நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவந்த, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தம் டிசம்பர் 21-ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேறியிருப்பது, ஏற்கெனவே இருக்கும் இச்சட்டத்தை மேலும் வலுவுடையதாக்கி இருக்கிறது.
2011-ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி, தாழ்த்தப்பட்ட இனத்தவர் 16.2%, பழங்குடி இனத்தவர் 8.2%. தேசிய குற்ற ஆவண வாரியத்தின் தகவல்படி, இந்தியாவில் 2013-ஆம் ஆண்டில் எஸ்.சி., எஸ்.டி. மக்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் 39,408. இதைவிட அதிகமான வன்கொடுமைகள் நிகழ்கின்றன, பதிவு செய்யப்படாமலேயே போகின்றன அல்லது வழக்குகள் முடிக்கப்படாமலேயே இழுத்தடிக்கப்படுகின்றன போன்ற பரவலான குற்றச்சாட்டுகள்தான் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கான காரணம்.
நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்தத்தின்படி, புகாரை ஏற்க மறுப்பதே குற்றம். பதிவாகும் வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். இந்த நீதிமன்றம் இத்தகைய வழக்குகள் மீது இரண்டு மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். இது தொடர்பான மேல்முறையீடுகள் உயர்நீதிமன்றத்தில் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றோ, வாக்களிக்கக் கடாது என்றோ, தேர்தலில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றோ ஒரு தாழ்த்தப்பட்டவர் அல்லது பழங்குடி இனத்தவரை யாரும் கட்டாயப்படுத்தினால் அது, வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். அதேபோன்று, மலம் அகற்றும் தொழிலில் ஒரு தாழ்த்தப்பட்டவரை பலவந்தமாக ஈடுபடுத்துதல், பொதுப்பயன்பாடு மற்றும் வழிபாட்டுக்குத் தடை விதித்தல், ஊரைவிட்டு விலக்கி வைத்தல் ஆகியவையும் குற்றமே என்கிறது சட்டத் திருத்தம்.
இந்த சட்டத் திருத்தத்தில் இரண்டு நெருடலான விவகாரங்கள் குறித்தும் இன்னும் விரிவாகவும், இறுக்கமாகவும் மாற்றியிருக்கலாம். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட நபர், பாதிக்கப்பட்ட நபரின் ஜாதியைப் பற்றி அறிந்தவர் என்று நீதிமன்றம் கருதிக்கொள்ள, அந்த நபரை அல்லது அவரது குடும்பத்தை அறிந்தவர் என்பதே போதுமானது என்கிறது சட்டத் திருத்தம். இரண்டாவதாக, "எஸ்.சி., எஸ்.டி. அல்லாத' அரசு ஊழியர், பாதிக்கப்பட்ட நபர்களின் புகார்களை ஏற்க மறுப்பதோ, முதல் தகவல் அறிக்கையை படித்துக் காட்டாமல் இருப்பதோ, நகல் வழங்க மறுப்பதோ குற்றம் என்று கூறுகிறது.
ஒரு நபர் தெரிந்தவர் என்பதாலேயே அவரது ஜாதி பற்றி ஒருவர் அறிந்திருந்தார், ஜாதி அடிப்படையிலேயே குறிப்பிட்ட குற்றத்தைச் செய்தார் என்பதை ஓர் அலுவலகச் சூழலில் பொருத்திப் பார்க்க வேண்டும். அலுவலகத்தில் பணிபுரியும் நபர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரியாது என்று சொல்லி, அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களில் ஒருவரோ அல்லது அதே அலுவலகத்தில் பணிபுரிபவரோ வன்கொடுமைக் குற்றத்திலிருந்து தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக இந்த திருத்தம் சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இடஒதுக்கீடு முறை அமலில் இருக்கும் அரசு அலுவலகத்தில் வேண்டுமானால் இன்னார் இந்த ஜாதி, இந்த ஒதுக்கீட்டில் பணி வாய்ப்பு அல்லது பணி உயர்வு பெற்றவர் என்ற விவரங்களை உடன் பணியாற்றுவோர் அறிந்திருப்பார்கள். ஆனால், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் யாரும் உடன் பணிபுரிவோரின் ஜாதி பற்றி தெரியாமல், அதுபற்றி கவனத்தில் கொள்ளாமல்தான் பழகுகிறார்கள். ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டும் குற்றம் நீங்கலாக, மற்ற அவமரியாதைக் குற்றங்களுக்கு இந்த அளவுகோலைப் பொருத்துவது எப்படி சரியாக இருக்கும்?
அடுத்ததாக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தரும் புகார்களை ஏற்க, பதிவு செய்ய மறுக்கும் குற்றங்களில் "எஸ்.சி., எஸ்.டி. அல்லாத' ஊழியர்கள் என்ற சொற்றொடர் தேவையற்றது. இந்த சொற்றொடரில் அரசு ஊழியர் என்பதே போதுமானது. பல நேர்வுகளில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்தவர்களே தங்கள் மக்களுக்கு எதிராக, பணப்பலன் பெற்று இயங்குகிறார்கள் என்பதுதான் உண்மை.
எஸ்.சி., எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்த காவலர்கள் இல்லாத காவல்நிலையம் இந்தியாவில் கிடையாது. இருந்தும் எஸ்.சி., எஸ்.டி. மக்களின் புகார்கள் ஏன் ஏற்கப்படுவதில்லை? ஏன் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்? ஆகவே, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்த அரசு ஊழியர் இன்னொரு எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினரிடம் நியாயமாக நடப்பார் என்று கருதுவது சரியல்ல.
யாருக்கு வாக்களிக்க வேண்டும், யார் போட்டியிட வேண்டும் என்று ஒரு காலனி மக்களை கட்டாயப்படுத்துவோர் வெளிஆட்கள் அல்ல. அங்கே, அரசியல் கட்சிப் பிரதிநிதிகளாக வலம் வரும் அந்த மக்களில் ஒருவர்தான். எஸ்.சி., எஸ்.டி. மக்கள் மீது வன்கொடுமை செய்பவர் அதே இனத்தவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர் தானே? அதுகுறித்து சட்டத் திருத்தம் ஏன் மெளனம் காக்கிறது?
எஸ்.சி., எஸ்.டி. மக்கள் மீதான வன்கொடுமை நிகழ்வது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு எஸ்.சி., எஸ்.டி. மீதான வன்கொடுமைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு ஏனைய பிரிவினர் பழிவாங்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன என்பதும் நடைமுறை உண்மை. இதுபோன்ற சட்டத் திருத்தம் கொண்டு வரும்போது, இந்தச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு என்ன தண்டனை என்பதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கண்டுபிடி கண்ணே!

தெரியுமா?
இன்றைய ராசி பலன் (26.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (26.04.2026) - கடகம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

