ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கவில்லையே என்று தமிழகத்தின் பல ஊர்களிலும் சோகம் பொங்கி வழியும் வேளையில், ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாசாரம் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கிறது.
மேனகா காந்தி, மேற்கத்திய கலாசாரம் என்று விவரித்த அதே நாளில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், தொழில்முறை ஏறு தழுவுவோர் நழுவி விழும் விளையாட்டு (Professional Bull Riders Buck Off) நடந்து கொண்டிருந்தது. ஒருவேளை அதை மனதில் வைத்துக்கொண்டு ஜல்லிக்கட்டைப் பற்றி அவர் அபிப்பிராயம் சொல்லி இருக்கக்கூடும்.
ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களும் குரல் கொடுக்க, தமிழக அரசும் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரித்து, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று முழுமுனைப்புடன் மனு தாக்கல் செய்திருக்கிறது. விலங்குகள் வதைத் தடைச் சட்டத்தின் 22-ஆவது பிரிவிலிருந்து காளையை நீக்குவதற்கான முயற்சியில் தமிழகம் இறங்கியிருக்கும் வேளையில், இத்தகைய தேவையற்ற கருத்தை மத்திய அமைச்சர் மேனகா காந்தி தவிர்த்திருக்கலாம்.
தமிழகத்தின் இத்தனை அமைப்புகளும் இதில் ஆர்வம் காட்டக் காரணம் இது தமிழர் பண்பாட்டின் ஓர் அங்கம் என்பதால்தான். காளைகளின் கொம்புகளில் ஜல்லிக் காசுகள் கட்டியதால் இந்த நிகழ்வுக்கு ஜல்லிக்கட்டு என்ற பெயர் ஏற்பட்டது ஒரு நூற்றாண்டுக்கு உள்பட்ட வரலாறாக இருக்கலாம். ஆனால், ஏறு தழுவதல் என்றும், சில இடங்களில் மஞ்சுவிரட்டு என்றும் நடைபெறும் வீரவிளையாட்டுகள் தமிழர் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. சங்க கால கலாசாரத்தில் இடம்பெற்ற ஆநிறை கவர்தல் என்பதன் மருவுதான் காளையை அடக்கும் இந்த வீரவிளையாட்டு.
இந்த விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன, மதுவூட்டலால் வெறியேற்றப்படுகின்றன, இளைஞர்கள் இறக்கின்றனர் என்றெல்லாம் காரணங்களை ஊதிப் பெரிதுபடுத்திவிட்டார்கள். உச்சநீதிமன்றமும் அதை நம்பி தடை விதித்துவிட்டது. உண்மையில் மிகமிக அரிதாகவே அப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தன. காளைகள் துன்புற்றதைவிடவும் அதிக துன்பங்களை ஏற்றவர்கள் இளைஞர்கள்தான். ஜல்லிக்கட்டு மாடுகளால்
மனிதர்கள் இறந்திருக்கிறார்கள். மனிதர்களால் மாடுகள் இறந்ததில்லை. குதிரைப் பந்தயத்தில் தோற்றுப்போன குதிரை, அடிபட்ட குதிரையை சுட்டுக் கொல்வது போல, ஜல்லிக்கட்டு மாடுகளை யாரும் கொன்றது இல்லை.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் மீறப்படாமல் இருப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்றும், பங்கேற்கும் மாடுகளின் பட்டியல், மாடுகளை அடக்க விரும்பும் இளைஞர்களின் பட்டியல் எல்லாமும் முன்னதாகவே வாங்கி, பிறகு அனுமதிக்கலாம் என்ற நடைமுறை அமலில் இருந்தது. அதையெல்லாம் உச்சநீதிமன்றம் ஆராய்ந்து பார்க்கவில்லையா, அல்லது உச்சநீதிமன்றத்தில் நமது வழக்குரைஞர்கள் தெரிவிக்கவில்லையா என்பது புரியவில்லை.
மாடுகளை வண்டியில் பூட்டி ரேக்ளா பந்தயம் நடத்த முடிகிறது. மாடுகளைக் கட்டி, சுமை வண்டியை இழுக்க வைக்கலாம். ஆனால், ஜல்லிக்கட்டு மட்டும் கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது புரியவில்லை.
விலங்குகள் வதைத் தடைச் சட்டத்தின் 22-ஆவது பிரிவில் இடம்பெறும் விலங்குகளாக கரடி, புலி, குரங்கு, சிறுத்தை, சிங்கம் ஆகியவை மட்டுமே இருந்தன. இவற்றை பொழுதுபோக்கு நிகழ்வில் காட்சிப்படுத்தவோ, அதற்கென பயிற்சி தருவதோ குற்றம். இந்தப் பட்டியலில் 2011-ஆம் ஆண்டு முதல் காளையைச் சேர்த்தார்கள். அந்த நேரத்திலேயே இதனை தமிழகம் எதிர்த்திருக்க வேண்டும். காளை இந்தியாவின் வீட்டு விலங்கு, காட்டு விலங்கு அல்ல என்பதை தெளிவாக வலியுறுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
விவரம் புரியாமல் ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளைச் சண்டைகளையும், தமிழகத்தின் ஜல்லிக்கட்டையும் இணைத்துப் பார்த்து இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று குரலெழுப்புகிறார்கள். ஸ்பெயினின் தலைநகர் மேட்ரிடில் நடைபெறுவது காளைச் சண்டை. அதன் உடலில் ஈட்டிகள் குத்தப்பட்டு காளைகள் சித்திரவதையை அனுபவித்து மடிகின்றன. அதை ஜல்லிக்கட்டுடன் ஒப்பிடுவது அபத்தம்.
மத்திய அரசு இந்த விவகாரத்தில் உண்மையான அக்கறை எடுத்துக் கொண்டிருந்தால், விலங்குகள் கொடுமைப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தின் 22-ஆவது பிரிவிலிருந்து காளை நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு, இந்த அறிவிப்பை நீதிமன்றத்தில் காட்டி தடையை நீக்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. மத்திய அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிடுவதற்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டில் காளைகள் அடக்கப்படுகின்றனவே தவிர, அடித்துத் துன்புறுத்தப்படுவதோ, ஈட்டிகளால் குத்திக் காயப்படுத்தப்படுவதோ இல்லை. குதிரைகளை மூச்சிரைக்க ஓடவிட்டு விளையாடலாமானால், காளைகளை அவிழ்த்துவிட்டு அடக்கி விளையாடக் கூடாதா?
கரடி, குரங்கு ஆகியவற்றைப் பழக்கப்படுத்தி வித்தை காட்டி காசு சம்பாதிக்கும் அற்ப விவகாரமாக தமிழர் பண்பாட்டின் அங்கமாகிய ஏறு தழுவுதலையும் சேர்த்துவிடுவது மத்திய அரசின் தவறான புரிதலா, அல்லது உச்சநீதிமன்றத்தின் தவறான புரிதலா என்பது தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆறுமுகனேரி சித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்

கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கொடை விழா

ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் வீதி உலா
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

