பயணிகளுக்கானது அல்ல!

இரு நாள்களுக்கு முன்பு, பயணிகள் விமானக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவினை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு வெளியிட்டார். இதில் பயணிகள் நலனைவிட, விமானப் போக்குவரத்தை அதிகரிக்கவும், அதற்காக விமான நிறுவனங்களுக்கு சலுகைகளை அள்ளித் தருவதும்தான் அதிகமாக இருக்கிறது.
Updated on
2 min read

இரு நாள்களுக்கு முன்பு, பயணிகள் விமானக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவினை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு வெளியிட்டார். இதில் பயணிகள் நலனைவிட, விமானப் போக்குவரத்தை அதிகரிக்கவும், அதற்காக விமான நிறுவனங்களுக்கு சலுகைகளை அள்ளித் தருவதும்தான் அதிகமாக இருக்கிறது.
 உலகின் நான்காவது பெரிய உள்நாட்டு விமான சேவை உள்ள நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது. 2000-த்திலிருந்து 2010 வரையிலான பத்தாண்டுகளில் விமான சேவை 160% அதிகரித்திருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் துறை ஆண்டுக்கு 10 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 அதேநேரத்தில், இந்த வளர்ச்சி சமச்சீரான வளர்ச்சியாக இருக்கிறதா என்றால் இல்லை. இந்தியாவிலுள்ள 476 விமான தளங்களில் 75 மட்டுமே அன்றாட சேவைக்காகப் பயன்படுத்தப்படும் விமான நிலையங்கள். மண்டல இணைப்புத் திட்டத்தின் கீழ், விமானச் சேவை இல்லாத அல்லது சேவை குறைவாக இருக்கும் இடங்களுக்குச் செல்லும் விமானங்களுக்கு ஒரு மணி நேர விமானப் பயணத்துக்கு ரூ.2,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், அன்றாடச் செயல்பாட்டில் இல்லாத விமான தளங்களை செயல்படுத்தி, குறுகிய தொலைவு சேவைகளை அதிகரிக்கவும், விமான நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கருதுகிறது விமானத் துறை.
 விமானப் போக்குவரத்து இல்லாத அல்லது குறைவாக உள்ள விமான நிலையங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியில், சாத்திய இடைவெளியை ஈடுசெய்யும் நிதியாக ஒவ்வொரு விமான நிலையத்துக்கும் ரூ.50 கோடி செலவிடவும், இந்தத் தொகையை மத்திய, மாநில அரசுகள் 80:20 விகிதத்தில் பகிர்ந்துகொள்ளவும் இந்தக் கொள்கை வரையறுக்கிறது. மேலும், விமான எரிபொருளுக்கு மாநில அரசுகள் விதிக்கும் வரியைக் குறைக்கவும் வலியுறுத்துகிறது.
 இத்தகைய சேவை இல்லாத அல்லது சேவைக் குறைவான விமான நிலையங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமெனில், இவை அனைத்தும் சரக்குகளைக் கையாளும் விமான நிலையங்களாக மாற்றப்பட வேண்டும். உள்நாட்டுச் சரக்குகளை விரைந்து கொண்டு சேர்க்கவும், இதற்கான நேரம் மற்றும் செலவுகளைக் குறைக்கவும் உதவுவதோடு, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலை, விபத்தைக் குறைப்பதிலும் உதவியாக அமையும். சரக்கு விமானச் சேவையால் இந்த விமான நிலையங்கள் முழுமையான பயன்பாட்டுக்கு வரும்போது, மெல்ல பயணிகள் விமானச் சேவையையும் தொடங்கலாம்.
 2016, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், ஹெலிகாப்டர் ஒழுங்காற்று விதிமுறைகளை, பயணியர் விமானப் போக்குவரத்து இயக்ககம் (டி.ஜி.சி.ஏ.) வெளியிடவுள்ளது. நகரங்களிடையேயும், பெருநகரங்களுக்குள்ளாகவும், மருத்துவத்துக்காக, சுற்றுலாவுக்காக மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் சேவையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று அறிவிக்கவுள்ளனர். 5 ஆயிரம் அடிக்குக் கீழாகப் பறக்கும் ஹெலிகாப்டர்கள் விமானக் கட்டுப்பாட்டு மையத்தின் முன்னனுமதி பெறத் தேவையில்லை எனும் அளவுக்கு விதிகள் தளர்த்தப்படவுள்ளன. இவை குறித்து விமானச் சரக்கு கையாளுகை மேம்பாட்டு வாரியம் விரைவில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளது.
 ஒருபுறம் விமானச் சேவை அதிகரித்து வரும் அதே நேரத்தில், விமானங்களைப் பழுது நீக்குதல், பராமரித்தல், முழுமையான சோதனைகள் ஆகியவை இப்போது வெளிநாடுகளில்தான் நடைபெறுகின்றன. விமானங்களை இங்கேயே பராமரிப்பதற்கான சேவை மையங்கள் ஏற்படுத்தப்படவில்லை. அதேபோல, விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், பாதுகாப்புப் பரிசோதகர்கள் ஆகிய பணிகளுக்கும் போதிய மனிதவளம் நம்மிடம் இல்லை.
 விமானங்களைப் பழுது நீக்குதல், பராமரித்தல், முழுமையாகச் சோதித்துப் பார்த்தல் (எம்.ஆர்.ஓ.) ஆகியவற்றில், இந்தியாவை ஆசிய மையமாக மாற்ற முனையும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை, ஏராளமான சலுகைகளை அள்ளி வழங்கியுள்ளது. இதற்காக இறக்குமதி செய்யப்படும் உதிரிப்பாகங்களுக்கு வரி கிடையாது. இந்த நோக்கத்துக்காக வெளிநாட்டிலிருந்து வரும் விமானம், டி.ஜி.சி.ஏ. அனுமதி இல்லாமலேயே ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் இருக்கலாம். இதுபோன்று நிறைய சலுகைகள்.
 இப்போதைய நிலையில், குறைந்தது 20 விமானங்களும், ஐந்தாண்டுகள் தொடர்ந்து உள்நாட்டுச் சேவையில் அனுபவமும் இருந்தால் மட்டுமே வெளிநாடுகளுக்குப் பயணிகள் விமானம் செலுத்த உரிமம் வழங்கப்படுகிறது. இதில் எந்தவித மாற்றமோ, தளர்வோ ஏற்படுத்தாத நிலையில், புதிய நிறுவனங்கள் பன்னாட்டு விமான சேவையில் ஈடுபட வழிவகை செய்யப்படவில்லை. செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களும் பெரிய அளவில் முதலீடு இல்லாமல் இருக்கும் நிலையில், பன்னாட்டு விமான சேவையின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்படும் என்பதை ஏனோ கருத்தில் கொள்ளவில்லை.
 விமான நிறுவனங்களே அதிகச் சலுகைகளை விரித்துச் செல்லும் விமானக் கொள்கை, பயணிகளுக்கான வசதியை கட்டாயமாக்குதல், கட்டணத்தை சீர்மை செய்தல், பாதுகாப்பான பயணம், விபத்துக் கால நடவடிக்கை, பயணிகளுக்கான இழப்பீடு என பல விவகாரங்களைப் பேசாமல் மவுனமாகக் கடந்துவிடுகிறது.
 பயணிகள் விமானக் கொள்கையின் வரைவு பல முக்கியமான பிரச்னைகளை அணுகாமலே விட்டிருக்கிறது. இறுதியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதைப் பொருத்துத்தான் விமானத் துறையின் வளர்ச்சி பற்றிக் கணிக்க முடியும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com