எழுச்சியோ இல்லாத நிலையில், முலாயம் சிங் தலைமையில் வயதான சோஷலிஸ்டுகளும், "மண்டல்' காலகட்டத் தலைவர்களும் சந்தர்ப்பவாத அரசியலால் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். இதனால், நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் தவிர, ஏனையோருக்கு என்ன லாபம்? நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள ஒரு வாய்ப்பு, அவ்வளவே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.