இதற்கு எதற்கு தண்டனை?

சுதந்திரமாகச் சிந்திக்கவும், கருத்துகளை வெளிப்படுத்தவும் வழிகோலும் ஆட்சி முறையான ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் தர வேண்டிய விலை "விழிப்புடன்' இருப்பதுதான்.
Updated on
2 min read

சுதந்திரமாகச் சிந்திக்கவும், கருத்துகளை வெளிப்படுத்தவும் வழிகோலும் ஆட்சி முறையான ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் தர வேண்டிய விலை "விழிப்புடன்' இருப்பதுதான். இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் நாம் விழிப்புடன் இருப்பதால்தான், எத்தனையோ குறைகளுக்கு நடுவிலும் நமது நாடு இன்றும் சுதந்திர ஜனநாயக நாடாகத் தொடர்கிறது.

கடந்த பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு, உச்சநீதிமன்றத்தின் பக்கபலமும் இருந்ததால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பெறவும், அதை நிலைநிறுத்தவும் முடிந்திருக்கிறது. கருத்துச் சுதந்திரத்துக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வெற்றி, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இல் புகுத்தப்பட்ட 66(அ) சட்டப் பிரிவை உச்சநீதிமன்றத்தின் துணையுடன் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று அகற்ற முடிந்திருப்பது. தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66(அ) அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது இன்னொரு நீண்டநாள் போராட்டம் மீண்டும் குரல் உயர்த்தி இருக்கிறது.

1860-இல் பிரிட்டிஷாரால் இயற்றப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 499, 500 பிரிவுகள் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை. "மானநஷ்டம்', "அவதூறு' என்கிற பெயர்களில், அரசியல் சட்டப் பிரிவு 19(2) விதித்திருக்கும் கட்டுப்பாடுகளையும் மீறி, கருத்துச் சுதந்திரத்துக்குக் கடிவாளமிடும் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் இந்த இரண்டு பிரிவுகளும், இப்போது உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்திருக்கின்றன.

இப்போதைய நிலைமையில், "மானநஷ்டம்' என்பது குடிமையியல் சட்டப்படி தவறாகவும், குற்றவியல் சட்டப்படி குற்றமாகவும் கருதப்படுகிறது. குடிமையியல் சட்டப் பிரிவின்படி மானநஷ்டம் கேட்டு ஒருவர் வழக்குத் தொடுத்தால், தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்காகவோ, அவதூறு பரப்பியதற்காகவோ இழப்பீடு கோர முடியும். அதற்குப் பதிலாக, குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் வழக்குத் தொடுத்தால் கைது செய்யப்படுவது, இழப்பீடு மட்டுமல்லாமல், இரண்டாண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படுவதற்கான உத்தரவையும் பெற முடியும். அவதூறு அல்லது தவறான செய்தி என்பதற்கு இழப்பீடு கோருவது சரி. இதைக் குற்றவியல் சட்டத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் கேள்வி.

இந்திய அரசியல் அமைப்பின் சட்டப் பிரிவு 19(2)இன் கீழ், நியாயமான காரணங்களுக்காக மட்டும்தான் கருத்துச் சுதந்திரத்தை தடுக்கவோ, தடை செய்யவோ செய்யலாம். அப்படிப்பட்ட தடையேகூட, வலுக்கட்டாயமானதாகவோ, கடுமையானதாகவோ இருத்தல் கூடாது என்றும், கருத்துச் சுதந்திரத்துக்கான கட்டுப்பாடுகள் மிகவும் குறைவானதாகவே இருக்க வேண்டும் என்றும் அரசியல் சட்டம் தெளிவுபடுத்தி இருக்கிறது. அப்படி இருக்கும்போது, குற்றவியல் சட்டத்தின் கீழான நடவடிக்கை எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?

பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் அவதூறு பரப்பும் செய்கைகள் ஏற்கெனவே சட்டப் பிரிவுகள் 124, 153, 153(அ) ஆகியவற்றால் தெளிவாகவே கையாளப்பட்டிருக்கும் நிலையில், மானநஷ்டம் என்பது குற்றமாகக் கருதப்படுவது எந்த வகையில் பொது நன்மைக்குத் தேவையானது என்பது தெரியவில்லை.

குற்றவியல் சட்டப் பிரிவுகள் 499, 500 இரண்டையும் எதிர்ப்பதற்கான முக்கியமான காரணம், இந்தப் பிரிவுகள் அரசியல்வாதிகளாலும், அதிகார வர்க்கத்தினராலும், ஆட்சியாளர்களாலும்,

பண வசதி படைத்தவர்களாலும் தங்கள் எதிரிகளை வழக்கு மன்றத்துக்கு இழுத்து, நீதிமன்ற நடைமுறைகளின் மூலம் வழக்கை இழுத்தடித்துப் பழி வாங்கப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். ஏதாவது ஓர் அரசியல்வாதி இன்னோர் அரசியல்வாதி மீது பழி சுமத்த, அதைப் பத்திரிகைகள் வெளியிட்டால் அதுவேகூட அவதூறு வழக்காகி, பிரசுரகர்த்தரும், ஆசிரியரும், நிருபரும் குற்றவாளிகளாக ஆஜராக வேண்டிய அவலத்துக்குக் காரணம் இந்தச் சட்டப் பிரிவுகள்தான்.

தாம் கைது செய்யப்படுவோம், காவல் துறையினரால் துன்புறுத்தப்படுவோம், நீண்ட நாள் குற்றவியல் வழக்குக்காக அடிக்கடி நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்க வேண்டும் என்பதற்குப் பயந்து, பல உண்மைகள் வெளியிடப்படுவதில்லை. பண, புஜ, அதிகார பலமுள்ளவர்களுக்கு எதிராக அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டக்கூடப் பத்திரிகைகள் பயப்படுகின்றன. பல உண்மைகள் மறைக்கப்படுவதற்கு இந்தச் சட்டப் பிரிவுகள் காரணமாகின்றன.

அவதூறுப் பேச்சுகளும், தவறான தகவல்களும் தட்டிக் கேட்கப்படக் கூடாது என்பதல்ல. அவதூறுக்கு குடிமையியல் சட்டத்தின் கீழ் இழப்பீடு பெறலாம் என்கிற உரிமை ஏற்கெனவே இருக்கும்போது, அந்தப் பாதுகாப்பே போதுமானது. குற்றவியல் வழக்கின் அவசியம் இல்லை.

பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குற்றவியல் சட்டத்திலிருந்து அவதூறுப் பிரிவை அகற்றி விட்டன. அரசின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய சட்ட ஆணையமும், இந்தச் சட்டப் பிரிவுகள் அகற்றப்பட வேண்டும் என்றும், அவதூறுக்கான குற்றவியல் சட்டங்கள் சர்வதேச விதிகளை மீறியவையாக இருப்பதாகவும், இரண்டாண்டு சிறைத் தண்டனை என்பது கடுமையானது என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறது. உச்சநீதிமன்றமும் இது தொடர்பாக அரசின் கருத்தைக் கோரியிருக்கிறது.

உச்சநீதிமன்ற ஆணைக்குக் காத்திராமல் இந்தச் சட்டப் பிரிவுகளை அகற்றி விடுவதுதான் இந்திய நாடாளுமன்றத்துக்கு அழகு! 66(அ)வில் கடைப்பிடித்த இரட்டை வேடத்தைத் தொடராமல் குற்றவியல் சட்டத்தின் 499, 500 பிரிவுகளை அகற்றுவதுதான் நரேந்திர மோடி அரசுக்குப் பெருமை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com