ஊழலுக்குக் கடிவாளம்!

நரேந்திர மோடி அரசின் பாராட்டுக்குரிய அம்சம் என்னவென்றால், முந்தைய மன்மோகன் சிங் அரசால் முன்மொழியப்பட்ட சில நல்ல திட்டங்களையும், சட்டங்களையும் கெüரவம் பார்க்காமல் நிறைவேற்ற முற்பட்டிருப்பதுதான்.
Updated on
2 min read

நரேந்திர மோடி அரசின் பாராட்டுக்குரிய அம்சம் என்னவென்றால், முந்தைய மன்மோகன் சிங் அரசால் முன்மொழியப்பட்ட சில நல்ல திட்டங்களையும், சட்டங்களையும் கெüரவம் பார்க்காமல் நிறைவேற்ற முற்பட்டிருப்பதுதான். அந்த வரிசையில் ஊழல் தடுப்புச் சட்டம்-1988 திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்திருப்பது, நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமையும்.

சட்டத் திட்டங்களில் தெளிவு இல்லாமல் இருப்பதுதான் பல விதிமுறை மீறல்களுக்கும், தவறுகளுக்கும் காரணமாக அமைகிறது. ஊழலை கொடுங்குற்றமாக மாற்றி ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்திருப்பதும், அரசு ஊழியர் பெறும் லஞ்சம் அல்லது "பெறுகின்ற ஆதாயம்' என்பவை என்னென்ன என்பதை விரிவாக வகைப்படுத்தியிருப்பதும் இந்த சட்டத்தை மேலும் வலுவுடையதாக மாற்றியிருக்கிறது.

திருத்தப்பட்டுள்ள மசோதாவின்படி, லஞ்சம் கொடுப்பவர், லஞ்சம் பெறுபவர் இருவருமே குற்றவாளி ஆகிறார்கள். இதில் லஞ்சம் தருபவர் தனக்கான நியாயங்களை அல்லது நிர்பந்தங்களைச் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது.

லஞ்சம் கொடுப்பவர், லஞ்சம் பெறுபவரிடம் நேரடியாக லஞ்சம் கொடுத்தால் மட்டுமே குற்றமாகும் என்றில்லை. மூன்றாம் நபர் மூலமாக அல்லது அவருக்குக் கீழே பணியாற்றும் ஊழியர் மூலமாக அல்லது வேறு ஆதாயங்களை அவருக்கோ அல்லது அவரைச் சார்ந்தவர்களுக்கோ கொடுத்து அல்லது ஆதாயங்களை அளிப்பதாக உறுதி கூறி அல்லது ஒரு சேவை நிறுவனம் அல்லது அதன் ஊழியர் மூலமாக லஞ்சம் அல்லது "ஆதாயத்தை'ப் பெற்றாலும், பெற்றுக்கொள்ள முயன்றிருந்தாலும் இவையெல்லாமே குற்றமாகத்தான் இந்த உத்தேச சட்டத்தின் மூலம் கருதப்படும்.

தனியார் வீட்டுமனைகள் அல்லது அடுக்ககம் ஆகியவற்றுக்கு அரசு அங்கீகாரம் பெற வேண்டுமானால், அரசு அதிகாரிகள் லஞ்சத்தைப் பணமாகப் பெறாமல், நேரடியாக அல்லது அவர்தம் உறவினர்களின் பெயரில் ஒரு மனையை அடிமாட்டு விலையில் வழங்க வேண்டும் என்கின்ற உடன்பாட்டை இன்றைய சட்டத்தின்படி லஞ்சம் என வகைப்படுத்த வழியில்லை. ஏனெனில், விலையைக் குறைப்பது அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட விருப்பம். ஓர் அமைச்சர் ஒரு தொழிற்சாலைக்கு அனுமதி அளித்து அதில் 10% பங்குகளை தன் குடும்ப அங்கத்தினர், பினாமி பெயரில் மிகக் குறைந்த விலையில் பெற்றுக் கொண்டால் அதை லஞ்சமாகக் கருதி தண்டிக்க இயலாதபடி சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன. இனி இத்தகைய "ஆதாயங்கள்' லஞ்சமாகக் கருதப்படும். பெறுபவர், தருபவர் இருவரும் தண்டனைக்குரியவர்கள்.

அதிகாரிகள் தங்கள் உறவினர் நடத்தும் நிறுவனங்களுக்கு வணிகத்தை வளர்க்கும் உறுதிகள் பெற்று, சட்டவிரோதமாக அரசுப் பணிகளை செய்து கொடுத்தாலும் அது அந்த அதிகாரி பெற்ற லஞ்சமாகக் கருதப்படும். ஆதாயத்தைக் கொடுத்து தமக்கு வேண்டியபடி விதிகளை மீறி அல்லது விதிகளுக்கு உள்பட்டு காரியம் சாதித்துக்கொண்ட நிறுவனம் அல்லது நபரும் தண்டனை பெறுவார்.

இந்தச் சட்டத்தின்படி, சாதாரண நபர்கள் மட்டுமல்ல, பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களும்கூடத் தப்பிக்க முடியாது. அந்தப் பெருநிறுவனங்கள் இந்தியாவில் வெறும் பங்குதாரராக இருந்தாலும் அல்லது கிளை வைத்திருந்தாலும் அல்லது முழுமையாக செயல்படும் நிறுவனமாக இருப்பினும் லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் தண்டனை உண்டு. இந்த நிறு

வனங்கள் தங்கள் திட்டத்துக்காக இந்தியாவில் நியமித்த முகவர் அல்லது சேவை நிறுவனம்தான் இந்த ஊழலில் ஈடுபட்டது, இதில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தப்பிக்கவோ பழியை திசை திருப்பவோ முடியாது.

தற்போது 2ஜி வழக்கில் நீரா ராடியா போன்ற சேவைத்தொடர்பு அலுவலர்கள் நடத்திய பேரம் என்று தப்பித்துக் கொள்ள முயலுவதைப் போலவோ அல்லது எனது அந்தரங்க உதவியாளர் என்னை முன்வைத்து லஞ்சம் பெற்றது எனக்குத் தெரியாது என்பதாகவோ அமைச்சர்களோ, அதிகாரிகளோ தப்பிக்க முடியாது என்பதுதான் இந்தச் சட்டத் திருத்தத்தின் மிக முக்கியமான அம்சம்.

இந்தச் சட்டத் திருத்த ஷரத்துகளை பார்க்கும்போது, இவை 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க வயல் ஒதுக்கீட்டு ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்களை மனதில் வைத்துத் திருத்தங்கள் செய்யப்பட்டதோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு கச்சிதமாக உள்ளது. சட்டத்தின் பலவீனமான ஷரத்துகள் நீக்கப்பட்டு, எங்கெங்கு சட்டத்தின் ஓட்டைகளை அடைத்து பலப்படுத்த வேண்டுமோ அங்கே சட்டத்தை விரிவாக, விளக்கமாக புகுத்தியுள்ளார்கள்.

இப்படியான கிடுக்கிப்பிடி சட்டம் உண்மையாகவே அமல்படுத்தப்படும் என்றால், இந்தியாவில் ஊழல் கணிசமாகக் குறைந்துவிடும். கடைநிலை ஊழியர்கள், 4-ஆம் நிலை ஊழியர்களால் மிகச் சிறிய அளவிலான கையூட்டு தொடர்ந்தாலும்கூட, அரசியல் தலைவர்களும் பெருநிறுவனங்களும் தங்களுக்குள் மறைமுகமாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ஆதாயம் பெறும் பெரு ஊழல்கள் மிகமிகக் கணிசமாகக் குறையும்.

லஞ்சத்தை, கருப்புப் பணத்தை ஒழிக்க, வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் வெளிநாடு சென்ற விவரங்களையும், ஒரு நபர் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்திருந்தாலும் அவற்றின் அனைத்துத் தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை அமல்படுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், எதிர்ப்பின் காரணமாக வேறு வழியின்றி அந்தப் புதிய நடைமுறையை நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு.

அதேபோல, ஊழல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கும் எதிர்ப்பு வரத்தான் செய்யும். அரசு அடிபணிந்து விடலாகாது.

அரசுக்கு ஆதரவாக மக்கள் மன்றம் குரலெழுப்புவது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com