பாதல் பதில் சொல்லட்டும்!

சகித்துக் கொள்ளவே முடியாத படுகொலை பஞ்சாபில் அரங்கேறி இருக்கிறது. இன்னும் 18 வயதுகூட ஆகாத சிறுமி ஓடும் பேருந்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, அந்தப் பேருந்திலிருந்து வெளியே தள்ளப்பட்டு இறந்திருக்கிறார்.
Updated on
2 min read

சகித்துக் கொள்ளவே முடியாத படுகொலை பஞ்சாபில் அரங்கேறி இருக்கிறது. இன்னும் 18 வயதுகூட ஆகாத சிறுமி ஓடும் பேருந்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, அந்தப் பேருந்திலிருந்து வெளியே தள்ளப்பட்டு இறந்திருக்கிறார். அவருடன் பயணித்த, அந்தக் கொடூரத்தைப் பார்த்து அதிர்ந்து போயிருந்த பெண்ணின் தாயும் ஓடும் வாகனத்திலிருந்து தள்ளப்பட்டார் என்றாலும் உயிர் பிழைத்திருக்கிறார். சம்பிரதாய அனுதாபச் செய்திகளுடன் இந்தப் படுகொலை பஞ்சாபைத் தவிர, இந்தியாவின் ஏனைய பகுதிகளில் எந்தவிதப் பாதிப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லையே, ஏன்?

பஞ்சாபிலுள்ள மோகா - பதிண்டா நெடுஞ்சாலையில் ஓடும் பேருந்தில் நடந்த இந்த அநாகரிகம், நிர்பயா சம்பவத்துக்கும், மத்திய அரசும் நீதித் துறையும் காட்டிய முனைப்புக்குப் பிறகும்கூட இந்தியாவில் நிலைமை எதுவும் மாறிவிடவில்லை என்பதைத்தான் உணர்த்துகிறது. நிர்பயா பாலியல் கொடுமைக்குப் பிறகு நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட பெண்களின் பாதுகாப்பு பற்றிய முனைப்பு, அத்துடன் முடிந்து அடங்கிவிட்டிருக்கும் அவலம்தான் இப்போது காணப்படுகிறது.

மேலைநாடுகளில் பெண்களுக்கான பாதுகாப்பு இதைவிட மோசமாக இருக்கிறது என்று சிலர் புள்ளிவிவரங்களை முன்வைத்து சமாதானப்படுத்த முற்படுகிறார்கள். புள்ளிவிவரங்கள், பஞ்சாபில் நடந்தேறி இருக்கும் படுகொலைக்குப் பதிலல்ல. பெண்களைத் தெய்வமாக வணங்கும் தேசத்தில், அச்ச உணர்வு இல்லாமல், பாதுகாப்புடன் இளம் பெண்கள் உலவ முடிவதில்லை என்கிற கசப்பான உண்மையைப் புள்ளிவிவரங்களால் மறைத்துவிட முடியாது.

ஓடும் பேருந்தில் நடந்தேறி இருக்கும் பாலியல் கொடுமையும் கொலையும் ஒருபுறம் என்றால், இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் கோணம் அதைவிடக் கேவலமானது, கண்டனத்துக்குரியது. வேடிக்கை என்னவென்றால், சிறந்த நிர்வாகத்துக்காக சமீபத்தில் விருது பெற்ற பஞ்சாப் மாநிலத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது என்பதும், இந்தச் சம்பவத்துக்கும் பஞ்சாப் முதல்வரின் குடும்பத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்பதும்தான்.

பாலியல் கொடுமை நடந்த பேருந்து பஞ்சாப் முதல்வரின் மகனும், துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதலுக்குச் சொந்தமானது. அவரது மனைவியும், மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கெüர் பாதலிடம் சம்பவம் நடந்த பேருந்து யாருக்குச் சொந்தம் என்று கேட்டபோது, ஏதும் தெரியாதவராக, "தெரியவில்லை, விசாரிக்க வேண்டும்' என்று மனசாட்சியே இல்லாமல் பதிலளிக்கிறார். இத்தனைக்கும் "நானி சான்' என்கிற பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் புரவலர் அவர்.

அவர்தான் போகட்டும், பஞ்சாப் மாநிலத்தின் காவல் துறைத் தலைவரிடம் கேட்டபோது, சம்பவத்தில் தொடர்புடைய ஆர்பிட் போக்குவரத்து நிறுவனம் யாருடையது என்பது தனக்குத் தெரியாது என்று வாய்கூசாமல் பொய்யுரைக்கிறார். இவரைப் போன்ற சிலர் காவல் துறைப் பணியின் அடையாளமான காக்கி உடைகளை அணிவதால்தான் அந்தப் பணியே கௌரவமிழந்து வருகிறது.

நல்லவேளை, 88 வயது முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்காவது நேர்மை இருந்தது. அது தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் போக்குவரத்து நிறுவனம் என்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். வருத்தமும் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பிரச்னைக்கெல்லாம் மிகப் பெரிய காரணம், பஞ்சாப் மாநிலத்தில் முறையாக சட்டம் செயல்படாததும், முதல்வர் பாதலின் குடும்பத்தினர் அரசியலிலும், வணிகத்திலும் ஈடுபடுவதும்தான். பாதல் குடும்பத்தின் போக்குவரத்து நிறுவன ஊழியர்கள், எந்தவித சட்டதிட்டங்களையும் மதிப்பதில்லை. அந்த நிறுவனத்தின் ஊர்திகளுக்கு, முறையான சோதனைகூட இல்லாமல் அனுமதியும், உரிமமும் புதுப்பிக்கப்படுகின்றன. எந்த அதிகாரியும் அவர்களைக் கேள்வி கேட்க முடியாது என்கிற நிலைமை. அத்துடன் நின்றுவிடவில்லை. பாதல் குடும்ப ஆட்சியில் அவர்களது ஆர்பிட் போக்குவரத்து நிறுவனம் அபார வளர்ச்சி அடைவதும், அரசுப் போக்குவரத்து நிறுவனம் மெல்லமெல்ல பலவீனமடைவதும் நடந்து வருகிறது.

பேருந்துப் போக்குவரத்து மட்டுமல்ல, மது விற்பனை, தயாரிப்பு, கேபிள் டிவி, தொலைக்காட்சி சேனல்கள், கனிமச் சுரங்கங்கள், திரைத் துறை என்று எல்லா வியாபாரத்திலும் பாதல் குடும்பமும், அவர்களது கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதிக்கம் செலுத்தும் நிலைமைதான் சட்டம் தன் கடமையைச் செய்யாமல் வாளாவிருப்பதற்கான முதல் காரணம்.

தில்லியில் பேருந்தில் நடந்த பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்து, இணையதள வசதியுடன் இயங்கும் எல்லா வெளிநாட்டு நிறுவனங்களையும் தடை செய்தனர். ஆனால், பஞ்சாப் முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் போக்குவரத்து நிறுவனத்தில் பாலியல் கொடுமையும், கொலையும் நடந்திருக்கிறது. அந்த நிறுவனம் ஏன் தடை செய்யப்படவில்லை? அதன் உரிமையாளர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? அரசியல் பிரமுகர்களிடம் சட்டம் தனது கடமையைச் செய்யாதா?

இதையெல்லாம் தொலைநோக்குப் பார்வையுடன் உணர்ந்திருந்த அண்ணல் காந்தியடிகள், அரசியலை சேவையாகக் கருத வேண்டும் என்று வாழ்ந்து காட்டினார். அரசியலில் இருப்பவர்களும், அவரது குடும்பத்தினரும் எந்தவித வணிகத்துடனும் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்கிற நிலை ஏற்படாதவரை, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி ஏற்படாது.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு என்பது அல்ல தீர்வு. நடந்தேறி இருக்கும் சம்பவத்துக்கு, பேருந்து உரிமையாளரான பஞ்சாப் துணை முதல்வர் கைது செய்யப்பட்டு சட்டம் தனது கடமையைச் செய்வதுதான், அரசியல் சட்டம் இந்தியாவில் செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com