தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜேக்டோ) அறிவித்தபடி அக்டோபர் 8-ஆம் தேதி வேலைநிறுத்தம் நடந்தது. இதில் சராசரியாக 60% - 65% ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. இந்தப் போராட்டத்தில் பங்குகொண்டவர்களில் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களே அதிகம் என்பதால், இப்பள்ளிகளுக்கு வந்திருந்த மற்ற ஆசிரியர்களைக் கொண்டு இந்த ஒரு நாளைக் கல்வித் துறை சமாளித்துவிட்டது.
இந்தப் போராட்டம் நியாயமற்றது என்றும், இது அரசியல் சாய்வு கொண்டது என்றும், இந்த வேலைநிறுத்தத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அரசு மற்றும் ஆசிரியர் அமைப்புகளை நீதிமன்றம் அக்டோபர் 7-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், வேலைநிறுத்தம் நடக்கவே செய்தது.
ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதும், அடையாள உண்ணாவிரதம் இருப்பதும், விடைத்தாள் திருத்தும் காலங்களில் பணிச்சுமை மற்றும் விடைத்தாள் திருத்துவதற்கான ஊதியத்தை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கூட்டம் நடத்துவதும் எப்போதுமே இயல்புதான். ஆனால், பள்ளிக்குச் செல்லாமல், மாணவர், மாணவியரை வகுப்பில் தனித்துவிடும் அளவுக்கு வேலைநிறுத்தம் செய்வது அரிதிலும் அரிது.
இந்த வேலைநிறுத்தத்துக்கு அத்தகைய அரிய காரணம், தேவைதான் என்ன?
தமிழகம் முழுவதும் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்குக் கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க வேண்டும் என்று இவர்கள் கோரவில்லை. தங்கள் மாணவர்களுக்கு கழிப்பறை வசதி அமைத்துக் கொடுக்காமல் உள்ளே நுழைய மாட்டோம் என்று போராடவில்லை. அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்க உத்தரவிடவேண்டும், அப்போதுதான் மக்கள் தனியார் பள்ளிகளை நாடாமல் அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்கள் என்று போராடவில்லை. தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி பயிலச் செய்யாத அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதியற்றவர்கள் என்று சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதற்காகப் போராடவில்லை.
கூட்டமைப்பு தெரிவித்துள்ள 15 கோரிக்கைகளில் மையப்படுத்துவது இரண்டு கோரிக்கைகள்தான்: மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர் நியமனத்தில் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
கல்வியியல் கல்லூரிகளில், வகுப்புக்கு வராமலேயே பலர் தேர்வு எழுதி, பி.எட். சான்று பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது குறித்துப் பல கட்டுரைகள் வெளியான பின்பும்; எந்த மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றனவோ அந்த மாவட்டத்தில் வசிப்பதாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போலி முகவரி கொடுத்த மோசடிகள் அம்பலமான பிறகும்; ஆசிரியர் நியமனங்களில் தகுதியில் சமரசம் செய்வது அநீதி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையிலும்கூட, தகுதித் தேர்வு தேவையில்லை என்று சொல்வது எந்த அளவுக்குச் சரியான கோரிக்கை என்பதைப் போராட்டம் நடத்தும் அமைப்புகள் சிந்திக்கக் கடமைப்பட்டவை.
அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை ஆண்டுதோறும் சரிந்து வரக் காரணம், அவற்றின் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் கற்பிக்கவில்லை என்பதும், அவர்கள் சம்பளத்துக்காக பள்ளிக்கு வந்துபோகிறார்கள் என்ற கருத்தும்தானே! மக்கள் மனதில் உள்ள அந்தக் கருத்தை உடைக்க வேண்டுமானால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்ய வேண்டியது கற்பித்தலை மேம்படுத்துவதும், அர்ப்பணிப்புடன் சொல்லித் தருவதும்தானே!
புத்தாக்கப் பயிற்சி மூலம் தகுதிகளை உயர்த்தும் வழிமுறை காணாமல், தங்கள் பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டு, அரசுப் பள்ளிகளில் அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமல் பாடம் நடத்துவது ஏன்? தங்கள் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படித்தால் அவர்களுக்கு வருங்காலம் இருக்காது என்று கருதுகிறீர்களா? இலவசக் கல்விக்காக வரும் ஏழைகளுடன் தங்கள் குழந்தைகள் அமரக் கூடாது என்ற பொருளாதாரத் தீட்டு காரணமா? எதனால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளையே தங்கள் பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள்? இப்படி இருந்தால், மக்களுக்கு எப்படி அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை வரும்? அரசுப் பள்ளியில் தங்களது குழந்தைகளை எப்படி சேர்ப்பார்கள்?
மத்திய அரசுக்கு இணையான சம்பளம் கோருவது நியாயம்தான். ஆனால், மத்திய அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் கல்வியின் தரம் என்ன? மத்திய அரசின் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அகில இந்தியத் தேர்வுகளில் பங்குகொண்டு இந்தியா முழுவதிலும் உயர் கல்வியைத் தொடர முடிகிறது. ஆனால், தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களில்கூட மிகச் சிலரே தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் சாதிக்க முடிகிறது என்பதையும், பொதுத் தேர்வுகளில் எளிமையான வினாத்தாள், கருணை மதிப்பெண் மூலம்தான் அரசுப் பள்ளி மாணவர்களைக் கௌரவத்துக்காக காப்பாற்ற வேண்டியிருக்கிறது என்ற சுடுகின்ற உண்மையையும் அறியாதவர்களா தமிழக ஆசிரியர்கள்!
முதலில் அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை அழைத்து வாருங்கள். மாணவர்கள் கிடைக்காமல் தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றாக நட்டத்தில் மூடும்படியான நிலைமைக்கு மாற்றுங்கள். முன்மாதிரியாக உங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து, அர்ப்பணிப்புடன் சிறப்பான கல்வியைக் கொடுங்கள். தமிழகம் முழுவதும் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி கிடைக்கட்டும். அதன் பிறகு சலுகைகள் கேளுங்கள். தமிழகமே உங்களுக்குப் பின்னால் நிற்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

