அன்னியமல்ல, அன்னிய முதலீடு!

பதினைந்து தொழில் பிரிவுகளில் அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்தப் புதிய விதிமுறைத் தளர்வுகளால் அதிகம் பயன்பெறப் போகின்றவை கட்டுமானத் தொழில், விமானப் போக்குவரத்து, தனியார் வங்கி, ஒற்றை வணிகமுத்திரைப் பொருள் விற்பனை அங்காடி ஆகியவைதான்.
Updated on
2 min read

பதினைந்து தொழில் பிரிவுகளில் அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்தப் புதிய விதிமுறைத் தளர்வுகளால் அதிகம் பயன்பெறப் போகின்றவை கட்டுமானத் தொழில், விமானப் போக்குவரத்து, தனியார் வங்கி, ஒற்றை வணிகமுத்திரைப் பொருள் விற்பனை அங்காடி ஆகியவைதான்.
 ÷சிலவற்றுக்கு முதலீட்டுக்கான அதிகபட்ச அளவை உயர்த்தவும், சிலவற்றில் நிபந்தனைக்கு உள்பட்டு உயர்த்தலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்தந்த நிறுவனத்தின் தன்மை, அவர்கள் முன்வைக்கும் கருத்துரு, எத்தனை ஆண்டுகள் அத்தொழில் இந்திய மண்ணில் நீடிக்கும் என்பதைப் பொருத்து, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன்தான் முதலீட்டு அளவுகளை அனுமதிப்பதில் மாறுபாடு இருக்கும்.
 ÷தனியார் வங்கிகளில் அன்னிய நேரடி முதலீடு என்பது 49% ஆக இருந்தது. ஆனால், தற்போது இதனை 74% வரை அனுமதிக்கலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரே நிபந்தனை: வங்கியின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டாளர் மாறக் கூடாது. இன்னும்கூட கூடுதல் நிபந்தனைகளை அரசு விதித்திருக்கலாம். இந்த 74% நிதியை அவர்கள் இந்திய வளர்ச்சித் திட்டங்களுக்காக எவ்வளவு சதவீதத் தொகையைக் கடனாக அளிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தை உருவாக்கியிருக்கலாம்.
 ÷தேயிலைத் தோட்டத் தொழிலுக்கு மட்டுமே இதுவரை 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இப்போது காப்பி, தேயிலை, ரப்பர், ஏலக்காய், செம்பனை எண்ணெய் என தோட்டத் தொழில்கள் அனைத்துக்குமே 100% அன்னிய நேரடி முதலீடு சாத்தியமாகியுள்ளது. மேலே குறிப்பிட்ட தோட்டத் தொழில்கள் அதிக லாபகரமாக இல்லாத நிலைமை. இந்த நிலையில், 100% அன்னிய நேரடி முதலீட்டு அனுமதி என்பது, பன்னாட்டுக் கூட்டாண்மை நிறுவனங்கள் இந்தத் தோட்டத் தொழில்களை வாங்க வழிவகுக்கும். அதனால் உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்பது அரசின் எதிர்பார்ப்பாக இருக்கலாம்.
 ÷பல்பொருள் சில்லறை அங்காடிகளில் அன்னிய முதலீட்டுக்குப் பெரும் எதிர்ப்பு உள்ள நிலையில், ஒற்றை வணிக முத்திரைப் பொருள் விற்பனையில் சில்லறை மற்றும் மொத்த வணிகத்தில் 100% வரை அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளனர். இதனால், பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நகரங்கள் அனைத்திலும், ஆடை, காலணிகள், கணினி, செல்போன் விற்பனையில் ஒற்றை வணிக முத்திரை கொண்ட கடைகளை விரிக்கக் கூடும். "வால்மார்ட்' வராது. அதன் வால்கள் ஆங்காங்கே தலைதூக்கும்.
 ÷அரசின் அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைத் தளர்வால் மிகப்பெரும் பயன் அடையும் தொழில் கட்டுமானத் துறைதான். இத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான பல விதிமுறைகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டன. குறைந்தபட்சம் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடங்கள் கட்ட வேண்டும். முதல் 6 மாதங்களுக்குள் 50 லட்சம் அமெரிக்க டாலர் நிதியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். ஒரு கட்டுமானப் பணியை முடித்து, இந்தியாவை விட்டு வெளியேறக்கூடும் என்றால், அதற்கான கால அளவு என எல்லாவற்றிலும் சமரசம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.
 ÷பொலிவுறு நகரம் அமைத்தல், அமிருத் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம் ஆகியவற்றை விரைந்து முடிக்க இத்தகைய விதித்தளர்வு இருந்தால் மட்டுமே அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என்று அரசு கருதுகிறது. அதுமட்டுமல்ல. கட்டுமானத் தொழிலின் வளர்ச்சி என்பது அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்திப் பொருளாதாரத்தை முடுக்கிவிடக் கூடியது. ஏழைகளுக்குக் குறைந்த விலையில் 5 கோடி வீடுகள் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட அன்னிய முதலீடு அவசியம் என்றுகூட அரசு கருதியிருக்கலாம்.
 ÷திட்டங்களை விரைந்து அனுமதிக்க, அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அதிகார வரம்பு ரூ.3,000 கோடியிலிருந்து ரூ.5,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அமைச்சரவையின் ஒப்புதலுக்காக ரூ.5,000 கோடி வரையிலான அந்நிய நேரடி முதலீடுடன் தொடங்கப்படும் தொழில்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
 ÷இந்தியாவின் வளர்ச்சி 7.5% என உலக வங்கி உறுதி கூறியதுடன், தொழில்புரிதல் எளிதான நாடுகளின் பட்டியலில் இந்தியாவை 142-ஆவது இடத்திலிருந்து 130-ஆவது இடத்துக்கு உயர்த்தியுள்ளது. சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தனது அறிக்கையில் தொழில் முதலீட்டுக்கு சிறந்த நாடு இந்தியா என்று கூறி இருக்கிறது. ஆனாலும்கூட, 189 உலக நாடுகளின் பட்டியலில் உள்ள 8 தெற்காசிய நாடுகளில், அனுமதிகளைப் பெறுவதிலும், வணிக ரீதியிலான பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் நம்மைவிட வங்கதேசம் மட்டும்தான் மோசமாக இருப்பதாக அதே அறிக்கை கூறுகிறது. இந்தியாவைவிடச் சிறிய நாடுகளான இந்தோனேசியாவும், இலங்கையும்கூட நம்மைவிட முதலீட்டுக்கு சாதகமான நாடுகளாகக் கருதப்படுகின்றன.
 ÷நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, 1991-இல் அன்றைய நரசிம்ம ராவ் அரசு பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் அன்னிய முதலீடுகளுக்கும், பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கும் கதவைத் திறந்துவிட்டுவிட்டது. தொடர்ந்து அமைந்த அரசுகள் அனைத்துமே அந்தக் கொள்கையைக் கடந்த 25 ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகின்றன. முழுக்க முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பதுபோல, இனியும் அன்னிய முதலீடுகளுக்கு எதிராகக் கூக்குரல் எழுப்புவதில் அர்த்தமில்லை.
 ÷பிகார் தேர்தல் தோல்வியால் துவண்டுவிடாமல் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி மத்திய அரசு அக்கறை காட்டுகிறது என்பதே கூட ஆறுதலான செய்திதான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com