அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா மீதான வழக்கின் மேல்முறையீட்டில், அரசுத் தரப்பு வழக்குரைஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது தவறு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இருப்பினும், இது தொடர்பாக நீதிமன்ற விசாரணையை மறுபடியும் நடத்த வேண்டியதில்லை என்றும் கூறியிருக்கிறது.
ஒரு வழக்கில் வாதம் புரிந்த அரசு வழக்குரைஞர், அந்த வழக்குத் தொடர்பான மேல்முறையீடுகளிலும் வாதிடலாம் என்று இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 301-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி ஏற்று, இந்த நியமனத்தில் தவறில்லை என்ற கருத்தைத் தெரிவித்தார். ஆனால், நீதிபதி மதன் லோகுர் கருத்து மாறுபட்டார். பிறகு, மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிஇருக்கை விசாரித்துத் தற்போது தீர்ப்பு அளித்துள்ளது. அதுவரை சரி. நீதியின் தீர்ப்புக்குத் தலைவணங்குவதுதான் முறை.
இந்த வழக்கின் மேல்முறையீட்டு நடவடிக்கை முழுவதையும் 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டதே உச்சநீதிமன்றம்தான். பவானி சிங் நியமனம் தவறு என்று திமுக பொதுச் செயலர் க. அன்பழகன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிபதி குமாரசாமியும், உச்சநீதிமன்றத்தின் நிபந்தனையைச் சுட்டிக்காட்டி, மேலும் தாமதிக்க முடியாது என்றுதான் மனுவை நிராகரித்தார். அதன் பிறகுதான், பவானி சிங் நியமனத்துக்கு எதிரான மேல்முறையீட்டை உச்சநீதிமன்றத்துக்கு திமுக கொண்டு சென்றது.
இந்த வழக்கில் நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்க வேண்டுமானால், அது கர்நாடக அரசுக்குத்தான். "எந்த மாநிலத்தில் வழக்கு நடைபெறுகிறதோ அந்த மாநிலம்தான் வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் என்பதே சரி. அந்த மாநிலத்துக்குத்தான் அதிகாரம் இருக்கிறது' என்று நீதிமன்றம் கருதுமேயானால், அதைச் செய்யாத கர்நாடக அரசை அல்லவா நீதிமன்றம் கண்டிக்க வேண்டும். குறை காண வேண்டும். ஆனால், தமிழக அரசு எதிர்காலம் பற்றிய அச்சம் காரணமாக அவசரம் காட்டியது என்று சட்டத்துக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட கருத்தை தவிர்த்திருக்கலாம்.
இத்தகைய வாசகங்களை மேன்மைதாங்கிய நீதிபதிகள் பதிவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
வழக்குரைஞர் பவானி சிங்கின் வாதங்களைப் புறக்கணித்துவிட்டு, சாட்சியங்கள் காட்டும் வெளிச்சத்தில் நீதிபதி தனது தீர்ப்பை பாரபட்சமின்றி வழங்க முடியும் என்றும் மீண்டும் விசாரணையை புதிதாக நடத்த வேண்டியதில்லை என்றும் நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கக் காத்திருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி எப்படித் தனது தீர்ப்பை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழிகாட்ட முற்பட்டிருப்பது, அந்த நீதிபதியின் கெளரவத்தைக் குலைப்பதாக இருக்காதா?
உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் தீர்ப்பு வழங்கக் காத்திருக்கும் நிலையில், எப்படித் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாடம் எடுக்க முற்படுவது சரியல்ல. உயர்நீதிமன்றம், குறிப்பிட்ட வழக்கை எப்படி விசாரிக்க வேண்டும் என்று வழிமுறை கூறலாம். உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பை வழங்கிய பிறகு மேல்முறையீட்டில் அந்தத் தீர்ப்பில் காணப்படும் குறைகளைச் சுட்டிக்காட்டவோ, சரியான புரிதலுடன் (அப்ளிகேஷன் ஆஃப் மைன்ட்) தீர்ப்பு எழுதப்படவில்லை என்றோ கூற உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு முழு உரிமையும் உண்டு.
ஆனால், தீர்ப்பை எப்படி, என்ன அடிப்படையில் எழுத வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எடுத்துரைக்க முற்பட்டிருப்பது தவறான முன்னுதாரணம்.
மேல்முறையீட்டிலும் வழக்குரைஞர் பவானி சிங் வாதிட்டது குறித்து தி.மு.க.வுக்கு பெரும் ஆட்சேபணை இருப்பதாகத் தோன்றினாலும், அவர்களது உள்நோக்கம் புதிய வழக்குரைஞர் நியமிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே. அதன்மூலம் தீர்ப்பு வழங்கப்படுவதைத் தாமதப்படுத்துவதுதான் குறிக்கோள்.
மேல்முறையீட்டில் தீர்ப்பு எப்படி அமையும் என்பது தெரியாது. ஆனால், ஜெயலலிதாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு அமைந்துவிட்டால், தேர்தலில் அ.தி.மு.க.வை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் தமிழகத்தின் மிக முக்கியமான கட்சியாகிய தி.மு.க.வுக்கு உண்டு. இந்தத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருப்பினும், பாதகமாக இருப்பினும், அது அடுத்த தேர்தல் வரும்வரை தீர்ப்பாகாமல் நீடிக்கட்டும் என்ற நோக்கில்தான் பவானி சிங் வாதிடக்கூடாது என்று நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் முறையிடப்பட்டது.
புதிய வழக்குரைஞர் இந்த வழக்கைப் படித்துப் பார்க்க, புரிந்துகொள்ள கால அவகாசம் கேட்பார். அது நியாயமும்கூட. அதற்கான கால நீட்டிப்பின் காரணமாக, அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை தீர்ப்பு தள்ளிப்போகும் என்ற நோக்கத்தில்தான் தி.மு.க., இந்த விவகாரத்தில் பவானி சிங் நியமிக்கப்பட்டது தவறு என்று உச்சநீதிமன்றம் வரை சென்றது. இதைத் தவிர வேறு காரணம் இருக்க வழியில்லை.
அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா மீது எதிர்க்கட்சிகள் இதுநாள்வரை கூறிய குற்றச்சாட்டு, அவர் வேண்டுமென்றே வழக்கை நீட்டித் தீர்ப்பைத் தாமதப்படுத்துகிறார் என்பது. அப்படிக் குற்றம்சாட்டிய தி.மு.க.வின் சார்பில், இப்போது பவானி சிங்கின் நியமனத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நோக்கமும் தீர்ப்பைத் தாமதப்படுத்துவதுதான். அதற்கு இடம் கொடுக்காத வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருக்கிறது. புதிய விசாரணை தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்புக்குரியது.
மே 12-ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாகிவிடும். அ.தி.மு.க. பொதுச் செயலர் மீதான தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் அது தமிழக அரசியலைப் புரட்டிப்போடும் தீர்ப்பாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.